பாடல் – 21
வருவாயுட் கால்வாழங்கி வாழ்தல் செருவாய்ப்பச்
செய்தவை நாடாச் சிறப்புடைமை – எய்தப்
பலநாடி நல்லவை கற்றல் இம்மூன்றும்
நலமாட்சி நல்லவர் கோள்.
(இ-ள்.) வருவாயுள் – தமக்கு வரும் பொருள்களிலே, கால் – நான்கி லொரு பங்கு, வழங்கி – (அறத்திற்) செலவு செய்து, வாழ்தல் – வாழ்தலும்; செரு – போரினிடத்து, வாய்ப்ப – (வெற்றி) கிடைப்ப, செய்தவை – (தான்) செய்த செயல்களை, நாடா – ஆராயாத, சிறப்பு உடைமை – (யாவர்க்கும் விளங்கித் தோன்றும்) சிறப்புடையனாதலும்; எய்த – நிரம்ப, பலநாடி – பலவற்றையும் ஆராய்ந்து, நல்லவை – (அவற்றுள்) நல்லவற்றை, கற்றல் – படித்தலும்; இ மூன்றும் – ஆகிய இம் மூன்றும், நலம் – நற்குண நற்செய்கைகளால், மாட்சி – பெருமை பெற்ற, நல்லவர் – நல்லவருடைய, கோள் – கொள்கைகளாம்; (எ-று.)
(க-ரை.) வரவுக்குத் தகுந்தபடி அறஞ்செய்தலும், போரில் வெற்றி பெறுதலும், நல்ல பொருள்களைக் கற்றலும் நலம் என்றபடி.
வருவாய் – வரும் வழியையுடைய பொருள்; வினைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை, கால் : எண்ணளலவை யாகுபெயர். செருவாய்ப்ப என்ற குறிப்பால் செய்தவை என்பது வெற்றிச் செய்கை என்பதன் மேலாயிற்று, வாய்ப்ப – நிகழ்காலத்தில் வந்த செயவெனெச்சம் : வாய் : பகுதி, ப் : எழுத்துப்பேறு, ப் : சந்தி, அ : விகுதி, வழக்கத்தில் வாய்க்க என வரும். உடைமை : தொழிற் பெயர். கோள் – கோட்பாடு : தொழிலாகு பெயர். ஒருவன் தன் தேட்டத்திற் பாதி தன் வகைச் செலவுக்கும், காற்கூறு அறத்திற்கும், மற்றொரு கால் சேர்த்து வைப்பதற்கும் பயன்படுத்த வேண்டுமென்பது நூற்கொள்கை.