தொடர் 19

வெண்பாதான் கடினம் என்று புலவர்கள் சொல்வதுண்டு. வெண்பாவில் சிறப்பாக எழுதுபவர்களை வெண்பாப் புலி என்றும் அழைக்கப்படுவார்கள். நிறைய தமிழ் நூல்கள் வெண்பாவில் புனையப் பட்டுள்ளன. நீங்களும் இப்போது வெண்பா எழுத முற்பட்டிருப்பீர்கள் எனக் கருதுகிறேன்.

இப்போது வெண்பாவுக்கு அடுத்த பாவினமான ஆசிரியப்பாவைக் காண்போம்.ஆசிரியரைப் போலவே இது கற்றுக் கொள்ளவும் கற்பிக்கவும் எளிய பாவகை. பேசுவது போலவே இருக்கும்.

சங்க காலப் பாடல்களில் பெரும்பாலானவை ஆசிரியப்பா வகையைச் சார்ந்தவையே. இந்த ஆசிரியப்பாவிலும் பல வகைகள் உண்டு. அவற்றை ஒவ்வொன்றாகக் காண்போம்.

நேரிசை ஆசிரியப்பா
இணைக்குறள் ஆசிரியப்பா
நிலைமண்டில ஆசிரியப்பா
அடிமறி மண்டில ஆசிரியப்பா

நேரிசை ஆசிரியப்பா

விதிகள்

சீர்கள்
ஈரசைச்சீர்களால் ஆனது
எங்காவது ஒரு சில இடங்களில் காய்ச்சீர் வரலாம்

அடிகள்

அளவடிகளால் ஆனது
( அளவடி – நான்கு சீர்களைக் கொண்டது)
ஈற்றயலடி மட்டும் மூன்று அடிகளால் ஆனது
அதாவது இறுதி அடிக்கு முந்தைய அடி 3 சீர்களாலும் ஏனைய அடிகள் 4 சீர்களாலும் ஆனது.
ஈற்றடியின் ஈற்றுச்சீர் ஏகாரத்தில் நிறைவு பெறுதல் சிறப்பு
அடிகள் வரையறை இல்லை
எத்தனை அடிகள் வேண்டுமானாலும் எழுதலாம்.

தளை

நேரொன்றிய ஆசிரியத்தளை
நிரையொன்றிய ஆசிரியத்தளை.
இரண்டும் கலந்தது
ஒன்றாத ஆசிரியத்தளை

எதுகை – மோனை

அடுத்தடுத்த அடிகளுக்கு அடிஎதுகை
ஒன்று மூன்று பொழிப்பு மோனை

எ- டு

உலக மாந்தர் உடன்பிறப் பன்றோ
கலகம் செய்யும் கசடுகள் ஒழிக
மதத்தின் பேரால் மாபெரும் சண்டை
விதவித மாக வீண்சச் சரவு
கவனக் குறைவு கசப்பினைத் தருமே
புவனப் பார்வை பொலிவை மாற்றும்
நெறிகள் மாறின் நிம்மதி போகும்
வெறியோ கூடி வேதனை நல்கும்
நாட்டுப் பற்றை நாமும்
பாட்டு வழியே பறைசாற் றுவோமே!

இணைக்குறள் ஆசிரியப்பா

இது மிகவும் அருமையான ஆசிரியப்பா

இப்போது நாம் புதுக்கவிதை என எழுதுவதையெல்லாம் இப்பாவகையில் எழுதலாம். இப்பாவகையில் நான் 25 வருடங்களுக்கு முன்பு எழுதி பிரபல வாரஇதழில் புதுக்கவிதையதகவே வெளிவந்தது.

விதிகள்

சீர்கள்
ஈரசைச்சீர்களால் ஆனது
எங்காவது ஒரு சில இடங்களில் காய்ச்சீர் வரலாம்

அடிகள்

முதல் மற்றும் இறுதி அடிகள் 4 சீர்களைக் கொண்டும் ஏனைய இடைப்பட்ட அடிகள் இரண்டு அல்லது மூன்று சீர்களைக் கொண்டும் இருக்கும்.ஈற்றடியின் ஈற்றுச்சீர் ஏகாரத்தில் நிறைவு பெறுதல் சிறப்பு
அடிகள் வரையறை இல்லை
எத்தனை அடிகள் வேண்டுமானாலும் எழுதலாம்.

தளை

நேரொன்றிய ஆசிரியத்தளை
நிரையொன்றிய ஆசிரியத்தளை.
இரண்டும் கலந்தது
ஒன்றாத ஆசிரியத்தளை

எதுகை – மோனை

அடுத்தடுத்த அடிகளுக்கு அடிஎதுகை
ஒன்று மூன்று பொழிப்பு மோனை
இருப்பின் சிறப்பு

எ-டு

1.

இமய மல்ல என்றா லும்நான்
மலையின் சாதி
எத்தனை இடர்கள்
எதிர்ப்படின் என்ன
அவற்றை எதிர்க்கும் உறுதி உண்டு

2.

கங்கை அல்ல என்றா லும்நான்
நதியின் சாதி
எத்தனை அழுக்குகள்
என்னுள் கலப்பினும்
அவற்றைக் களைந்திடும் புனிதம் உண்டு

3.

ஆயிரம் மதங்கள் ஆயிரம் சாதி
ஆயிரம் பழக்க வழக்கம்
ஆயிரம் இருந்தென் என்ன
தாயினும் மேலாய்
நாட்டை நேசி
நாட்டுப் பற்றே நமையும் வளர்க்குமே!

நிலைமண்டில ஆசிரியப்பா

விதிகள்

சீர்கள்
ஈரசைச்சீர்களால் ஆனது
எங்காவது ஒரு சில இடங்களில் காய்ச்சீர் வரலாம்

அடிகள்

அளவடிகளால் ஆனது
(அளவடி – நான்கு சீர்களைக் கொண்டது)
அனைத்து அடிகளும் 4 சீர்களைக் கொண்டவை
ஈற்றடியின் ஈற்றுச்சீர் ஏகாரத்தில் நிறைவு பெறுதல் சிறப்பு
அடிகள் வரையறை இல்லை
எத்தனை அடிகள் வேண்டுமானாலும் எழுதலாம்.

தளை

நேரொன்றிய ஆசிரியத்தளை
நிரையொன்றிய ஆசிரியத்தளை.
இரண்டும் கலந்தது
ஒன்றாத ஆசிரியத்தளை

எதுகை – மோனை

அடுத்தடுத்த அடிகளுக்கு அடிஎதுகை
ஒன்று மூன்று பொழிப்பு மோனை

எ- டு

உலக மாந்தர் உடன்பிறப் பன்றோ
கலகம் செய்யும் கசடுகள் ஒழிக
மதத்தின் பேரால் மாபெரும் சண்டை
விதவித மாக வீண்சச் சரவு
கவனக் குறைவு கசப்பினைத் தருமே
புவனப் பார்வை பொலிவை மாற்றும்
நெறிகள் மாறின் நிம்மதி போகும்
வெறியோ கூடி வேதனை நல்கும்
நாட்டுப் பற்றை நாமும் வளர்த்தே
பாட்டு வழியே பறைசாற் றுவோமே!

அடிமறி மண்டில ஆசிரியப்பா

விதிகள்

சீர்கள்
ஈரசைச்சீர்களால் ஆனது
எங்காவது ஒரு சில இடங்களில் காய்ச்சீர் வரலாம்

அடிகள்

அளவடிகளால் ஆனது
(அளவடி – நான்கு சீர்களைக் கொண்டது)
அனைத்து அடிகளும் 4 சீர்களைக் கொண்டவை
ஒவ்வொரு அடியின் ஈற்றுச்சீரும் ஏகாரத்தில் நிறைவு பெறுதல் சிறப்பு
அடிகள் வரையறை இல்லை
எத்தனை அடிகள் வேண்டுமானாலும் எழுதலாம்.

தளை

நேரொன்றிய ஆசிரியத்தளை
நிரையொன்றிய ஆசிரியத்தளை.
இரண்டும் கலந்தது
ஒன்றாத ஆசிரியத்தளை

எதுகை – மோனை

அனைத்து அடிகளுக்கும் ஒரேஎதுகை வருதல் நலம்
ஒன்று மூன்று பொழிப்பு மோனை

குறிப்பு :

அடிகளை மாற்றிப் போட்டாலும் பொருள் மாறக் கூடாது

எ-டு

கற்றுத் தெளிவோம் கற்பதைக் கற்றே
பெற்றுத் தெளிவோம் பெறுவதைப் பெற்றே
உற்றுத் தெளிவோம் உழைப்பதைக் கண்டே
தற்பெரு மைதனைத் தகர்த்து வீசியே
பொற்குட மாக பொலிந்துயர் வோமே
ஒற்றுமைப் பண்பை ஓங்கி வளர்த்தே
வெற்றியை நாளும் விரும்பி வளர்வமே

ஆசிரியப்பாவின் வகைகளைப் பார்த்து விட்டோம்

அடுத்து வேறு பாவகைகளைக் காண்போம்


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

அறிமுகம்

கவிஞரேறு வாணிதாசன்

வாணிதாசன் பிரபல தமிழ்க் கவிஞர். தலைசிறந்த தமிழ்க் கவிஞர்களில் ஒருவரும் பாவேந்தர் பாரதிதாசனின் மாணவருமான வாணிதாசன் நினைவு  தினமாக  ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 7 ல் கொண்டாடப்பட்டு வருகிறது.

புதுவை மாநிலத்தின் வில்வ நல்லூர் என அழைக்கப்பட்ட இன்றைய வில்லியனூரில் 22.

 » Read more about: கவிஞரேறு வாணிதாசன்  »

அறிமுகம்

வாழ்வி(ய)ல் வசந்தம்!

உள்ளிழுத்து வெளிவரும் – என்
உஷ்ண மூச்சுக் காற்று
இதயத்தின் ரணங்களை
மொழிபெயர்க்கும்!

என் வீட்டு ஜன்னல் கதவு
என் மன ஓலத்தை எதிரொலிக்க
ஒத்தாசை புரியும்!

 » Read more about: வாழ்வி(ய)ல் வசந்தம்!  »

ஆன்மீகம்

வாரியார் படைப்பில், வாழ்வியல் நெறிகள்.

“அன்பால் அறிவால் அகங்குளிரும்
அமுதமொழியால் அனைவரையும்”

தன்பால் ஈர்க்கும் தகைமிகு பேச்சாளர், நல்ல எழுத்தாளர், மூதறிஞர், சித்திரகவி பாடிய கவிஞர், முத்தமிழ் அறிஞர், ஆன்மீகச் செம்மல் என்று அடுக்கிக் கொண்டே போகக்கூடிய வல்லமை பெற்ற வாரியார் சுவாமிகளின் நூல்களைப் படிக்கும் பொழுது தனிப்பெரும் இன்பம் தன்னால் வருவதை நாம் உணர முடியும்.

 » Read more about: வாரியார் படைப்பில், வாழ்வியல் நெறிகள்.  »