பாடல் – 39
புலைமயக்கம் வேண்டிப் பொருட்பெண்டீர்த் தோய்தல்
மலமயக்கங் கள்ளுண்டு வாழ்தல் – சொலைமுனிந்து
பொய்ம்மயக் கஞ்சூதின் கண்தங்கல் இம்மூன்றும்
நன்மையி லாளர் தொழில்.
(இ-ள்.) புலை – இழி தன்மையாடு, மயக்கம் – கலத்தலாவது, பொருட் பெண்டீர் – பொருளை விரும்பி நிற்கும் வேசியரை, வேண்டி – விரும்பி, தோய்தல் – கூடுதலாம்; கலம் மயக்கம் – பிறர் எச்சிற் கலத்தோடு கலத்தலாவது, கள் உண்டு – கள்ளைக்குடித்து வாழ்தல் – வாழ்தலாம்; சொல்லை – (பெரியோர் கூறும் உண்மை) மொழியை, முனிந்து – வெறுத்து, பொய் மயக்கம் – பொய்யோடு கலத்தலாவது. சூதின்கண் தங்கல் – சூதாட்டத்தில் இருத்தலாம். இ மூன்றும் – ஆகிய இந்த மூன்றும், நன்மை – அறம், இலாளர் – இல்லாதவரது, தொழில் – தொழில்களாம், (எ-று.)
(க-ரை.) வேசியரைச் சேர்வதாகிய நீசத்தன்மையும், கள்ளுண்டலாகிய பிறர் எச்சிலை யுண்பதும், பொய்யை மேற்கொள்வதாய சூதாடுமிடத்திற் சேர்வதும் அறவழி நில்லாதார் தொழில்களாம்.
புலைமயக்கம் – புலையொடு மயக்கம், புலையை மயங்கும் மயக்கம், புலையினது மயக்கம் என்று மூன்று பொருளிலும் மயங்கும். பொருட் பெண்டிர் என்பது – பொருளை விரும்பும் பெண்டிர் பொருளுக்கு முயங்கும் பெண்டிர், பொருளால் முயங்கும் பெண்டிர் என முப்பொருளில் மயங்கினவாறு காண்க. கள்ளுண்டென்ற குறிப்பால் வாழ்தல்கெடுதலை யுணர்த்தியது. பெண்டீர்த் தோய்தல் என்பதில் நிலைமொழி உயர்திணைப் பெயராதலாலும், இரண்டாம் வேற்றுமைத் தொகையாதலாலும், இயல்பில் விகாரமாயிற்று. சொல் – ஈண்டு மெய். சூது தன்னாலாகும் ஆட்டத்தையுணர்த்தியது; கருவியாகு பெயர். நன்மையிலாளர் என்பதை நன்மை + இன்மை + ஆளர் என்று முறையே ஆறாம் வேற்றுமைத் தொகையாகவும் இரண்டாம் வேற்றுமைத் தொகையாகவும் கொள்க.