தொடர் 20

வெண்பா ஆசிரியப்பா இரண்டு பற்றியும் தெரிந்து கொண்ட நாம் அடுத்ததாக கலிப்பாவைக் காண்போம்.

இது 3 ஆவது பாவகை

மாமுன் நிரை
விளமுன் நேர்
காய்முன் நேர் இவை வெண்பா

நேர்முன்நேர்
நிரைமுன் நிரை
நேர் முன் நிரை
நிரை முன் நேர் இவை ஆசிரியப்பா

ஆனால் கலிப்பாவில்

காய்முன் நிரை வரும்
அதாவது கலித்தளை மிகுந்து வரும்
மற்ற தளைகள் குறைந்து வரலாம்
புளிமாங்காய் கருவிளங்காய் அதிகம் வரும்
கனிச்சீர்கள் வாரா
அளவடிகளால் ஆனது

கலிப்பா மற்ற பாக்கள் போல ஒரே உறுப்புகள் கொண்டமையாமல் பல உறுப்புகள் உடையது. அவற்றைத் தெரிந்து கொண்டால் இதனை எழுதுவது மிகவும் எளிது

அவை

  1. தரவு,
  2. தாழிசை,
  3. அராகம்,
  4. அம்போதரங்கம்,
  5. தனிச்சொல்,
  6. சுரிதகம் எனும் ஆறு உறுப்புகள் ஆகும்.

இவற்றுள் தரவு என்பது பாடலில் சொல்லப்போகும் கருத்துகளுக்கு முன்னுரை போல இருக்கும்
சுரிதகம் பாடலில் சொல்லப்பட்ட கருத்துகளுக்கு முடிவுரை போல அமையும்.
பிற பாடல்-உறுப்புகள் செய்திகளைக் கூறும்.

இவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்

 

  1. தரவு

இது ஒரு கட்டுரைக்கு முன்னுரை போன்றது. கலிப்பாவுக்குத் தரவு;
என்ன சொல்ல வருகிறோமோ அதனைத் தொடங்கி வைப்பது தரவு தான்.
கறைந்தது 3 அடிகள் இருக்க வேண்டும்
அதிகமாக எல்லை யற்றது என்றாலும் 12 அடிகள் போதும்

  1. தாழிசை

இது தாழ்ந்து ஒலிப்பதால் தாழிசை எனப்படுகிறது. தரவில் வந்த செய்தியைச் சற்றே விரித்துக் கூறுவது தாழிசை.
இது தரவினைவிட குறைவான அடிகள் கொண்டது. இரண்டடி முதல் நான்கடி வரை இருக்கலாம். மூன்று ஆறு என இரட்டித்தும் வரும்

  1. அராகம்

இது இசை என்னும் பொருள்படும் கலிப்பாவின் உறுப்பு. இது அதிகமாகக் கருவிளச்சீர்களைக் கொண்டது. இது தாழிசைக்குப் பின் அம்போதரங்கத்திற்கு முன்னும் வரும். இது அளவடி என்றில்லாமல் எந்த அடியாலும் வரும். குறைந்தது 4 அடி அதிகம் 8 அடி எல்லை உடையது. இதற்கு முடுகியல் என்றும் பெயருண்டு.

  1. அம்போதரங்கம்

அம்பு என்றால் நீர் என்று ஒரு பொருள் உண்டு
தரங்கம் என்றால் அலை என்று பொருள்.
அலை தோன்றும் போது பெரிதாகவும் கரையைத் தொடும்போது சிறயதாகவும் மாறும் இயல்புடையது.
இங்கே கலிப்பா உறுப்புகளில் ஒன்றான அம்போதரங்கத்திலும் அடிகள் நாற்சீரடி முச்சீரடி இருசீரடி குறைந்து கொண்டே வரும்.
இது தனிச்சொல்லுக்கும் அராகத்திற்கும் இடையில் வரும்
அம்போதரங்கத்தில் காய் ச் சீர் களும் இயற்சீர்களும் விரவி வரும். இதற்கு அசையடி என்றும் ஒரு பெயர் உண்டு

  1. தனிச்சொல்

இது ஒரு அசையாகவோ அல்லது ஒரு சீராகவோ இருக்கும். ( நேரிசை வெண்பாவில் வரும் தனிச் சொல்லோடு தொடர்பு படுத்த வேண்டாம்)
இது தனித்து நிற்கும். சுரிாகத்திற்கு முன்வரும்.
இதற்கு கூன் , விட்டிசை, தனிநிலை, அசைநிலை என்ற வேறு பெயர்களும் உண்டு.

  1. சுரிதகம்

இது பாவின் இறுதியில் வரும் உறுப்பாகும். இது பாடலின் முடிவுரையாகக் கருதப்படுகிறது.இது கலிப்பாவுக்கான ஓசை சீர் இல்லாமல் ஆசிரியப்பாவுக்குரிய சீர்களையோ வெண்பாவுக்குரிய சீர்களையோ கொண்டிருக்கும்.
ஆசிரியப்பா எனில் ஆசிரியச் சுரிதகம்
வெண்பா எனில் வெண்பாச்சுரிதகம் அல்லது வெள்ளைச் சுரிதகம் என்றும் அழைக்கப்படும். இதற்கு வாரம் என்றும் இன்னொரு பெயர் உண்டு.

1.தரவு

மதத்தாலே இனத்தாலே மனத்தினிலே பிரிவினைகள்
இதமான உறவெல்லாம் இழக்கிறதே மனமகிழ்வை
விதவிதமாய் கலவரங்கள் விதைக்கிறதே விடமுள்ளை
நிதநிதமும் நினைவழிந்து நிலைகுலைந்து சிதைகிறதே!

2.தாழிசை

குறுகியதோர் மனவெண்ணம் பெருகியதால் நம்நாட்டில்
நறுங்குணங்கள் இடம்மாறி
நரிக்குணமே பெருகியதே
சிறுபிள்ளைப் பகையாகித் தெருவெங்கும் குருதிவர
கறுகறுத்த உளம்யாவும் கடிபகையே பெருகியதே
உடன்பிறப்புப் பழக்கமெலாம் உறுபகைக்கோ ரிரையாகி
இடர்பெருக்கும் துயர்யாவும் இயந்திரமாய் பெருகியதே

3.அராகம்

பெருகிய துயரெலாம் பெருமையைக் குலைத்திட
தருதரும் நிழலெலாம் கதிரெனச் சுடர்விட
எருவிடும் அருங்குணம் சிதையெனச் சிதைந்திட
வருதுயர் எதுவென அறிந்திலர் கொடுமையே

4.அம்போதரங்கம்

(நான்குசீர் இரண்டடி இரண்டு )

ஒருதாயின் பிள்ளையாய் உதித்ததை மறந்தனர்
இருதாயின் மூலமும் ஒன்றென அறிந்திலர்

பலகுரலும் அணிகின்ற பலவண்ண உடைகளும்
பலநிலமும் வேறெனினும் ஒன்றென தெரிந்திலர்

( நான்குசீர் ஓரடி நான்கு)

இமயமா மலைதனில் இந்துமாக் கடலே
கசுமீரத் தோழனோ குமரியின் நண்பனே
குசராத்தில் ஓடுமே சென்னையின் பெட்டிகள்
வங்காளச் சாலையில் சிங்காரச் சேரனே!

( மூன்று சீர் ஓரடி எட்டு)

தில்லியின் வீதியில் நடப்போம்
திருவிழா கோலமே மகிழ்வோம்
சண்டிகர் நகரிலே வீரத்தாய்
சமத்துவ மும்பையில் பாரதம்
கன்னட நாட்டினில் பொன்னிலம்
ஆந்திர தேசத்து நடனமே
ஒடிசாவின் கதிரவன் ஆலயம்
காசியின் யாத்திரை புனிதமே

( இரண்டு சீர் ஓரடி பதினாறு)

மொழிவேறாய் ஆயினுமென்
கலைவேறாய் ஆயினுமென்
நிலம்வேறாய் ஆயினுமென்
உடைவேறாய் ஆயினுமென்
பண்வேறாய் ஆயினுமென்
படைவேறாய் ஆயினுமென்
ஊண்வேறாய் ஆயினுமென்
தினம்வேறாய் ஆயினுமென்
தெருவேறாய் ஆயினுமென்
இறைவேறாய் ஆயினுமென்
குடிவேறாய் ஆயினுமென்
கோன்வேறாய் ஆயினுமென்
வழிவேறாய் ஆயினுமென்
வான்வேறாய் ஆயினுமென்
மதம்வேறாய் ஆயினுமென்
இனம்வேறாய் ஆயினுமென்

5.தனிச்சொல்

புவிமீது

6.சுரிதகம்

நாமெல் லோரும் ஓர்தாய் மக்கள்
ஆமென் போரே ஆவார் மாலை
பாரதப் புதல்வர் யாவரும் சமமே
நீரதை உணர்ந்தால் நித்தியச் சுகமே
நல்லி ணக்கத்தை நாளும்
வல்லி ணக்கமாய் வளர்ப்போம் நாமே!

மலைப்பாக உள்ளதா,?
மலைக்க வேண்டாம்
கலிப்பாவின் வகைகளைக் காணும் போது
ஒவ்வொன்றாக பொறுமையாகக் காணலாம்


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

I மின்னிதழ் I உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பே என்றும் உயர்வாகும்!
உடலை உறுதி ஆக்கிவிடும்!
தழைக்கும் தொழில்கள் நாட்டினிலே
தளரா உழைப்பின் பலனன்றோ!

 » Read more about: உழைப்பாளர்களை உயர்த்துவோம்  »

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

மரபுக் கவிதை

அண்ணா

வினைச்சொல்லாய் வேதியத்தின் இருள கற்றி
விடியல்தர வந்துதித்த கதிர வன்நீ!
முனைச்சொல்லாய்க் கூர்படைத்த கூர்ப டைத்துக்
குத்தீட்டிச் சொல்வடித்த உலைக்க ளம்நீ!
பிணைச்சொல்லாய்ப் பிரிந்துபட்ட தமிழி னத்தைப்
பேரினமாய்த் திரளவைத்த பெருந்தி றம்நீ!

 » Read more about: அண்ணா  »