பாடல் – 19

கொல்யானைக் கோடுங் குணமிலியு மெல்லிற்
பிறன்கடை நின்றொழுகு வானு – மறந்தெரியா
தாடும்பாம் பாட்டு மறிவிலியு மிம்மூவர்
நாடுங்காற் றூங்கு பவர்.

(இ-ள்.) கொல் யானைக்கு – கொலை செய்வதாகிய (மத) யானைக்கு, ஓடும் – (பின்வாங்கி) ஓடுகின்ற, குணம் இலியும் – குணம் இல்லாத வீரனும்; எல்லில் – இரவிலே, பிறன் கடை – பிறன் வீட்டு வாயிலில் (அவன் மனையாளை விரும்பி), நின்று – (தனக்கு வாய்ப்பான சமயம் பார்த்து) நின்று, ஒழுகுவானும் – நடப்பானும்; ஆடும் பாம்பு – ஆடுந் தொழிலுள்ள பாம்பை, மறம் – (நன்றி செய்தார்க்கும் தீமையைச் செய்கிற) கொடுமையை, தெரியாது – தெரியாமல், ஆட்டும் – ஆட்டுகின்ற, அறிவிலியும் – அறிவில்லாதவனும்; இ மூவர் – இம் மூவரும்; நாடுங்கால் – ஆராயுமிடத்து, தூங்குபவர் – (பழி முதலியவற்றினின்றும்) விரைதலில்லாதவர்; (எ-று.)

(க-ரை.) போர் யானைக்கு அஞ்சிப் பின்வாங்கும் வீரனும், அயலான் மனைவியை விரும்பித் தீமையாயொழுகுபவனும், நச்சுப் பாம்பை ஆட்டுகின்றவனும் விரைவில் கெடுபவராவர்.

உணவு முதலியன கொடுத்துக் காத்த அரசனுக்குப் போர் வந்த காலத்துப் போர்க்களத்தில் யானைக்கு அஞ்சி ஓடுதலால் குணமிலி எனப்பட்டான். யானைக்கு ஓடும் குணமிலி என்பதற்கு யானைக்கு எதிரில் ஓடுகின்ற அறிவில்லாதவனுக்கு என்றுமாம். இலி : இல், எதிர்மறைப் பண்படிப் பகுதி; இ : வினைமுதற் பொருள் விகுதி. எல் – இரவு. பிறன்கடை நின்றொழுகுவான் என்றது இடக்கரடக்கல், நாடுங்கால் – கால், ஈற்று நிகழ்கால வினையெச்சம். “கொம்புளதற் கைந்து குதிரைக்குப் பத்துமுழம், வெம்புகரிக் காயிரந்தான் வேண்டுமே” என்றபடி வெம்புகரிமுன் செல்லாதிருத்தலை அறியாமையின் குணமிலி என்றாரெனுலுமாம். “தூங்காமை கல்வி துணிவுடைமை” என்ற திருக்குறளில் தூங்காமை என்பதற்கு விரைவுடைமை என்று பரிமேலழகர் உரைவிரித்திருத்தலின், தூங்குதல் விரைதலில்லாமை என்று கொள்ளப்பட்டது. தூங்குபவர் என்பதற்கு இறப்பவர் என்றும் பொருள் கூறுவர்.

முன் பக்கம் செல்ல…    தொடரும்


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 100

பாடல் – 100

பத்திமை சான்ற படையும் பலர்தொகினும்
எத்துணையும் அஞ்சா எயிலரணும் – வைத்தமைந்த
எண்ணின் உலவா விழுநிதியும் இம்மூன்றும்
மண்ணாளும் வேந்தர்க் குறுப்பு.

(இ-ள்.) பத்திமை சான்ற –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 100  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 99

பாடல் – 99

கற்றாரைக் கைவிட்டு வாழ்தலும் காமுற்ற
பெட்டாங்கு செய்தொழுகும் பேதையும் – முட்டின்றி
அல்லவை செய்யும் அலவலையும் இம்மூவர்
நல்லுலகம் சேரா தவர்.

(இ-ள்.) கற்றாரை –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 99  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 98

பாடல் – 98

செந்தீ முதல்வர் அறம்நினைந்து வாழ்தலும்
வெஞ்சின வேந்தன் முறைநெறியில் சேர்தலும்
பெண்பால் கொழுநன் வழிச்செலவும் இம்மூன்றும்
திங்கள்மும் மாரிக்கு வித்து.

(இ-ள்.) செந்தீ –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 98  »