பாடல் – 38
தன்னை வியந்து தருக்கலுந் தாழ்வின்றிக்
கொன்னே வெகுளி பெருக்கலும் – முன்னிய
பல்பொருள் வெஃகுஞ் சிறுமையும் இம்மூன்றுஞ்
செல்வ முடைக்கும் படை.
(இ-ள்.) தன்னை – ஒருவன் தன்னை, வியந்து – (தானே) நன்கு மதித்து, தருக்கலும் – அகங்கரித்தலும்; தாழ்வு இன்றி – அடக்கம் இல்லாமல், கொன்னே – வீணாக, வெகுளி – சினத்தை, பெருக்கலும் – பெருகச் செய்தலும்; முன்னிய – கருதிய, பல்பொருள் – பலவகைப் பொருள்களையும், வெஃகும் – இச்சிக்கின்ற (விரும்புகின்ற), சிறுமையும் – சிறுமைத் தன்மையும்; இ மூன்றும் – ஆகிய இந்த மூன்றும்; செல்வம் – (ஒருவன்) செல்வத்தை, உடைக்கும் படை – அழிக்கும் கருவி; (எ-று.)
(க-ரை.) தற்புகழ்ந்து செருக்குவதும், வீணாகச் சினங் கொள்வதும், பிறர் பொருளை விரும்புவதும் செல்வத்தைத் தேய்க்கும் படை என்றபடி.
வியந்து : தருக்கல் : விய, தருக்கு : பகுதிகள். கொன் : பயனின்மையைக் குறிக்கும் இடைச்சொல். வெகுளி : தொழிற்பெயர் – வெகுள் : பகுதி. முன்னிய – முற்பட்ட என்பதுமாம். படை : படு என்னும் பகுதியடியாகப் பிறந்த தொழிற்பெயர். தன்னை வியத்தலால் அடக்கமின்மையும், வெகுளி பெருக்குதலால் துணையாயினவர் பிரிவும், பல பொருளையும் விழைதலால் குற்றமும் விளங்கும் என்பது, இம்மூன்றும் படையென்று உருவகிக்கப்பட்டன.