பாடல் – 96
கொண்டான் குறிப்பறிவாள் பெண்டாட்டி கொண்டன
செய்வகை செய்வான் தவசி கொடிதொரீஇ
நல்லவை செய்வான் அரசன் இவர்மூவர்
பெய்யெனப் பெய்யும் மழை.
(இ-ள்.) கொண்டான் – கொண்ட கணவனுடைய, குறிப்பு அறிவாள் – குறிப்பறிந்து நடக்கின்றவள், பெண்டாட்டி – மனைவியாவாள் : கொண்டன – தான் மேற்கொண்ட விரதங்களை, செய்வகை – செய்யும் முறைப்படி, செய்பவன் – செய்பவன், தவசி – தவசியாவன்; கொடிது – தீங்கினை, ஒரீஇ – நீக்கி, நல்லவை – (குடிகளுக்கு) நன்மையானவற்றை, செய்வான் – செய்பவன், அரசன் – அரசனாவான்; இவர் மூவர் – ஆகிய இவர் மூவரும், பெய் என – (மழையைப்) பெய் என்றுசொல்ல, மழைபெய்யும் – மழை பொழியும்; (எ-று.)
(க-ரை.) குறிப்பறிந்து நடக்கும் பெண்டாட்டியும் நோன்புகளை முறைப்படி நடத்துகிற தவசியும், குடிகளுக்குத் தீமையை விலக்கி நன்மையைச் செய்கின்ற அரசனும் உள்ள இடத்தில் மழை தவறாது பெய்யும் என்பது.
பெண்டு ஆட்டி – பெண்டு ஆம் தன்மையை ஆளுபவள், தவசி செய்கையாவன : மனம் பொறிவழியிற் போகாமல் நிற்றற் பொருட்டு நோன்புகளால் உண்டி சுருக்குதல், மழை பனி நீர் நிலை வெயில் இவற்றில் நிற்றல் முதலியவைகளை மேற்கொண்டு, அவற்றால் தமக்கு வரும் துன்பங்களைப் பொறுத்தல்.