தொடர் 18

வெண்பா வகைகளில்

குறள் வெண்பா
சிந்தியல் வெண்பா
நேரிசை வெண்பா
இன்னிசை வெண்பா
நேரிசை பஃறொடை வெண்பா
இன்னிசை பஃறொடை வெண்பா

ஆகியவற்றை இதுவரைக் கண்டோம்.

இப்போது மற்றவற்றைக் காண்போம்.

கலிவெண்பா

இது 12 அடிகளுக்கு அதிகமாக உள்ள வெண்பா ஆகும். இதுவும் நேரிசை கலிவெண்பா மற்றும் இன்னிசை கலிவெண்பா என இரண்டு வகைகள் உண்டு.

அடுத்தடுத்த இரண்டு அடிகளில் ஓரெதுகை மற்றும் இரண்டாவது அடியின் நான்காம் சீரில் தனிச்சொல் பெற்று வந்தால் நேரிசை கலிவெண்பா.

தனிச்சொல் வரவில்லை என்றால் இன்னிசை கலிவெண்பா எனப்படும்.

நேரிசை கலிவெண்பா

எடுத்துக்காட்டு

மாமழையே வா

வையகம் வாழ வழிதரும் மாரியே
தையல்வான் கண்வழியே தாவிவரும்- மையலே
ஏரெடுத்துச் சென்றிவ் வெழிலுலகை ஆள்கின்ற
சீரெழில் வேளாளன் சேர்நட்பே – காரெழிலே
பாரிற் சிறந்த பரம்பொருளே பங்கயத்
தேரில் அமர்ந்தோன் திரவியமே – ஊரில்
உனையன்றி யாரிங்(கு) உயர்ந்தவர் சொல்லாய்
அனைவர்க்கும் அன்னையே ஆடை – நனைந்தும்
களிப்பரே உன்வரவால் கார்முகில் சேயே
எளிமையாய் வந்திங் கிறங்கும் – வளிமகளே
எங்களை வாழவைக்கும் ஏந்திழையே தெய்வமே
அங்கம் குளிர அணைப்பாயே – வங்கக்
கடல்நீர் உறிஞ்சிக் கடத்தித் தருமென்
தடம்மாறாத் தன்னிகரில் தாயே – வடங்கொண்(டு)
இழுக்காத தேரே இனியசுவை நீரே
ஒழுக்கம் வளர்க்கும் ஒழுங்கே – அழுக்ககற்றும்
தூய்மை தருமழகே துய்ய நிறத்தினளே
வாய்மை பெருக்க வருமெழிலே ஓய்விலாக்
காடு செழித்துக் கவினெங்கும் ஓங்குமே
வீடு மகிழ்ந்து வியனுலகும் ஆடும்
அழகி னுருவே அருமை வளமே
உழவர் துணையே உருகித் தொழவே
பிழையும் மறையும் பிறவிப் பயனை
மழையே தருக மகிழ்ந்து

இன்னிசை கலிவெண்பா

எடுத்துக்காட்டு

எளிதாக நாமே இயற்றலாம் வெண்பா
தெளிவான சொற்கூட்டில் தெள்ளு தமிழில்
கடிதொன்று மில்லை கவிகாள் வருவீர்
நொடியில் கற்கலாம் நோக்கிடின் நன்றாய்
ஒன்றும் பயமில்லை ஒண்டமிழில் வெண்பாக்கள்
தென்றல் தவழ்வதுபோல் தேடி யுனைச்சேரும்
என்றும் தமிழ்ப்பெண்ணாள் ஏற்றம் வழங்குவாள்
வென்று புகழீட்ட வாராய் விரும்பியே
சங்கத் தமிழாலே சன்மார்க்கம் நாம்கண்டு
சிங்கத் தமிழனாய் சீறி எழுவோம்
நறுந்தமிழ் வெண்பாக்கள் நாமும் எழுதி
உறுதியாய் மேலெழும்பி உண்மை விளம்பின
குலமகள் நம்தமிழ் கோலவெழில் காட்டி
மலர்வாளே உள்ளம் மகிழ்ந்து.

குளக வெண்பா

இதுவும் இரண்டு வகைப்படும்

நேரிசை குளக வெண்பா
இன்னிசை குளக வெண்பா

குளக வெண்பா என்றால் வேறு ஒன்றுமில்லை

அடுத்தடுத்த வெண்பாக்கள் தொடர்ந்து அமைய வேண்டும். வெண்பா முற்றுப்பெறாமல் தொடர்ந்து வந்து இறுதி வெண்பாவின் ஈற்றடியில்தான் நிறைவு பெறவேண்டும். மற்ற இலக்கணங்கள் ஒன்றே

குளகவெண்பா ( நேரிசை)

மழை

வெண்ணிலவு தான்மறைய விண்மீன்கள் கண்துயில
மண்மகளின் நெஞ்சம் மகிழ்ந்தாட – தண்பஞ்சுக்
கார்முகில்கள் மோதிக் களத்தில் விளையாட
ஊர்மகிழ, உண்மை உணர்ந்து

உழவன் மனம்குளிர, ஊர்வோ ரொதுங்க
அழகான வானம் அறமாய்ப் – பொழிய
நிலமகள் உள்ளம் நெகிழச் செய்வாள்
குலமகள் மாரி குளிர்ந்து.

குளக வெண்பா (இன்னிசை)

மழை

மத்தளம் கொட்டி மலர்மேகம் கொண்டாட,
நத்தை தவளையுடன் நத்தியே கூத்தாட,
சித்தர் தவம்போலச் சீர்க்கொக்கு நின்றாட,
கத்தும் குரல்வழி கண்டு

கொத்திப் படமெடுக்கக் கொல்பார்வை நாகமும்
அத்தி மரத்தோரம் நின்றிருக்க, உத்தரவு
கேளா மழையும் கிணற்றோரம் வந்துவிழ,
தாளாத சோகம் தகர்த்து

தேரைப் பயந்து தெருவோரம் உள்நுழையக்
காரை பெயர்ந்துவிழக் கண்களோ வேரை
நுழைத்துச் சுவர்தகர்க்கும் நுட்பத்தைக் காணக்
குழைந்துள் நுழையக் குவிந்து

புவிகுளிர, காற்றால் புலன்நடுங்கிப் போக,
செவிமடங்கி நாண, சிவந்து குவிந்த
இதழ்கள் உலர எதுவும் அறியாக்
கதகதப்பாய்ப் பெய்மழை காண்!

கட்டளை வெண்பா

இது மிகவும் எளிமையான வெண்பா

கட்டளை என்றால் எழுத்துகள் எண்ணிவருவது என்று பொருள்.
முதல் மூன்று அடிகளிலும் ஒற்றெழுத்துகள் நீக்கி எண்ணி வரும் போது எண்ணிக்கை சமமாக இருக்க வேண்டும்.

எடுத்துக்காட்டு 1

சிவனி னழகு மகனி னருளி (12)
லுவகை வழியு முலகு மகிழு (12)
மருளு மொழுகு மழகு மொழுகு (12)
முருக னருளி லுருகு

சிவனி(ன்) அழகு மகனி(ன்) அருளி ( ல்)
உவகை வழியு(ம்) உலகு மகிழு(ம்)
அருளு(ம்) ஒழுகு (ம்) அழகு(ம்) ஒழுகு(ம்)
முருக(ன்) அருளி(ல்) உருகு

புரிவதற்காக

சிவனின் அழகு மகனின்அருளில்
உவகை வழியும் உலகு மகிழும்
அருளும் ஒழுகும்அழகும் ஒழுகும்
முருகன் அருளில் உருகு

மேற்கண்ட வெண்பாவில் புள்ளி வைத்த எழுத்துகளை நீக்கிவிட்டு எண்ணிப் பாருங்கள் . சரியாக இருக்கும்

இதுவே கட்டளை வெண்பா.

இதுவரை வெண்பாக்களின் வகைகளைப் பார்த்து விட்டோம். மற்றவற்றை அடுத்துவரும் நாட்களில் பார்ப்போம். ஏதும் சந்தேகங்கள் இருப்பின் பின்னூட்டத்திலோ உள்பெட்டியிலோ கேளுங்கள். விடையளிக்கிறேன்.


3 Comments

நிறைமதி நீலமேகம், பெண்ணாடம் · மே 31, 2020 at 8 h 16 min

அருமை, இனிய நல்வாழ்த்துகள்.

நிறைமதி நீலமேகம், பெண்ணாடம் · மே 31, 2020 at 8 h 16 min

அருமை,

சாந்தி சந்திரசேகர் · மார்ச் 30, 2022 at 15 h 29 min

சிறப்பு ஐயா நன்றி

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

I மின்னிதழ் I உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பே என்றும் உயர்வாகும்!
உடலை உறுதி ஆக்கிவிடும்!
தழைக்கும் தொழில்கள் நாட்டினிலே
தளரா உழைப்பின் பலனன்றோ!

 » Read more about: உழைப்பாளர்களை உயர்த்துவோம்  »

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

மரபுக் கவிதை

அண்ணா

வினைச்சொல்லாய் வேதியத்தின் இருள கற்றி
விடியல்தர வந்துதித்த கதிர வன்நீ!
முனைச்சொல்லாய்க் கூர்படைத்த கூர்ப டைத்துக்
குத்தீட்டிச் சொல்வடித்த உலைக்க ளம்நீ!
பிணைச்சொல்லாய்ப் பிரிந்துபட்ட தமிழி னத்தைப்
பேரினமாய்த் திரளவைத்த பெருந்தி றம்நீ!

 » Read more about: அண்ணா  »