ஹைக்கூ எனும் சொல் இன்று கவிஞர்களிடையே மிகப் பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கியிருக்கிறது.
மூன்றடிகளில் எழுதப்படும் இதன் எளிய தோற்றமும்..உள்ளார்ந்த பொருள் வெளிப்பாடும்..கவிஞனோடு வாசகனையும் தன்பால் ஈர்க்கின்ற ஆற்றலும் ஹைக்கூவை பலரும் எழுதவும்..ரசிக்கவும் செய்திருக்கிறது.
அதுமட்டுமல்ல ஹைக்கூ கவிதைகள் பலரால் இன்று ஆய்வுகளுக்கு எடுத்துக் கொள்ளப் படுகிறது..ஒரு புதிய கவிஞரின் முதல் தொகுப்பு ஹைக்கூவாகவே இருக்கிறது..ஹைக்கூ சின்னதாய் தோற்றமளிக்கும் பெரிய அற்புதம்..
அத்தகைய ஹைக்கூவை எழுதுகின்ற கவிஞர்களுக்கு இக்கட்டுரை சிறப்பான பல நல்ல வழிகளை காட்டி நகரும் என எண்ணுகிறேன்.
01.
ஹைக்கூ..இந்த வார்த்தை கவிஞர்களை கட்டிப்போடும் ஒரு மந்திரச் சொல்லாகிப் போனது இன்று.
ஹைக்கூவின் பிறப்பிடம்.. ஜப்பான்.
உலகில் மொழிக்கென சங்கம் வைத்து வளர்ந்த மொழிகள்.. தமிழும்.. பிரெஞ்சும்.
பெரும் பாலான மொழிகளுக்கு உயரிய மரபு சார்ந்த இலக்கண வரம்பு உண்டு.
இலக்கணம் சார்ந்த கவிதைகளே காலத்தை வென்று நிற்பவை.
ஜப்பான் இலக்கிய வரலாற்றையும் ஆறு பெரும் பிரிவுகளாக பிரிக்கலாம்.
01. நாராக்காலம் (கி.பி.700 – 794)..
இக்காலத்தில் சோக்கா எனும் கவிதை வடிவம் தோன்றியது.முதலிரண்டு அடி 5, 7 அசையமைப்பிலும் இறுதி அடி 7, 7 அசை அமைப்பிலும் வரிவரம்பில்லாது பாடப்பட்ட கவிதை இது.
02. ஹயன் காலம் (கி.பி.794 – 1192)
சோக்கா கவிதை இக்காலத்தில் தன்கா என மாற்றம் பெற்றது. வரிவரம்பில்லாத பெரிய கவிதையாக இருந்த சோக்கா 5 அடிகள் கொண்டதாகவும் 5, 7, 5, 7, 7 அசையமைப்பிலும் மாற்றம் பெற்றது.
03. காமெக்கூரா காலம் (கி.பி.1192 – 1332)
இக்காலத்தில் கடின இலக்கிய வரம்புடன் ஜாக்கின்சூ எனும் செய்யுள் வடிவம் தோன்றியது.
04. நான்போக்குசாக் காலம் (கி.பி.1332 – 1603 )
இக்காலக்கட்டத்தில் நோஹ எனும் இசை நாடக கவிதையாக சமுதாயம் சார்ந்து பாடப்பட்டது.
05. எடோக் காலம் (கி.பி.1603 -1863 )
இக் காலத்தில் தான் சீன- ஜப்பானிய மொழி கலவையாக இன்றைய ஹைக்கூவிற்கு அச்சாரம் போடப் பட்டது எனலாம்.5, 7, 5 அசையமைப்பில் மூன்று அடிகளில் கவிதை பிறந்தது.
06. டோக்கியோ காலம் (கி.பி.1865 க்கு பிறகு…)
ஹைக்கூ வந்த புதிதில் ஹொக்கு என்றே அழைக்கப் பட்டது. பின் ஹைகை என திரிந்து பின்னரே ஹைக்கூ என வழங்கப்பட்டது.
ஹைக்கூ என்றால் அணுத்தூசி, அணுத்துகள் என்று பெயர்.
மூன்று அடிகளில் பல கருத்துக்களையும்..காட்சிகளையும் உள்ளடக்கி இருப்பதனால் அவ்வாறு அழைக்கப்பட்டது. இங்கு நமது திருக்குறள் குறித்து ஔவையார் சொன்ன கருத்தையும் ஒப்பிட்டு பாருங்கள்..தமிழுக்கு திருக்குறள் அணு என்றால்… ஜப்பானுக்கு ஹைக்கூ அணு.
ஜப்பான் இலக்கிய மரபில் இன்று வரை கோலோச்சிக் கொண்டிருக்கும் ஹைக்கூவின் துவக்கக் கால கவிஞர்கள் என அறியப் படுபவர்கள் மோரிடேகே (கி.பி.1473-1549) அவருடன் இணைந்து சோகன் ( கி.பி.1465 – 1553) ஆகியோரே..
இவர்களுக்கு பின்னரே..
ஹைக்கூவின் முன்னோடிகள் என அழைக்கப்படும் நால்வர்..
1. மட்சுவோ பாஸோ (கி.பி.1644 – 1694)
2. யோசா பூஸன் ( கி.பி.1716 – 1784)
3. இஸ்ஸா (கி.பி.1763 – 1827)
4. ஷிகி (கி.பி.1867 – 1902)
தங்களது கவிதைகளால் பெரும் புகழ் பெற்றனர்.. இவர்களில் பாஸோ ஹைக்கூவின் பிதாமகனாய் கருதப் படுகிறார்.
இவரது கவிதை ஒன்று உங்களின் பார்வைக்கு…
ஆண்டு இறுதிச் சந்தை
அங்கே சென்று வாங்குவேன்
ஊதுவத்திக் கட்டு..!
மேலோட்டமாக பார்த்தால்.. இதிலென்ன பிரமாதம் உள்ளது என எண்ணத் தோன்றும்.. ஆனால் ஆழ்மனத் தியானத்தை விரும்புபவன் எந்த கூச்சலையும் பொருட்படுத்த மாட்டான்..அவனுக்கு ஆழ்ந்த அமைதியும் ஒன்றே.. ஆர்ப்பரிக்கும் சத்தமும் ஒன்றே..தனது தியானத்திற்காக கூச்சல் நிரம்பி வழியும் சந்தையில் போய் ஊதுவத்தி வாங்கும் ஜென் நிலை அந்த கவிதையில் மேலோங்கி நிற்கும். இத் தொடரில் அவ்வப்போது சிலரது கவிதையையும் உங்களுக்கு காட்சி படுத்துகிறேன். ஹைக்கூ பிறந்த விதமறிந்த நீங்கள்…. இந்தியாவில் ஹைக்கூ நுழைந்த விதமறிய பொறுத்திருங்கள்.
3 Comments
அனுராஜ் · ஜூன் 7, 2019 at 10 h 53 min
எனது ஹைக்கூ ஓர் அறிமுகத்தை… அறிமுகப்படுத்தும் விதமாய் தங்களது தமிழ்நெஞ்சமதில் வெளியிட்டு எனது நெஞ்சை கவர்ந்து வீட்டீர்.. வாழ்த்தும்.. நன்றியும்.
அனேக ப்ரியங்களுடன்..
அனுராஜ்..
க.ரபிந்தர்நாத். · ஜூன் 18, 2019 at 5 h 28 min
அருமை ஐயா நல்ல விளக்கம் ஹைக்கூவை பற்றி இளம் கவிஞர்கள் அறிந்துகொள்ள.இன்னும் வரவேற்கிறோம்.
Viji Senthil · செப்டம்பர் 26, 2024 at 9 h 32 min
அறுபதில் இருந்து பின்னோக்கி வாசித்துக் கொண்டிருந்தேன். முதல் பகுதியை தேடி வந்தேன்….
Comments are closed.