மின்னிதழ் / நேர்காணல்  தியத்தலாவ எச்.எப்.ரிஸ்னா

தமிழ்நெஞ்சம் சஞ்சிகைக்கான நேர்காணலில் எம்மோடு இணைந்திருப்பவர் ஓர் எழுத்தாளர், நூல் விமர்சகர், பாடலாசிரியர், இலக்கியச் செயற்பாட்டாளர், சமூக ஆர்வலர் எனப் பல துறைகளில் மிளிரும், பூங்காவனம் இலக்கிய சஞ்சிகையின் துணை ஆசிரியராகவும் பணியார்றிய தியத்தலாவ எச்.எப்.ரிஸ்னா.

இலங்கையின் முன்னோடி பத்திரிகைகள், சஞ்சிகைகள், வானொலி, தொலைக்காட்சி போன்றவற்றில் தவறாது இடம்பிடித்த ஒரு பெயர்தான் தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா என்ற பெயராகும். இவர் குறிஞ்சி நிலா என்ற புனைப் பெயரிலும் தனது ஒரு சில ஆக்கங்களை எழுதியுள்ளார். பாடசாலைக் காலம் தொட்டு இலக்கியத் துறையில் அதிக ஆர்வம் கொண்டுள்ள இவர், இதுவரை 11 நூல்களை வெளியிட்டு இலக்கியத்தின் பல துறைகளிலும் கால் பதித்துள்ளார். கவிதை, சிறுகதை, நூல் விமர்சனம், மெல்லிசைப் பாடல், சிறுவர் இலக்கியம், நாவல் ஆகிய துறைகளில் தன் பங்களிப்பை நல்கியுள்ளார். இவருக்குள் காணப்படுகின்ற இலக்கிய ஆர்வத்தால் நூற்றுக் கணக்கான நூல்களை வாசித்து, அவற்றின் மூலம் தன்னை மென்மேலும் புடம் போட்டுக் கொண்டுள்ளார். அதுமட்டுமின்றி இவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் இதழியல் டிப்ளோமா பாடநெறியை சிறப்பாக நிறைவு செய்துள்ளதுடன், இலங்கைக் கல்வி அமைச்சின் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்திலும் பணியாற்றியுள்ளார். அத்தோடு காலாண்டு சஞ்சிகையாக வெளிவரும் பூங்காவனம் என்ற சஞ்சிகையின் துணை ஆசிரியராகவும் இவர் காணப்படுகிறார். தமிழ்நெஞ்சம் சஞ்சிகையின் ஊடாக அவரை நேர்காணல் செய்வதில் மகிழ்ச்சியடைகிறோம்.

நேர்கண்டவர் :
வெலிகம ரிம்ஸா முஹம்மத்

மார்ச் 2023 / 80 பக்கங்கள் கொண்ட இதழை பதிவிறக்கம் (download) செய்ய மேற்காணும் இதழ் அட்டைப்படத்தில் டச் அல்லது கிளிக் செய்யவும்.
புதிய அலை கலை வட்ட நிகழ்வொன்றின் போது எமது பூங்காவனம் சஞ்சகையின் பிரதி ஒன்றை புரவலர் ஹாசிம் உமர் அவர்கள் பெற்றுக் கொண்ட போது..

வாசிப்பு மீதான நாட்டம் உங்களுக்கு எந்த வயதில் ஏற்பட்டது?

எனது சிறுவயது பிராயத்திலேயே நான் வாசிப்பு மீது அதிக ஆர்வம் கொண்டிருந்தேன். தினமுரசு பத்திரிகை யில் பாப்பா முரசு பகுதியைத் தரம் மூன்று கற்கும் காலம் தொடக்கம் சேகரித்து வைத்து, வாசிக்கும் பழக்கம் எனக்கு இருந்தது. அதுமட்டுமன்றி அந்தக் காலப் பகுதியில் வெளிவந்த பூங்கா, பிஞ்சு போன்ற சிறுவர் பத்திரிகைகளிலும் எனது ஆக்கங்கள் களம் கண்டுள்ளன.

இதுவரை வெளிவந்த உங்களது நூல்கள் பற்றிச் சொல்லுங்கள்?

2012 ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை பின்வரும் 11 நூல்களை நான் வெளியிட்டுள்ளேன்.

இன்னும் உன் குரல் கேட்கிறது (கவிதை) 2012 – புரவலர் புத்தகப் பூங்கா
வைகறை (சிறுகதை) 2012 – இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம்
காக்காக் குளிப்பு (சிறுவர் கதை) 2012 – ரூம் டு ரீட்
வீட்டிற்குள் வெளிச்சம் (சிறுவர் கதை) 2012 – ரூம் டு ரீட்
இதோ பஞ்சுக் காய்கள் (சிறுவர் கதை) 2012 – ரூம் டு ரீட்
மரத்தில் முள்ளங்கி (சிறுவர் கதை) 2013 – ரூம் டு ரீட்
திறந்த கதவுள் தெரிந்தவை ஒரு பார்வை (நூல் விமர்சனம்) 2013 – கொடகே பதிப்பகம்
நட்சத்திரம் (சிறுவர் பாடல்) 2014 – ஸ்பீட்மார்க் பதிப்பகம்
மெல்லிசைத் தூறல்கள் (பாடல்) 2015 – கொடகே பதிப்பகம்
மழையில் நனையும் மனசு (கவிதை) 2017 – பூங்காவனம் இலக்கிய வட்டம்
மான் குட்டி (சிறுவர் பாடல்) 2021 – பூங்காவனம் இலக்கிய வட்டம்

உங்களது இன்னும் உன் குரல் கேட்கிறது கவிதை நூல் குறித்து விசேடமாகக் குறிப்பிட விரும்புவது என்ன?

ஆரம்ப காலங்களில் நான் எழுதிய கவிதைகளைத் தொகுத்தே இன்னும் உன் குரல் கேட்கிறது என்ற கவிதை நூலை வெளியீடு செய்தேன். புரவலர் புத்தகப் பூங்கா மூலமாக வெளிவந்த இந்த நூலே இலக்கிய உலகில் என்னை எழுத்தாளராக முதன் முதலில் அடையாளப்படுத்தியது. அதுவரை காலமும் பத்திரிகைகள், சஞ்சிகைகளில் எழுதி வந்த நான் ஒரு எழுத்தாளராக பரிணமித்த தருணம் இந்த நூல் வெளியீட்டின் மூலமே கிடைத்தது. இந்த நூலில் 56 கவிதைகள் காணப்படுகின்றன. காதலின் ஏக்கம், காதல் தந்த ஊக்கம் மற்றும் காதல் தோல்வி போன்ற இளம் பருவத்தினரின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் கவிதைகளை இந்தக் கவிதைத் தொகுதி அதிகமாகக் கொண்டிருந்தாலும் குறிப்பிடத்தக்க அளவு சமூகக் கவிதைகளையும் இந்த நூலில் உள்ளடக்கியுள்ளேன். 2012 இல் நடைபெற்ற இந்த நூல் வெளியீட்டை என்னால் மறக்கவே முடியாது. காரணம் எனது முதலாவது நூல் வெளியீட்டுக்கு ஊரிலிருந்து எனது பெற்றோர்களும் சகோதரர்களும் ஒரு சில உறவினர்களும் நண்பர்களும் கலந்து சிறப்பித்து, இந்த நிகழ்வின் மூலம் மறக்க முடியாத அலாதியான இன்பத்தைத் தந்தார்கள்.

ஊவா மாகாண தமிழ் சாகித்திய விழாவில் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து கௌரவித்த போது..
ரிம்ஸாவும் ரிஸ்னாவும்
மெல்லிசைத் தூறல் பாடல் நூல் வெளியீட்டின் போது உளவளவியலாளர் யூ.எல்.எம். நவ்பர் அவர்களினால் ரிஸ்னாவின் பெற்றோருக்கு கௌரவப் பிரதி வழங்கி வைக்கப்பட்ட போது.
பாடகர் கலைக்கமல் அவர்களின் ஏற்பாட்டில் நடந்த மண் வாசனையில் மகரந்தப் பூக்கள் எனும் பாடல் இறுவட்டு வெளியீட்டின் போது தினக்குரல் ஆசிரியர் வீ தனபாலசிங்கம் அவர்களினால் சிறந்த பாடலாசிரியர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட போது.. (இவ் இறுவட்டில் ‘மக்காவில் பிறந்த மாணிக்கமே’ என்ற பாடல் உள்ளடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மழையில் நனையும் மனசு என்ற உங்களது கவிதை நூலில் உள்ளடங்கி யுள்ள கருப்பொருட்கள் குறித்தும், இந்தத் தலைப்பை நூலுக்குச் சூட்டியமைக்கான காரணி குறித்தும் கூறுங்கள்?

மழையில் நனையும் மனசு என்ற எனது கவிதை நூலில் 77 கவிதைகளுடன் ஒரு சில கவிதைத் துளிகளும் காணப்படுகின்றன. இதில் சமூக அக்கறை சார்ந்த கவிதைகளே அதிகமாகக் காணப்படுகின்றன. ஒரு கவிதைத் தொகுதியைத் தொட்டுப் பிரித்து, அந்த நூல் வாசனையோடு கவிதைகளையும் வாசிக்கும் போது ஏற்படும் உணர்வு சொர்க்கமாகும். அது ஆன்மாவை ஈரமாக்கும். அந்த இன்பம் வாசித்து உணர்ந்தவர்களுக்கே புரியும். அத்தகைய ஒரு இன்பமான உணர்ச்சிக் கலவையை வார்த்தைகளில் வடிக்க முற்பட்டேன். அதனாலேயே என் கவிதைத் தொகுதிக்கு மழையில் நனையும் மனசு என்று பெயரிட்டேன். இத்தலைப்பு பெரும்பாலானவர்களைக் கவர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த நூலில் இருந்து விந்தை உலகம் (பக்கம் 23) என்ற கவிதையை வாசகர்களின் இரசனைக்காகத் தருகிறேன்.

விந்தை உலகம்

பசுக்களிடம் பால் கறந்து
பாலிலே நீர் கலந்து
வியாபாரம் செய்கின்ற
விந்தையான உலகமிது!

பாம்பிடம் நலம் கேட்டு
பன்றியிடம் கைகுலுக்கி
அப்பாவி முயல்களை
அறுக்கின்ற உலகமிது!

தீயவனின் தலை தடவி
குடிகாரனைக் கும்பிட்டு
ஏழைகளை மிதிக்கின்ற
ஏமாற்று உலகமிது!

காமுகனின் கால் பிடித்து
கயவனிடம் ஆசி பெற்று
கற்றவரை அவமதிக்கும்
கபடமான உலகமிது!

குயவனிடம் அரிசி கேட்டு
தச்சனிடம் பானை கேட்டு
விவசாயியை விலை பேசும்
விசித்திர உலகமிது!

அரசனிடம் அடிவாங்கி
அமைச்சரிடம் பல்லிளித்து
ஆங்கிலம் பேசித் திரியும்
அறிவற்ற உலகமிது!

மனைவியை விட்டு விட்டு
மதுவிடம் சரணடைந்து
வேறு பெண்ணை தேடுகின்ற
வேஷமான உலகமிது!

கற்பினை பறித்தெடுத்து
காதலியை சந்தேகித்து
புதுக் காதல் தேடுகின்ற
புனிதமற்ற உலகமிது!!!

இந்த நூலின் கவிதைத் தலைப்பு களையும் கவித்துவமாகவே கையாண்டு இருக்கிறேன். இந்த நூல் வெளியீட்டின் போது கவிஞர் தமிழ்த் தென்றல் அலி அக்பர் அவர்கள், உள்ளடக்கத்திலுள்ள கவிதைத் தலைப்புகள் அனைத்தையும் வாசித்துக் காட்டி, இந்தத் தலைப்புகளின் கோர்வையே ஒரு தனிக் கவிதையாக இருப்பதாக தனது உரையின் போது சிலாகித்துப் பேசினார்.

உங்களுக்குள் சிறுகதைகள் எவ்வாறு உருவாகின்றன? உங்களது வைகறை என்ற சிறுகதை நூலின் கருப்பொருட்கள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

அன்றாடம் நம்மைச் சுற்றி நிகழ்ப வற்றைக் கூர்ந்து அவதானித்தாலே எமக்குத் தேவையான கதைக் கரு கிடைத்துவிடுகிறது. அல்லது சில பொழுதுகளில் நாம் செய்திகளின் ஊடாக கேட்கின்ற, வாசிக்கின்ற, நாம் அன்றாடம் கேள்விப்படுகின்ற விடயங்களில் கூட கதைக் கரு காணப்படலாம். அவற்றில் தேவையானவற்றை மாத்திரம் தெரிவு செய்து அதை ஒரு சிறுகதையாக மாற்றுவதில் தான் எமது திறமை காணப்படுகிறது. எனது நூலில் காணப்படுகின்ற பல சிறுகதைகள் நான் கேள்வியுற்றவையும் வாசித்து அறிந்தவையும் பற்றியதான சம்பவங்களை மையமாக வைத்தே எழுதப்பட்டுள்ளன. ஓரிரு சிறுகதைகளில் மட்டுமே நேரில் கண்ட அனுபவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனது வைகறை என்ற சிறுகதை நூலில் 21 சிறுகதைகள் காணப்படுகின்றன.

உதாரணமாக அழகன் என்ற சிறுகதை யானது உண்மையில் மூன்று வயது நிரம்பிய ஒரு ஆண் குழந்தையைப் பற்றியதாகும். எனினும் நான் அதனை எனது நண்பர்களிடம் சொல்லும் போது ஒரு வாலிபனைப் போல சித்தரித்துச் சொன்னேன். இறுதியில்தான் அது ஒரு மூன்று வயதுக் குழந்தை என்று சொன்னபோது அவர்கள் செல்லமாகக் கோபித்து, என்னைக் கடிந்து கொண்டார்கள். அந்த அனுபவத்தையே எனது கதையில் பதிவு செய்துள்ளேன்.

மாற்றம் என்ற சிறுகதை ஒரு ஏழை மாணவன் பற்றியதாகும். தன் வகுப்பில் கற்ற ஏழைச் சிறுவனான முரளி என்ற மாணவனை சித்ரா டீச்சர் வார்த்தைகளால் துன்புறுத்துகிறார், அவமானப்படுத்துகிறார். நன்றாகக் கற்று பல்கலைக்கழகம் வரை சென்ற போதும் ஏழை என்ற காரணத்தால் முரளி ஏனைய மாணவர்களால் அங்கும் நிராகரிக்கப்படுகின்றான். அதையெல்லாம் தாண்டி அவன் நன்கு கற்று, சிறப்பாகச் சித்தியடைந்து, இறுதியில் ஒரு வைத்தியராக மிளிர்கின்றான். ஏழை முரளிதான் தற்போது வைத்தியர் முரளி என்று அறியாத சித்ரா டீச்சர் தன் மகளுக்கு முரளியை மணமகனாக்க எண்ணுகிறார். இறுதியல் என்ன நடந்தது என்பதே கதையின் சுவாரசியமான நகர்வாகும்.

உங்களுக்குப் பிடித்த சிறுகதையாசிரி யர்கள் மற்றும் நாவலாசிரியர்கள் ஆகி யோரின் படைப்புகள் குறித்து?

சொல்ல வந்ததை பிசறின்றி சொல்லும் பாங்கும் பிரதேச வழக்கும் வட்டார மொழிகளும் சிறுகதையின் ஸ்தீரத் தன்மையைத் தீர்மானிக் கின்றன. திக்குவல்லை கமாலின் முட்டைக் கோப்பி, உ.நிசாரின் கால சர்ப்பம், பவானி சிவகுமாரனின் மரம் வைத்தவன், தேடலே வாழ்க்கையாய், நிஜங்களின் தரிசனம், மரீனா இல்யாஸ் ஷாஃபியின் குமுறுகின்ற எரிமலைகள், நீர்வை பொன்னையனின் காலவெள்ளம், நிமிர்வு, நினைவுகள் அழிவ தில்லை மற்றும் வந்தனா, திக்குவல்லை ஸப்வானின் உம்மாவுக்கு ஒரு சேலை, வாப்பாவுக்கு ஒரு சால்வை, சூசை எட்வேடின் இவன்தான் மனிதன் போன்ற சிறுகதை நூல்கள் என்னை மிகவும் கவர்ந்தவை.

அதேபோல நாவலைப் பற்றி சொல்வதானால் தொடர்ந்து வாசிக்க வேண்டும் என்ற உணர்வும் விறுவிறுப்பும் நாவலில் இருந்து மீள முடியாத தன்மையும் கொண்டனவாக அமைதல் வேண்டும். இந்தவகையில் நயீமா சித்தீக்கின் வாழ்க்கைப் பயணம், மல்லவப்பிட்டி சுமைரா அன்வரின் விடியலில் ஓர் அஸ்தமனம் மற்றும் வசந்தங்கள் வாழ்த்துச் சொல்லும், ஸனீரா காலிதீனின் அலைகள் தேடும் கரை, இரா. சடகோபனின் கசந்த கோப்பி மற்றும் உழைப்பால் உயர்ந்தவர்கள், சுலைமா சமி இக்பாலின் ஊற்றை மறந்த நதிகள், மா.பா.சி. பாலசிங்கத்தின் தழும்பு (இரு குறுநாவல்கள்), திக்குவல்லை கமாலின் பாதை தெரியாத பயணம் மற்றும் வீடு, உ. நிசாரின் கோதுமைக்கனி, மைதிலி தயாபரனின் வாழும் காலம் யாவிலும் மற்றும் சொந்தங்களை வாழ்த்தி, ஆனந்தியின் இரு குறுநாவல்கள், கெக்கிறாவ ஸஹானாவின் ஒரு கூடும் இரு முட்டைகளும் ஆகிய நாவல்களை வாசித்த சுகானுபவம் இன்னும் என் நெஞ்சைவிட்டு நீங்கவில்லை.

ஒருவர் ஏன் வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்?

வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதனூடாகத்தான் எமது சிந்தனைத் திறனை பரந்துபட்டதாக ஆக்கிக்கொள்ள முடியும். அன்றாட நிகழ்வுகள், உலகில் காணப்படும் சமகாலப் பிரச்சினைகள் அதே போன்று மனித அவலங்கள் போன்றவற்றை அறிந்து கொள்ள முடியும். தற்போது பத்திரிகையை விடுத்து ஃபேஸ்புக் மற்றும் ஏனைய சமூக வலைத்தளங்களிலும் தகவல்களை வாசித்து உடனுக்குடன் அறிந்துகொள்ளக் கூடிய வசதி காணப்படுகின்றது.

பாடல்களை எழுதும் போது பாடலா சிரியர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய மான விடயங்கள் என்ன?

பாடல்களை எழுதுவதில் மிக முக்கிய பங்கு வகிப்பது ஓசை நயம், சந்தம், படிமம் ஆகியனவாகும். கற்பனைக் குதிரையில் அமர்ந்து பயணம் செய்கின்ற செயலை ஒத்ததே பாடல் எழுதும் கலையாகும். பாடல்களின் அருமையையும் பெருமையையும் அறிய வேண்டுமெனில் பழங்காலப் பாடல்களையும் தற்காலத் தின் ஒரு சில பாடல்களையும் உதார ணங்களாகக் கொள்ளலாம். பல பொழுது களில் பாடல் வரிகளைவிட இசை முதலிடம் பெறுவதால் பாடல் வெற்றி பெறும் சூழ்நிலையும் உருவாகின்றமை கண்கூடு.

உங்களது மெல்லிசைத் தூறல்கள் என்ற நூலில் உள்ள பாடல்கள் குறித்தும் கூறுங்கள்?

மெல்லிசைத் தூறல்கள் என்ற எனது நூலில் 36 பாடல்கள் உள்ளடங்கியுள்ளன. வாழ்வின் எல்லா நிலைகளிலும் இருந்து இப்பாடல்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இன்பங்கள் பொங்கும் இரு பெரு நாளிலே என்ற எனது பாடல் பிரபல இசை அமைப்பாளரும் பாடகருமான திரு. டோனி ஹஸன் அவர்களினால் இசையமைத்துப் பாடப்பட்டு ஒரு ஹஜ் பெருநாள் தினத்தில் நேத்ரா அலை வரிசையில் ஒலி, ஒளிபரப்புச் செய்யப்பட்டுள்ளது. அதேபோல பிரபல பாடகர் கலைக்கமல் அவர்களினால் இசையமைத்துப் பாடப்பட்ட மக்காவில் பிறந்த மாணிக்கமே என்ற எனது பாடல் மண் வாசனையில் மகரந்தப் பூக்கள் என்ற பெயரில் வெளிவந்த இறுவட்டிலும் சேர்கக்கப்பட்டுள்ளது. இந்த இறுவட்டு வெளியீட்டு நிகழ்வின் போது பாடகர் கலைக்கமல் அவர்கள் விருது வழங்கி என்னை கௌரவித்தார். மேலும் எனது நூல் வெளியீட்டின் போதும் இந்தப் பாடல் மேடையில் ஒலிபரப்பு செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

நீங்கள் சிறுவர் இலக்கியத் துறைக்கும் காத்திரமான பங்களிப்பைச் செய்துள்ளீர் கள். அந்தவகையில் அண்மையில் வெளியிட்ட மான் குட்டி என்ற சிறுவர் பாடல் நூல் பற்றிக் குறிப்பிடுங்கள்?

இந்நூல் தேசிய நூலக ஆவண வாக்கல் சபையின் அனுசரணையில் வெளியிடப்பட்டது. இதில் 13 சிறுவர் பாடல்கள் காணப்படுகின்றன. பாலர் வகுப்பு மாணவர்களின் சிந்தனைக்கு விருந்தான பாடல்களும் கண்ணுக்கு விருந்தான சித்திரங்களும் இதில் உள்ளடக்கம் பெற்றுள்ளன. இந்நூலுக்கான அணிந்துரையை பேராசிரியர் செ. யோகராசா அவர்கள் வழங்கி இருக்கிறார். சிறுவர் இலக்கியப் படைப்பில் இது எனது ஆறாவது நூல் என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய ரீதியிலான கவிதைப் போட்டியில் முதலிடம் பெற்றமைக்காக கம்பன் விழாவின் போது இராஜாங்க அமைச்சர் ஹசன் அலி அவர்களினால் தங்கப் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்ட போது.

தனது குழந்தைகளிடம் வாசிப்புப் பழக் கத்தை ஏற்படுத்த விரும்பும் பெற்றோர்கள் ஆரம்பத்தில் எவ்வாறான புத்தகங்களை தமது குழந்தைகளுக்கு தெரிவு செய்து கொடுக்க வேண்டும்?

தற்காலத்தில் சிறுவர் இலக்கிய நூல்கள் பல வெளிவந்துள்ளன. பாடசாலை மாணவர்களுக்கு ஏற்றது என்று தேசிய நூலக ஆவணவாக்கல் சபையினால் அனுமதிக்கப்பட்ட சிறுவர் நூல்கள் மற்றும் ஏனைய சிறுவர் நூல்களையும் பெற்றுக் கொடுப்பது மிகவும் சிறந்தது. பாடல் பாணியிலான வாசிப்பை அல்லது சிறுகதைப் பாணியிலான வாசிப்பை விரும்பும் சிறுவர்களை இனங்கண்டு அவர்களது இரசனைக்கேற்ற நூல்களை அவர்களது பிறந்த நாள் போன்ற விசேட சந்தர்ப்பங்களில் பரிசாகக் கொடுக்கலாம்.

உங்கள் எழுத்துக்களில் எவ் ஆளுமையின் தாக்கம் காணப்படுகின்றது?

எனது படைப்புகளில் குறிப்பாக இன்னாரின் தாக்கம் இருக்கும் என்று சொல்வதற்கு இல்லை. காரணம் நான் பல்வேறுபட்ட புத்தகங்களையும் வாசிப் பேன். இந்திய இலக்கியங்கள், இலங்கை இலக்கியங்கள், ஜனரஞ்சக படைப்புகள், கம்யுயூனிசம் சார்ந்த நூல்கள், இஸ்லா மிய வரலாற்று நூல்கள், சங்க கால செய்யுள்கள் போன்ற அனைத்துமே எனக்கு மிகவும் பிடிக்கும். எனவே எனது படைப்புகளில் இவற்றின் சாயல் எனக்குத் தெரியாமலேயே வந்துவிடக் கூடும். எனினும் நான் எனது பாணியில் தனித்துவமாக எழுதுவதிலேயே பேரவா கொண்டுள்ளேன்.

இலக்கியப் பணி சார்ந்த உங்கள் கொள்கை என்னவென்று சொல்லுங்கள்?

இலக்கியப் பணி என்பது சமூகப் பணியாகும். படைப்புகளின் மூலம் வாசகர்கள் கொஞ்ச நேரமாவது திருப்தியாகவும் ஆசுவாசமாகவும் மனக் கவலைகளுக்கு ஒரு மருத்துவமாகவும் எமது எழுத்துகளைக் கொண்டால் அதனைவிட வேறு சிறப்பு கிடையாது. எழுத்து வாண்மையால் சரித்திரங்களை உருவாக்க முடியும். கல்வெட்டுகளைப் பதித்திட முடியும். பிளவுபட்ட குடும்பங்களை ஒன்று சேர்க்க முடியும். உறவுகளைப் பலப்படுத்த முடியும். ஊர் நிர்வாகத்தை திறம்பட உதவி செய்ய முடியும். பணக்காரர்கள் ஏழைகளுக்கு உதவிட வழி செய்ய முடியும். இவ்வாறான பல விடயங்களை எழுத்துக்கள் மூலம் நடாத்த முடியும். எனவே எழுத்தாளர்கள் எல்லோரையும் என் மரியாதைக்கும் கௌரவத்துக்கும் நேசத்திற்கும் உரியவர்களாகவே நான் பார்க்கிறேன்.

வாசிப்புக்கு உகந்த நேரம் எது? அதை எவ்வாறு திட்டமிட்டு வினைத்திறனான முறையில் பயன்படுத்திக் கொள்வது?

என்னைப்பொருத்தவரை வாசிப்பதற்கு உகந்த நேரம் இதுதான் என்று வரையறை செய்ய முடியாது. நம்மை நாம் சுதந்திரமாக உணர்ந்து கொள்ளக்கூடிய ஏதுவான தனிமையான சந்தர்ப்பங்களையெல்லாம் வாசிப்பதற்கு சிறந்த நேரங்களாகக் கொள்ளலாம். பாட சாலைக் கல்வி நடவடிக்கைகளைக் குறித்த நேரத்துக்குள் செய்வது போன்று இலக்கியம் படைக்க முடியாது. எப்போது தோன்றுகிறதோ அப்போது வாசித்துவிட வேண்டும். எப்போது தோன்றுகிறதோ அப்போது எழுதிவிட வேண்டும். ஜனரஞ்சக நூல்கள், செறிவான இலக்கிய நூல்கள் என்று எல்லா நூல்களையும் வாசித்து அறிந்தால் சிறந்த இலக்கிய நூல்களைப் படைக்க முடியும்.

மலையக முஸ்லிம்களின் இலக்கியப் பங்களிப்புகள் பற்றி விசேடமாக என்ன கூற விரும்புகிறீர்கள்?

மலையக முஸ்லிம்கள் என்று எடுத்துக் கொண்டால் அவர்களின் இலக்கிய பங்களிப்பு குறிப்பிட்டுச் சொல்லத் தக்க அளவில் அமைந்திருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. அதற்காக மலையக எழுத்தாளர்களை ஊக்கு விப்பதற்கான முஸ்லிம் அமைப்புகள் அல்லது நிறுவனங்கள் உருவாகி தொடராக இயங்க வேண்டும். முஸ்லிம் எழுத்தாளர்கள் அனைவரையும் ஒன்று சேர்த்து, அவ் அமைப்பானது ஒன்றிணைத்து செயற்பட வேண்டும். குழு விவாதங்களை, இலக்கியக் கூட்டங்களை மலையகத்தில் தொடர்ந்து இடம்பெறச் செய்தால் எழுத்தாளர்களின் பங்களிப்பானது தொடரக் கூடிய நிலை ஏற்படும்.

கிழக்கு மாகாணத்தில் இலக்கிய அமைப்புகள் தொடர்ச்சியாக இயங்கி வருகின்றன. அவை எழுத்தாளர்களின் நூல்களைக் கொள்வனவு செய்கின்றன. எழுத்தாளர்களை அங்கீகரிக்கின்றன. நூல் வெளியீடுகளை செய்து கொடுத்து அவர்களை ஊக்கப்படுத்துகின்றன. ஆளு மையான பல எழுத்தாளர்களையும் கௌர விக்கின்றன.

இதுபோன்று மலையகப் பிரதேசங் களிலும் அமைப்புகள் உருவாகி எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் ஆக்க பூர்வமான நிகழ்வுகள் இடம்பெறுமாயின் எழுத்தாளர்களின் பங்களிப்பும் அதிக மாகக் காணப்படும்.

இலக்கிய உலகில் கற்றுக்கொண்டவற்றில் நீங்கள் வாசகர்களுக்குக் கூற விரும்புவது என்ன?

இலக்கிய உலகம் என்பது நீச்சல் தடாகம் போன்றது. நீச்சல் தெரிந்தவர்கள் அழகாக நீந்தி கரையேற முடியும். ஒவ் வொரு கட்டத்திலும் எங்களை நாங்களே செதுக்கிக் கொள்ள வேண்டும். எங்களை நாங்களே பலப்படுத்திக் கொள்ள வேண்டும். எங்கள் பெயர்களைப் பதித்துக் கொள்ள வேண்டும். கொஞ்ச நாட்கள் இயங்காவிட்டால் இலக்கிய உலகத்தில் இருந்து ஓரம் கட்டப்பட்டு விடுவோம். எனவே எங்களை நிலை நிறுத்திக் கொள்ளும் செயற்பாடுகளை நாங்களே செய்து கொள்ள வேண்டும்.

பூங்காவனம் சஞ்சிகையின் துணையாசி ரியராக என்ன சொல்வீர்கள்?

பூங்காவனம் சஞ்சிகை 38 இதழ்கள் வெளிவந்துள்ளன. இளையோரின் இலக்கியத் தாகத்துக்கு நீர் ஊற்றிய இந்தச் சஞ்சிகையின் முதலாவது இதழ் 2010 ஆம் ஆண்டு மே மாதம் வெளியீடு செய்யப்பட்டது. இந்தச் சஞ்சிகையின் ஒவ்வொரு இதழிலும் பெண் ஆளுமைகள் நேர்காணல் செய்யப்பட்டுள்ளனர். அத்தோடு வளர்ந்து வரும் எழுத்தாளர்கள், மூத்த இலக்கியவாதிகள் என்ற பேதம் இன்றி அனைவரது ஆக்கங்களும் சஞ்சிகையில் இடம் பெற்றுள்ளமை இதன் சிறப்பு எனலாம். ஆக்கங்களைத் திரட்டுதல், அதனை தரம் பிரித்தல், தட்டச்சு, அட்டை வடிவமைப்பு, பக்க வடிவமைப்பு போன்ற ஒவ்வொரு விடயத்தையும் துணை ஆசிரியர் என்ற வகையில் நானும் பிரதம ஆசிரியர் என்ற வகையில் எழுத்தாளர் ரிம்ஸா முஹம்மத் அவர்களும் செய்து வந்தோம். கொரோனாத் தொற்றின் போது ஏற்பட்ட நிதி முடக்கத்தால் சற்று தடுமாறினாலும் தொடர்ந்து சிறப்பாக வெளியிட வேண்டும் என்பதே எமது உறுதியான நிலைப்பாடு ஆகும்.

இந்த தலைமுறையினர் வாசகசாலைகளை சரியாகப் பயன்படுத்துகின்றனரா? வாசிப்புப் பழக்கமானது ஒர் எழுத்தாளர் என்ற வகையில் உங்களுக்கு எந்தளவு கை கொடுத்துள்ளது?

இன்றைய காலகட்டத்தில் குறிப் பிட்ட சில இடங்களில் பெற்றோர்கள் வாசகசாலைகளுக்கு பிள்ளைகளை அழைத்து வருவதை நாம் காணக்கூடியதாக இருக்கிறது. அதேபோன்று பல்கலைக் கழக மாணவர்களும் வாசகசாலையைப் பயன்படுத்துகிறார்கள். எனினும் பொது வாக நோக்கினால் ஸ்மார்ட் தொலை பேசிகள் இன்று பல இளந்தலை முறையின ரின் வாசிப்பு, வாசகசாலை என்ற தேவையைப் பூர்த்தி செய்வதாகக் கருதப் படுகிறது. அதாவது வாசகசாலைக்கு ஏன் நேரம் எடுத்துச் செல்ல வேண்டும் என்ற ஒரு நிலையைத் தோற்றுவித்துள்ளது. எனவே வாசகசாலைகள் இன்று வெறும் சாலைகளாக மாறி வருகின்ற ஒரு சோகம் நிலவுகின்றது.

எனது எழுத்துத் துறைக்கான ஆரம்பமே வாசிப்பு மீது நான் கொண்ட ஆர்வம் எனலாம். புதிய சொல்லாடல் களை அறிந்துகொண்டது, மொழி வளத்தைப் பெற்றுக்கொண்டது, எதுகை மோனை களை அறிந்து அதற்கேற்றாற் போல சந்தக் கவிகளை உருவாக்க முடிந்தது போன்ற அனைத்தையும் வாசிப்பின் மூலமாகவே சிறப்பாக நிறைவேற்றிக்கொள்ள முடியு மாக இருந்தது. வாசிப்பின் மீது கொண்ட காதல்தான் எனக்கு எழுத வேண்டும் என்ற எண்ணத்தை அடிக்கடி தோற்று வித்தது. இன்றளவிலும் எனது எழுத்துத் துறை வற்றிப் போய்விடாமல் நீரூற்றிக் கொண்டிருப்பது வாசிப்புத்தான் என்பதே நிதர்சனமாகும்.

எதிர்கால இலக்கிய முயற்சிகள் குறித்து?

தட்டச்சு செய்த நிலையில் கவிதை, சிறுகதை, நாவல் ஆகிய 03 தொகுதிகள் என் கைவசம் இருக்கின்றன. அதனை அச்சிட்டு வெளியிடுவதற்கான சூழ்நிலை தற்போது கைகூடவில்லை. இலங்கையின் பொருளாதார வீழ்ச்சியி னால் ஏற்பட்ட விலைவாசியின் உச்சம், எல்லாத் துறைகளிலும் மந்தகதியை ஏற்படுத்தியிருக்கிறது. அச்சகச் செலவு கள், தபால் செலவுகள், மண்டபச் செலவுகள், போக்குவரத்துச் செலவுகள் என்று எல்லாமே வான் எட்டும் தூரத்தில் காணப்படுகின்றன. இப்படியான இப் போதைய சூழ்நிலையில் ஒரு புத்த கத்தை வெளியீடு செய்வது என்பது பகல் கனவாகவே இருக்கிறது. காலம் கனியட்டும், காத்திருக்கிறேன்.

இதுவரை உங்களுக்கு அல்லது உங்கள் இலக்கியப் பணிகளுக்குக் கிடைத்த விருதுகள் பற்றிக் கூறுங்கள்?

எனது படைப்புகளுக்கு பல பரிசுகள், பாராட்டுப் பத்திரங்கள், விருதுகள் கிடைத்திருக்கின்றன. இருப்பி னும் எனக்குக் கிடைத்த பல விருதுகளில் பின்வரும் சில விருதுகள் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியவையாகும்.

2013 இல் அகில இலங்கை கவிஞர் களின் சம்மேளனம் – காவிய பிரதீப விருது (கவிச்சுடர் விருது)

2015 இல் ஊவா மாகாண சாகித்திய விழா – ஆக்க இலக்கியவாதிக்கான எழுசுடர் விருது

2016 இல் இலங்கை இஸ்லாமிய கலை இலக்கிய ஆய்வகம் – எழுத்தாளருக் கான கௌரவ விருது

2018 இல் பாணந்துறை இஸ்லாமியப் பேரவை மற்றும் இலக்கிய வட்டம் – கலையொளி விருது

2021 இல் புதிய அலை கலை வட்டம் – வெற்றியாளர் விருது

என் இலக்கியப் பணிகளுக்கான அங்கீகார மாக இவ்வாறான விருதுகளைப் பெற் றதில் பெருமிதம் கொள்கிறேன். தகுதியா னவர்களுக்கு வழங்கப்படுகின்ற விருது களானது அவரவரது திறமைகளை மென் மேலும் வலுப்படுத்திக் கொள்வதற்கான ஒரு வாய்ப்பாகவும் உந்து சக்தியாகவும் அமைகின்றது. சர்ச்சையாக இருக்கக்கூடிய ‘காசுக்கு விருது கொடுத்தல்’’ என்ற விடயம், தகுதி இல்லாதவர்களின் தலைக்கனத்தை மென்மேலும் அதிகரிப்பதற்கான ஒரு வழியாக பார்க்கப்படுகின்றமை கோடிட்டுக் காட்டக்கூடியதாகும்.

இறுதியாக என்ன சொல்ல விரும்பு கிறீர்கள்?

இலக்கியத்தின் மூலம் தன் ஓய்வு நேரத்தைப் பயனுள்ளதாகக் கழிக்கும் என் சக நண்பர்களை எண்ணி பூரிப் படைகிறேன். ஏனெனில் உடலுக்கு நாம் கொடுக்கும் ஓய்வு போலத்தான் உள்ளத்துக்கும் ஓய்வு கொடுக்க வேண்டும். மன நிம்மதிக்கான உற்று என்பது இலக்கியத்தின் மூலம் கிடைத்துவிடுகிறது. துக்கம் யாவும் தொலைந்து போவதற்கு இயற்கையின் அழகைப் பற்றிய ஒரு சிறு கவிதை போதுமாக இருக்கிறது.

இறுதியாக தமிழ்நெஞ்சம் சஞ்சிகை ஆசிரியருக்கும், அதன் குழுவினருக்கும் என்னை நேர்காணல் செய்த உங் (படைப்பாளி ரிம்ஸா முஹம்மத் அவர்)களுக்கும் இச்சந்தர்ப்பத்தில் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

கொழும்பு பல்கலைக் கழகத்தின் இதழியல் கற்கைநெறி பட்டமளிப்பு நிகழ்வின் போது..
ஊவா மாகாண தமிழ் சாகித்திய விழாவின் போது கௌரவ அமைச்சர் வடிவேல் சுரேஷ் அவர்களினால் சிறந்த ஆக்க இலக்கியவாதிக்கான «எழுசுடர் விருது» மற்றும் பொன்னாடை, பொற்கிழி ஆகியன வழங்கி கௌரவிக்கப்பட்ட போது.

1 Comment

விஜி சிவா · மார்ச் 22, 2023 at 9 h 32 min

மதிப்பிற்குரிய ‘தமிழ் நெஞ்சம் ‘ இதழின் ஆசிரியர் அமின் ஐயா அவர்களுக்கு வணக்கமும் ,அன்பின் நன்றியும் பல … பல.

நாங்கள் நால்வரும் ( வனஜா முத்துக்கிருஷ்ணன் , கி. இரகுநாதன் , ருக்மணி வெங்கட்ராமன் ,விஜி சிவா ) இணைந்து எழுதிய கதையை ( ருத்ரன் ) தங்கள் இதழில் பிரசுரம் செய்து , எங்கள் அனைவரின் எழுத்துகளுக்கும் மகிழ்சிப் பூக்களை சொரிந்தீர்கள்.

தங்களின் உற்சாகமான , ஊக்கமூட்டும் வார்த்தைகளே எங்களை இன்னும் பலப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தையும் , இன்னும் சிறப்பாக அமைப்போம் என்ற நம்பிக்கையையும் கொடுக்கின்றன .

தங்கள் பத்திரிக்கையின் வெற்றிக்கு காரணம், தங்களின் அயராத உழைப்பு மட்டுமல்ல …. வாசகர்களை உற்சாகப்படுத்தி , நம்பிக்கை ஏற்படுத்தும் உயர்ந்த உள்ளமும் காரணம் என்பதை அறிந்தோம் .

எங்களை ஊக்கப்படுத்திய தங்களின் அன்பிற்கு என்றும் மகிழ்வுடன் நன்றி பல .

‘தமிழ் நெஞ்சம் ‘ இதழ் மென்மேலும் வளர மனமார வாழ்த்துகிறோம் .

என்றும் அன்புடன்

– விஜி சிவா.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

நேர்காணல்

சோழவந்தான் கவிச்சிங்கம்…

மதுரை என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது தமிழ். தமிழின்றி மதுரையில்லை; மதுரையின்றித் தமிழின் வரலாற்றை எழுதிவிட முடியாது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சங்கம் வைத்து நம்மொழியை வளர்த்தவர்கள் மதுரை மக்கள். இன்றும் பல்வேறு பெயர்களில் சங்கம் வைத்து , அறக்கட்டளை வைத்து, மன்றங்கள் வைத்து, புலனக்குழு முகநூல்குழுக்கள் வைத்து மொழியை வளர்த்துவரும் மதுரையில் அதன்பெயரிலேயே தமிழ்மதுரை அறக்கட்டளை எனும் பெயரில் ஒரு அறக்கட்டளை வைத்து , மொழிவளர்க்கும் சான்றோர்களுக்குப் விருது வழங்கி , பள்ளி கல்லூரிகளுக்குச் சென்று தமிழ்ப்பற்றை அதிகப்படுத்தும் பணிகளச் செய்துவரும் ஒருவரே இம்மாதச் சிறப்பு விருந்தினர் ஆவார். ஆம் சித்தார்த் பாண்டியன் எனும் புனைப்பெயருடன் வலம்வரும் தூயதமிழ்ப் பற்றாளர் தமிழ்மதுரை அறக்கட்டளை நிறுவுநர் சோழவந்தான் கவிச்சிங்கம் தங்கபாண்டியன் அவர்களுடன் தமிழ்ச்செம்மல் இராம வேல்முருகன் செய்த நேர்காணல் இதோ..

நேர்காணல்

கலாபூஷணம் புசல்லாவை இஸ்மாலிஹா ராஜா

I மின்னிதழ் I நேர்காணல் I கலாபூஷணம் புசல்லாவை இஸ்மாலிஹா ராஜா

‘’மலையகத்தில் கற்றவர்கள் அதிகமாக காணப்படுவது பெருமைக்குரிய விடயமாகும்’’

மலையகக் கவிஞர், எழுத்தாளர்,

 » Read more about: கலாபூஷணம் புசல்லாவை இஸ்மாலிஹா ராஜா  »

நேர்காணல்

கிழக்கில் உதித்த தாரகை, இலக்கிய வானிலும் சாதனை

I மின்னிதழ் I நேர்காணல் I  மருத்துவர் ஜலீலா முஸம்மில்

தொழில்ரீதியாக மருத்துவராக சேவை செய்யும் டொக்டர் ஜலீலா முஸம்மில், பன்முகத் திறமைகளோடு இலக்கிய  வானிலும் ஆளுமை செய்கிறவர். சுறுசுறுப்பில் தேனீயாக இயங்கி திக்குகள் எட்டிலும் துலங்குகிறவர்.

 » Read more about: கிழக்கில் உதித்த தாரகை, இலக்கிய வானிலும் சாதனை  »