தமிழ்நெஞ்சம் புகழாரம் புத்தகம் பற்றி ஒரு பார்வை...

ஒரு புகழாரத்தைத் தனிப் புத்தமாக பதிக்க வேண்டுமென்றால் அதன் தரம் எப்படி இருக்கும்? இப்படித்தான் இருக்கும் என்கிறது இந்தத் தொகுப்பு. தித்திப்பே திரண்டு வந்து சொற்களுக்குள் புகுந்து கொண்ட திகட்டாத இனிப்பு.நாவூறும் பாக்களின் நற்கோர்வை காரணம் அதன் சொற்கோவை.

எத்தனை வண்ணப் படங்களுக்கு மத்தியிலும் கருப்பு வெள்ளையில் தெரியும் படத்துக்கு தனியானதொரு சோபை உண்டு. பழமை போற்றும் கண்களுக்கு அது களிவிருந்து. பண்பாடு பழையதென்று யார் சொல்வார்கள். பழையதானால்தான் அது பண்பாடு, பாரம்பரியம். தமிழின் தலைசிறந்த பாவகையாம் வெண்பாவில், அதுவும் நேரிசையில் படிக்கும்போது வைரமாக மின்னுகிறது ஒவ்வொரு தனிச் சொல்லும். எல்லாமே முத்திரை பதிக்கும் ஈற்றடிகள்.

நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட புத்தக முன் அட்டைப்படம், செய்நேர்த்திக்குச் சான்று. அயல்நாட்டில் வாழ்ந்து ஐம்பது வருடமாய் செய்துவரும் மொழிச்சேவைக்கு இந்த அங்கீகாரமும் இல்லையென்றால் எப்படி. தங்க அன்புவல்லி அம்மா அவர்களின் வாழ்த்தில் தொடங்குகிறது. ஆரம்பமே அமர்க்களம்.

“முத்தமிழ் மாமாயம் அத்தனையும் – வந்து

முத்தம் இழைத்தன வாழியவே”

என்ற கொஞ்சும் தமிழை நெஞ்சத்தில் நிறுத்திச் செல்கிறது அவரின் பூரண வாழ்த்து.

அடுத்து வியாயகர் துதி,சரஸ்வதி துதி,தமிழ் வணக்கம் தாண்டி சிலிர்ப்பு தரும் அவையடக்கத்துக்குப் பின் தொடங்குகிறது புகழாரம், ஒன்றைக் குறிப்பிட்டுச் சொன்னால் மற்ற வரிகள் கோபிக்கும் அத்தனை அழகு வரிகள்.

“கண்ணுள் விழியடங்கும்;காட்டில் கனியடங்கும்”

முதல் பக்க வியப்பு இது.

“பிச்சிப்பூ முற்காலம் பேசிப் பிழையின்றி

அச்சிடுங்கள் என்றதடா ஆங்கு”

இது இரண்டாம் பக்க லயிப்பு. இப்படிப் பக்கத்து ஒன்றாய் கண்களை மலரச் செய்த கவியழகில் சொக்கி விழுதல் சுகம்.

பக்கம் தவறாமல் வரும் “தமிழ் நெஞ்சம்” எனும் வார்த்தை, பெயர்ச் சொல்லாகவும், வினைச்சொல்லாகவும் நின்று பரிமளிக்கும் பாங்கு பெருவியப்பு.தொடர்ந்து வரும் இருபது வெண்பாக்களும் அவர் சேவை பாராட்டி நின்று ஜொலிக்கிறது.

தமிழ்நெஞ்சம் அமின் அவர்களின் ஏற்புப்பா நன்றியோடு புத்தக அட்டை மூடும்போது வெண்பாக் கவிஞரின் முகம் பளிச்சிட்டு நிறைகிறது. படித்து முடிக்கும்போது தோன்றும் பிரமிப்பு படைப்பின் உயரத்தையும், இன்னும் எத்தனை இளம் தமிழ்க்காவலர்கள் இருப்பார்களோ பிறகு எப்படித் தமிழுக்கு முதுமை வரும் என்று நம்மைப் பார்த்துச் சிரிக்கிறது.இப்படித் தன்னைத் தகுதிப் படுத்திக் கொண்ட ஐயா தமிழ்நெஞ்சம் அவர்களின் இலக்கியப் பணி இன்னும் தொடர வாழ்த்துக்கள். இந்த நவீன யுகத்தில் இத்தனை அழகு வெண்பாக்கள் படைத்திருப்பது மிக அரிய செயல்.நூலாசிரியரின் தமிழ்ப் பணி மென்மேலும் தொடர வாழ்த்துகிறேன்.

“செல்லும் பயணத்தில் சிக்கித் தவிப்பார்க்கு

துள்ளுந்துக் காரன் துணையன்ன”

“பாலைக்குள் ஊற்றெடுத்து பாலாறாய் ஓடிவந்து”

“மண்வாழுங் கால்நடையும் மாந்தோப்புப் புள்ளினமும்

கண்சிமிட்ட வாழுங் கவி”

“சொல்லுக்கு நாலடியார் சூத்திரமே வள்ளுவம்மாம்

புல்லுதற்குக் கொக்கோகப் புத்தகமாம்”

இவைபோல் புத்தகத்தினுள் இருக்கும் புதையல்கள் நிறைய.கர்வத்தோடு நிமிர்ந்து நிற்கிறது தமிழும், மரபும் இப்புத்தகத்தில்.

படித்த கம்பீரத்தில் பகிர்கிறேன்.

கிறிஸ்டினா அருள்மொழி


தமிழ்நெஞ்சம் புகழாரம் நூலுக்கோர் புகழாரம்

ஒரு புத்தகத்தின் மீதான வாழ்த்தையே ஒரு புத்தக மாக்க முடியுமா என்று நான் வியந்ததுண்டு முடியும் என்று சொல்லி அதனைச் செய்துகாட்டியிருக்கின்றார் புலவர் ஏ.டி வரதராசன்.

அதுவும் புலவருக்குப் புலி என்று அறியப்பட்ட. வெண்பாவில் நிகழ்த்தியிருக்கின்றார் என்பதுதான் கவனிக்கத் தக்கது.

அதில் கலையழகும் , கவினொழுகும் ஆற்றல்மிக்க சொல்லழகும் பூட்டிக் கற்பனைத் தேரில் கம்பீரமாக வலம்வருகின்றார்.. அந்தக் கம்பீரத்தின் பேரழகைப் படிக்கும் போதே தமிழ்நெஞ்சம் என்னும் இதழைப் படிக்க வேண்டும் என்னும் ஆவலைத் தூண்டுமாறு தேனில் பிசைந்த தினைமாவைப் போல் அள்ளித் தருகின்றார்

சொற்கடலோ போர்க்களத்தில் சொல்லி அடிக்கின்ற
விற்கடலோ..! தோண்ட விளைபூமிப் – பொற்கடலோ
சிந்துகின்ற பாற்கடலாய்ச் சேரும் தமிழ்நெஞ்சம்
எந்த கடல்நீ இயம்பு

இந்த ஒரு வெண்பா போதும் உள்ளூற ஆய்ந்து நோக்கினால் அவர் ஒரு வெண் பாக்கடல் என்பதை விளங்கிக் கொள்ளலாம். இப்படி ஒவ்வொரு வெண்பாவும் தமிழ்நெஞ்சம் என்னும் இதழைத் தேயாத வெண்ணிலவாய் வானில் உயர்த்தி எல்லோரும் கண்டு மகிழ வழித்துணை செய்கிறார்..

கற்பனையே தீயாய்க் கவிதையெல்லாம் வான்முகிலாய்ச்
சொற்பதமே காற்றாய்ச் சுடரணியே – நற்புவியாய்ச்
செய்யுள் நதியாய்ச் செழித்த தமிழ்நெஞ்சம்
ஐம்பூதக் கூட்டென்று அறி…

அடடடடா..! ஐம்பூதத்தையும் உருவக அணியால் அழகுசெய்து தமிழ்நெஞ்சம் இதழைத் தரணிபோற்றும் செய்யுளால் அலங்காரம் செய்து ஊர்வலம் காட்டுகிறார்.

ஒவ்வொரு வெண்பாவும் ஒவ்வொரு சுவையால் தித்திப்பைக் கூட்டுகிறது. இருபத்தோராம் நூற்றாண்டில் இப்படியொரு புலவரா என வியக்க வைக்கிறது.. முன்னழகை மோனையாகவும் பின்னழகை எதுகையாவும் காட்டும் கவிஞரின் கற்பனைத்திறன் களிகொள்ள வைக்கிறது..

நல்ல வெண்பாவிற்குத் தலையாய அழகே ஈற்றடிதான், அந்த ஈற்றடியை நுட்பமாகவும் பேரழகாகவும் படைத்துக் காட்டித் தலைநிமிர்ந்து நிற்கின்றார் புலவர்.

சொல்லில் அடங்குமோ சொல்

வளர்ப்பதுகாண் செந்தமிழை வார்த்து

கடன்பட்டே சிந்துதையா கண்

அகந்தன்னில் பூக்கும் அறிவு

என்ன வரம்வேண்டும் எனக்கு

இப்படி ஈற்றடியால் இதயத்தில் சிம்மாசனமிட்டு அமர்கின்றார். தமிழ்நெஞ்சம் இதழாசிரியர் அமீன் அவர்களைத் தனியாக இருபது வெண்பாக்களில், அவரின் இதழ்பணியை இலக்கியப் பணியை இடையறாது செய்யும் பதிப்பகப் பணியைப், பல்திறத்துத் தமிழ்ப்பணியை, ஆழ்ந்தாய்ந்து அவருக்குரிய தகுதியைத் திறமையைத் தனித்தமிழில் பாராட்டிச் சீராட்டி அழகு செய்திருக்கின்றார்..

முத்துத் தமிழ்மொழியை முன்வந்து காப்பாற்றும்
சொத்தாய் விளங்கும் சுடர்விளக்கே..! – இத்தனைக்கும்
மெய்யாய் உழைக்கும் மிகையுள்ளச் சேவைக்குக்
கைமாறும் உண்டோ கணக்கு..

அப்பப்பா எத்தனை ஆழம் செறிவு ஆற்றல் அத்தனையும் கலந்து தகுதியுள்ளவரைத் தகுதியான வெண்பாவில் தகுதியானவர் பாராட்டியிருக்கும் பாங்கு அழகு இனிமை வளம்..

இப்படி ஒவ்வொரு வெண்பாவும் தரத்தால் நிரந்தரமாய்ச் சிம்மாசமிட்டுக் கோலோச்சுகிறது என்பதை படித்து உணர்ந்து மகிழுங்கள்..

பைம்புதற் பூவோஒ பால்நிலவோ தேன்தானோ
ஐம்பது வெண்பாவும் ஆழ்கடலோ – பெய்ம்மழை
வேர்நனைக்க பொன்பொலிந்து வீற்றிருக்கும் காடானேன்
யார்தருவார் இந்த. இதம்..!

பாவலர் வள்ளி முத்து


 


2 Comments

இமயவரம்பன் · பிப்ரவரி 28, 2021 at 12 h 28 min

அருமையான வெண்பா அமுதம்! வெண்பாக்களை என் நாவினிக்க பாடி மகிழ்ந்தேன்! “கற்பனையே தீயாய்க் கவிதையெல்லாம் வான்முகிலாய்” – நளவெண்பாவின் ‘நாற்குணமும் நாற்படையா ஐம்புலனும் நல்லமைச்சா’ என்னும் பாட்டை நினைவுறுத்துகிறது.

இமயவரம்பன்

நிறைமதி நீலமேகம் · ஏப்ரல் 1, 2021 at 14 h 25 min

அழகான அமுத வெண்பாக்கள் மிகவும் சிறப்பு, இனிய நல்வாழ்த்துகள்.. 💐💐💐

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

அறிமுகம்

பன்னூல் எழுத்தாளர்… கவிஞர் மூதூர் முகைதீன்

I மின்னிதழ் I நேர்காணல் I மூதூர் முகைதீன்

மூதூர் மண்ணை பிறப்படமாகக்கொண்ட சர்வதேச புகழ் பெற்ற கவிஞரும், பன்னூல் எழுத்தாளுமான மூதூர் முகைதீன் அவர்களை அறிமுகம் செய்வதில் தமிழ்நெஞ்சம் பெருமிதம் கொள்கின்றது.

 » Read more about: பன்னூல் எழுத்தாளர்… கவிஞர் மூதூர் முகைதீன்  »

மின்னூல்

என்றும் வாழும் பாரதியார்

வலங்கையார் தொகுப்பும் வாழ்க வாய்த்தநற் கவிகள் வாழ்க கலங்கரை விளக்கம் போலக் கைகளில் நூலும் வாழ்க பலத்துடன் ஒருங்கி ணைந்தப் பாவலர் கூட்டம் வாழ்க நலத்துடன் தமிழின் ஊடே நாளெல்லாம் வாழ்க வாழ்க தமிழ்நெஞ்சம் அமின்

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.