மின்னிதழ் / நேர்காணல் எழுத்தாளர் சி.சுரேஷ்
நேயர்களுக்கு வணக்கம் பொதுவாக புத்தகங்கள் என்பது ஒரு மனிதனை செழுமைப்படுத்துவதற்கும் அவரோட வார்த்தையோட உண்மையான அர்த்தத்தை தெரிந்து கொள்வதற்கும் நம்மளோட அறிவை விரிவு படுத்துவதற்கும் அனுபவத்தை உண்மையான அனுபவங்களில் இருந்து நிறைய விஷயங்களை தெரிந்து கொள்வதற்கும் பயன்படுகிறது
அப்படிப்பட்ட சூழ்நிலையில் நம்முடைய தருமபுரியை சேர்ந்த பல புத்தகங்களை படைத்த ஒரு படைப்பாளி நம்ம கூட இருக்கிறார் கவிதைகளை வடித்துக் கொண்டிருக்கிறார் அவர வந்து இன்னைக்கு நிகழ்ச்சிகள்ல சந்திக்க இருக்கிறோம்.
எழுத்தாளர் கவிமுகில் சுரேஷ் அவர்களுடன் தருமபுரி பண்பலை 102.5 சார்பாக ஒளிபரப்பு அலுவலர் எஸ் கோபாலகிருஷ்ணன் அவர்கள் நேர்காணல் செய்கிறார்.
“வணக்கங்க சார்”
“வணக்கம் சார் வணக்கம்”
ஓர் படைப்பாளியாக மாறவேண்டும் என்கிற எண்ணம் உங்களுக்கு எப்ப தோன்றியது சார்.
குறிப்பாக நம்ம எல்லாருக்குள்ளேயுமே ஒரு படைப்பாளி இருப்பாங்க ஒவ்வொருத்தருக்குள்ளுமே ஒரு சில உந்துதல்கள் இருக்கும் ஆனா என்னெனா பல சூழ்நிலைகளை சொல்லி புறந்தள்ளிட்டு நம்முடைய பணிகளை பார்க்க ஆரம்பிச்சிடுவோம்
பொருளாதாரத்தில கவனம் செலுத்த ஆரம்பிச்சிடுவோம் இல்ல குடும்ப சூழ்நிலை காரணமாக குடும்பத்தை கவனிக்கிற பொறுப்பு.
இப்படி ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு சூழ்நிலை ஏற்பட்டுவிடும் அதையும் மீறி எல்லா எளிய மனிதர்களுக்குள்ளும் ஒரு படைப்பாளி இருக்கிறான் ஒரு கலைஞன் இருக்கிறான்.
அப்படி இருக்க உங்களுக்குள் இருக்கிற இந்த கலைத்திறமையை எப்படி கண்டுக்கிட்டீங்க அதற்கான முக்கியத்துவத்தை எப்படி கொடுக்க ஆரம்பித்தீர்கள்?
“நான் வந்து எட்டாம் வகுப்பு படிக்கும் போது இருந்து வீட்ல நிறைய நாவல்கள் படிப்பேன் சித்தப்பா உடன் நூலகம் போவேன்
சித்தப்பா, தாத்தா, பாட்டி எல்லாருக்கும் படிக்கிற பழக்கம் இருந்தது அவங்க எல்லாம் படிக்கும் போது நானும் படிக்க ஆரம்பிச்சேன் நிறைய புத்தகங்கள் வாசிக்க ஆரம்பித்தேன்
வாசிக்கிறவன் வாசகனாகி விடுகிறான். அந்த வாசித்தவைகளை மனதுக்குள்ளே வைத்து அது கரு கொண்டு ஒரு புதிய வடிவிலே அதை வெளிக்கொண்டு வரவேண்டும் என்று எனக்குள் ஒரு ஏக்கம் இருந்தது அவைகளை நான் எழுத ஆரம்பித்தேன்
அப்படி எழுத ஆரம்பித்து இன்றைக்கு கிட்டத்தட்ட எட்டு நாவல்கள், நாலு கவிதை தொகுப்புகள், மூன்று கட்டுரை தொகுப்புகள், இரண்டு சிறுகதை தொகுப்புகள் வெளிவந்துள்ளது புத்தகா டிஜிட்டல் மீடியாவிலும் எனது புத்தகங்கள் இருக்கிறது.
மாலை முரசு பத்திரிக்கையாளர்கள் வெளியிடுகிற வார நாவல் தேவியின் கண்மணியில் தொடர்ந்து நான் எழுதிக் கொண்டிருக்கிறேன்.
மற்ற இதழ்களிலும் எழுதிக் கொண்டிருக்கிறேன். நீங்கள் சொன்னது மாதிரி அந்த படிக்கிற பழக்கம் வந்ததுக்கு காரணம் எங்க குடும்பத்துல எல்லாருமே படிக்கிறவங்களா இருந்தாங்க.
நான் முதல் முதலாக வாசித்த “என் கண்மணி” என்ற ஒரு நாவல் அது பாலகுமாரன் எழுதியது அந்த புத்தகம் நான் எட்டாம் வகுப்பு படிக்கும் போது படித்தது மனதின் ஆழத்தில் ஊன்றிப் போனது.
தொலைந்து போன அந்த புத்தகத்தை இப்பொழுது எங்காவது அந்த அறிய பொக்கிஷம் கிடைக்காத என தேடி ஐநூறு ரூபாய் கொடுத்து அன்றைக்கு இரண்டு ரூபாய்க்கு விற்ற அதே புத்தகத்தை வாங்கி திரும்பும் அதை படிக்க ஆரம்பித்தேன்.
“Reader is leader” படிக்கிறவன் தான் ஒரு தலைவனாக மாறமுடியும் ஆகையால் படிக்காத ஒருவன் தலைவனாக வருகிறான் என்றால் ஒரு பக்குவப்படாத நிலை, அனுபவத்தின் வாயிலாக வருகின்ற தலைவர்கள் வேறு, பலருடைய அனுபவங்களை படித்து வருகின்ற தலைவனுடைய அந்த செயல்பாடுகள் வேறு.
எந்த துறையானாலும் அவர்கள் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் படிப்பு.
சரிங்க சார் இப்ப படிப்புன்றது ரொம்ப அவசியமானதுன்னு சொல்றீங்க. படிப்பு அப்படின்றத பார்த்தா நிறைய நேரங்களில் ஒரு குறிப்பிட்ட புத்தகங்களுக்குள்ளே சுருங்கிப் போயிடுது. அதாவது படிப்பு அப்படின்னா எல்லாரும் என்ன சொல்லுவாங்கன்னா… பாட புத்தகங்களை தான் சொல்லுவாங்க படிக்கும் பொழுது நமக்கு பாட புத்தகங்கள் இருக்கிறது பள்ளிக்கல்வி இருக்கட்டும் இல்ல கல்லூரி கல்வி ஆக இருக்கட்டும் அந்தப் பாடல் நூல்களுக்கு தான் நான் முக்கியத்துவம் கொடுக்கிறோம். தவிர, அந்த பாட நூல்களை தாண்டி ஒரு சிறுவயதிலேயே குழந்தைகளுக்கு கவிதை புத்தகம் கொடுப்பதோ, ஒரு கதை புத்தகம் கொடுப்பதோ, ஒரு கட்டுரையோ இல்ல ஒரு நல்ல நாவல்களை கொடுக்கிற பழக்கம் வந்து நமக்கு கொஞ்சம் குறைந்து கொண்டே வருகிறது. இருக்கு ஆனா குறைந்து கொண்டே வருகிறது ஆனாலும் நிறைய ஆர்வம் இருக்கிறது. நிறைய புத்தகத் திருவிழாக்கள் எல்லாம் கொண்டாடப்படுகின்ற சூழ்நிலையில் உயிர் போல இருக்கிறது ஆனா இது போதுமானது நீங்க நினைக்கிறீங்களா?
இப்ப நீங்க பாத்தீங்கன்னா விசஷ்வல் கம்யூனிகேஷன் அது நிறைய ஆனதுனால படிக்கிற பழக்கம் குறைஞ்சு போச்சு.
இப்ப புத்தகம் கூட பாத்தீங்கன்னா அது கூட ஒரு கவிதையில் நான் சொல்லி இருப்பேன்.
மனம் சுமந்த
பொதி மூட்டை
பள்ளிப் பாடம்
அவன் வந்து பள்ளியில் கொடுக்கக்கூடிய அந்த பாடங்கள் படிக்கறதுக்கே அவன் திணறுகிறான் மற்றது படின்னா அவனுக்கு நேரம் இல்லேன்றான்.
அவன் வாழ்க்கையை செம்மைப்படுத்துகிற நூல்கள் நீதி நெறிகளை போதிக்கின்ற நாவல்கள் சிறுகதைகள் கவிதைகள் இருக்கிறது ஆனா அவன் படிக்கிறது கஷ்டம்.
இன்றைக்கு அவனுக்கு ஏற்றபடி நாம் படைப்புகளை மாற்ற வேண்டிய சூழலுக்குள் வந்துட்டோம் ஏன் பார்த்தீங்கன்னா அன்னைக்கு பார்த்தீங்கன்னா கவிதைகள் நிறைய மரபுக் கவிதை அந்த கவிதை இந்த கவிதை எல்லாம் வாசிச்சாங்க.
இன்றைக்கு அதுக்கு எல்லாம் நேரம் இல்லை. இப்ப நாம ஏதாவது பேசினாலே நீ இப்ப என்ன சொல்ல வர அப்படின்ற அளவுக்கு வந்துட்டான்.
இப்ப அவனுக்கு தேவை துளிப்பாக்கள். அது அன்றைக்கே திருவள்ளுவர் ஐக்கூ எழுதி விட்டார். இன்றைக்கு அவனுக்கு ஏற்றபடி நாம் இனிமையாய் சுருக்கமாய் சொல்ல வேண்டும் அதைத்தான் விரும்புகிறான்.
ஆகையால், துளிப்பாக்கள் மூலம் நம்மால் பெரிய விஷயங்களை நம்மால் சொல்ல முடியும். அதுக்கு நான் நிறைய துளிப்பாக்கள் உதாரணம் காட்ட முடியும்.
குழந்தைகளுக்கான படைப்புகள் அப்படிங்கறது எந்த அளவுக்கு இப்ப இருக்குனு நீங்க நினைக்கிறீங்க படைப்புகள் அப்படின்னு நீங்க சொல்றீங்க வாசிக்க வைக்கும் முன்னால் அவர்களுக்கு ஏற்ற படைப்புகள் இருக்க வேண்டும் அப்படிப்பட்ட படைப்புகள் இப்ப எவ்வளவு வருதுன்னு நீங்க நினைக்கிறீங்க?
அவர்களுக்கான படைப்புகள் நிறைய பேரு எழுதிட்டு இருக்காங்க. பேராசிரியர் சோதி பழைய கவிஞர் ஆளா.வள்ளியப்பா அவருடைய புத்தகங்கள் எல்லாம் இருக்கிறது நிறைய புத்தகங்கள் இருக்கிறது
இன்றைக்கு பிள்ளைகள் அளவுக்கு அப்டேட் ஆகி அவங்க புரிந்து கொள்ளும் அளவிற்கு எழுதப்படுதல் வேண்டும். பக்கம் பக்கமாய் எழுதி திணிப்பதை விட ஒரு பக்கக் கதைகள் அவங்க எடுத்து படிச்ச உடனே அவன் எளிதாக புரிந்து கொள்ள அதிலிருந்து ஒரு நீதி போதனையும் கொடுக்கலாம்.
அது மாதிரி ஒரு பக்க கதைகள் நிறைய பிள்ளைகளுக்கு எழுதலாம். அப்படிப்பட்ட எழுத்தாளர்கள் நமக்கு அவசியம்.
அவனுக்கு எடுத்த உடனே ஒரு பெரிய புத்தகத்தை கொடுத்தால் சுமையா நினைப்பான். அவனுக்கு கொஞ்சம் கொஞ்சமாய் வாசிக்க பழக்க வைக்கணும். ஒரு பக்க கதைகள் அப்புறம் கவிதைகளில் துளிப்பாக்கள்
இப்படி வந்து அவன ஆரம்பத்திலேயேகொஞ்சம் டேஸ்ட் பண்ண வைக்கணும்.
எடுத்த உடனே ஒரு பெரிய புத்தகத்தை கொடுத்துட்டாங்கனா ஒரு எழுநூறு எட்டுநூறு பக்க புத்தகத்தை மட்டும் கொடுத்தீங்கன்னா அவனுக்கு படிக்கிற அந்த ஆர்வமே போயிடும்.
இன்று குழந்தைகளுக்காக எழுத்தாளர்கள் குறைவாக தான் இருக்கிறார்கள்.
இன்றைய குழந்தைகளுடைய மனநிலை என்ன? அவர்களுடைய நிலை என்ன? அவங்களுடைய உணர்ச்சிபூர்வமான நிலை அவங்களுடைய காரியங்கள் எல்லாவற்றையும் அறிந்து அதற்கு ஏற்றபடியான எழுத்துக்கள் அவசியப்படுகிறது.
இப்ப உங்களுடைய படைப்புகள் எல்லாம் எதை சார்ந்து எழுதியிருக்கிறீர்கள்? நாவல்கள் கவிதைகள் எழுதி இருக்கிங்க எதை தளமாக வச்சிகிட்டு எழுதி இருக்கிங்க?
நான் பெரும்பாலும் பெண்மை, பெண்களுக்கான சிறப்பு பெண்கள் அடிமைத்தனத்திலிருந்து அவர்கள் வெளியே எழும்பி வர வேண்டும் அவர்களுக்கு விடுதலை வேண்டும்.
பாரதியின் கண்ணம்மா அப்படின்ற ஒரு நாவல் எழுதினேன். அந்த நாவலில் நீங்க பாத்தீங்கன்னா பெண்களைக் குறித்து பாரதியார் என்னென்ன சிறப்புகள் எழுதியிருக்கிறாரோ அதை, அந்த பெண்களை என்னுடைய மொத்த உருவகமாய் வெளிப்படுத்துகிறதாய் அந்த நாவல் இருக்கிறது.
பாரதியின் கண்ணம்மாவில் படிக்காத ஒரு பெண் இந்த சமுதாயத்தில் எப்படி பாதிக்கப்படுகிறாள்.
அவள் படித்த பிறகு… எதையெதையெல்லாம் இந்த சமுதாயத்திலே அவள் சந்திக்க வேண்டியது இருக்கு. அதற்குப் பிறகு அவள் எப்படி இந்த சமுதாயத்தின் நிமிர்ந்து நிற்கிறாள் என பெண்மையை மையமாகக் கொண்டு எழுதப்பட்டது.
அது மட்டும் இல்லாமல் சமூக அவலங்கள், சமூக அநீதிகள், சமூகத்தினால் ஒதுக்கப்பட்டவர்கள், தள்ளப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் அவர்கள் வளர வேண்டும் சமூகத்தில் நிமிர்ந்து நிற்க வேண்டும் இப்படிப்பட்ட கருத்தோட்டத்தோடு கதைகள், சிறுகதை தொகுப்புகள், நாவல்கள் என எழுதி இருக்கேன்.
அடுத்து இப்படிப்பட்ட படைப்பாளிகள் உருவாகுவதற்கு என்னென்ன செய்யலாம்னு நீங்க நினைக்கிறீங்க?
எழுத்தாளர்கள் என்பவர்கள் காலத்தின் கண்ணாடிகள். எழுத்துக்கள் இன்றைக்கு மட்டுமல்ல நாளைய தலைமுறைகளுக்கும் தேவைப்படும். இன்னும் ஒரு ஐநூறு வருடங்கள் கழித்தும் இந்த சமூகம் எனும் தளத்தில் இயங்குது அப்படின்ற ஒரு பதிவு வந்து தெரிந்து கொள்வதற்க்கும், அது ஒரு முக்கியமான கருவியாக இருக்கிறது.
ஆமாம்.
நாம் அடுத்த எழுத்தாளர்களை உருவாக்கும் ஒரு சூழல் ஏதுவான சூழல் சமூகத்தில் வந்து இருக்கிறது என்று நினைக்கிறீர்களா?
எழுத்தாளர்கள் என்பது நீங்கள் பார்த்தீர்களானால் தொடர்ந்து வாசிக்கிறவன்தான் வாசகன். அதே வாசகன் ஏதாவது ஒன்றை நாமும் இந்த சமூகத்துக்கு சொல்லணும்னு அவனுக்குள்ள ஒரு ஏக்கம் வருது பாத்தீங்களா… அப்ப அவன் எழுத ஆரம்பிக்கணும்.
எழுத எழுத்ததான் வார்த்தைகள் மெருகூட்டப்பட்டு, சரிபடுத்தப்பட்டு, அவனுக்குள்ளே அந்த நிலையை அடைய முடியும்.
படிக்கிறவன் வாசகன். அதற்கு ஒரு படி மேலே போய் எழுதுகிறவன் எழுத்தாளன். தன்னுடைய உணர்ச்சிகளுக்கு அழகா வார்த்தைகளை நெறிமுறைப்படுத்தி எழுதுகிறவன் எழுத்தாளன் ஆகிறான். நெறிமுறை படுத்தத் தெரியாமல் இருக்கிறவன் வாசகன் ஆகிறான் அவ்வளவுதான்.
அடுத்து, இப்படிப்பட்ட படைப்பாளிகள் உருவாகுவதற்கு என்னென்ன செய்யலாம்னு நீங்க நினைக்கிறீங்க? ஊக்கம் கொடுக்கப்பட வேண்டும். சமூகத்தில் என்ன மாற்றங்கள் வரணும்னு நீங்க நினைக்கிறீங்க? இப்ப ஒரு எழுத்தாளரா மாறுவது என்பது பல சிரமங்களுக்கு இடையில் தான் எல்லா எழுத்தாளர்களும் பொருளாதார சுதந்திரமாக இருக்க முடியும் என்பது பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது கொண்டாடப்படுகிற எழுத்தாளர்களுக்கு கூட பொருளாதார ரீதியாக பெரிய வாய்ப்பு இருப்பதில்லை. மித்த கலைத்துறையில் கிடைக்கின்ற ஒரு வாய்ப்பு எழுத்தாளர்களுக்கு கிடைப்பதில்லை. அதே நேரத்தில் பொருளாதாரமும் அவசியமாகிறது பொருளாதார பற்றாக்குறையால் தொடர்ந்து இத்தளத்தில் இயங்க முடிகிறதா?
எழுத்தாளர்கள் பொறுத்தவரைக்கும் நீங்க வந்து சினிமாவுக்கு போய் எழுதுனாங்கன்னா… அங்க அவங்களுக்கு நிறைய வருமானங்கள் இருக்கிறது. அதிலேயும் நல்ல கருத்துக்களை சொல்லலாம்.
ஆனால் முழுமையாகவே வெளியில் நாம் எழுதும் பொழுது ஜனரஞ்சகமாக எழுதக்கூடிய சூழலும் இருக்கிறது. மக்களுக்கு ஏற்றபடி எழுதுகிற ஜனரஞ்சக எழுத்துக்கள் என்று ஒன்று இருக்கிறது.
எழுத்துக்கள் ரெண்டு தாங்க. புரியும் எழுத்துக்கள், புரியாத எழுத்துக்கள். புரியாத எழுத்துக்களை மரபு இலக்கியங்கள் என்பார்கள். புரியும் எழுத்துக்களை நவீனம் என்பார்கள். இதுல நீங்க பார்த்தீங்கன்னா
பெரும் பகுதியான மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் நாம் ஒரு கருத்தை கொண்டுசேர்க்க வேண்டும்.
ஒரு சில பெரியப் பெரிய எழுத்தாளர்களுடைய புத்தகங்கள் உங்களுக்கு புரியாது. அது ஒரு மேதாவித்தனமாக இருக்கும். போற்றப்பட வேண்டிய எழுத்து என்றாலும் ஒரு குறிப்பிட்ட சாரரிடம் அக்கருத்தோட்டம் போய் அடங்கிவிடுகிறது.
இப்ப நம்ம ஜனரஞ்சகமா எழுதும் பொழுதும் அதுல சமூக நீதிகளை சொல்லலாம். மேதாவித்தனமாக எழுதக்கூடிய எழுத்துக்களிலும் சமூக நீதியை கொண்டு செல்லலாம்.
முக்கிய செய்தி என்னவென்றால்… அந்த சமூக நீதியானது எத்தனை பேரை போய் சேர்ந்தது என்பதே முக்கியம்.
இரண்டாவது எழுத்தாளன் என்பவன் பொருளாதாரத்தை சார்ந்து எழுதக் கூடாது. இந்த சமுதாயத்திலே அவன் ஒரு நடமாடுகின்ற பொதுவுடைமைவாதி. அவனுடைய தேவைக்கு அவன் இந்த எழுத்தையே நம்பி இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
இந்த சமுதாயத்திற்கு அவன் எதையாவது செய்ய வேண்டும். இலக்கியம் என்றால் என்ன என்று நினைக்கிறீர்கள்? இலக்கு இயம்புதல் ஒரு நோக்கம் எழுத்தில் இருக்கணும். ஒரு லட்சியம் இருக்கணும். அதை சொல்ல வேண்டும் அதுதான் இலக்கியம்.
இப்ப, எழுத்துன்னு எடுத்துக்கிட்டிங்கனா… நவீன இலக்கியம், மரபு இலக்கியம்னு இருக்குது.
மரபு இலக்கியம்னு நீங்க பார்த்தீங்கன்னா… பாரதியார் வாழ்ந்ததற்கு முன்பெல்லாம் அதற்கு முன்பு இருந்ததெல்லாம் மரபு இலக்கியம்.
ஒரு அரசனுக்காக, ஒரு அரசுக்காக எழுதப்படுகின்ற எழுத்துக்கள் எல்லாமே மரபு இலக்கியத்தை சார்ந்தது.
மக்களுக்காக குரல் கொடுக்கிற எழுத்துக்கள் மக்களுடைய அநீதிகளை வெளிப்படுத்துகிற எழுத்துக்கள் மக்களுக்காக எழுதப்படுவது தான் நவீன இலக்கியம்.
இதை நாம் சரியாக தேர்வு செய்து கொள்ள வேண்டும். என் எழுத்துக்கள் மக்களுக்கு பயன்பெறும் வகையில் இருக்கிறதா? சமுதாயத்தின் உடைய முன்னேற்றத்திற்கு ஏற்றதாக இருக்கிறதா? என நாம் பார்க்க வேண்டும்.
அடுத்து எழுத்தாளனுக்கு நீங்கள் சொன்னது போல பொருளாதார பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கிறது. நான் இந்த எழுத்தை நம்பி வாழ முடியாது.
ஆனால் என்னுடைய எழுத்து மத்தவங்களை வாழவைக்கும். எழுத்து இல்லாமல் ஒன்றுமே செய்ய முடியாது. அதனாலதான் திருவள்ளுவர் சொல்கிறார்.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
என்கிறார்
ஆகையால் The word is communicate with all people உணர்ச்சிகளின் வடிவங்கள் தான் எழுத்துக்கள். அதாவது வார்த்தைகள்.
வார்த்தைகள் இல்லாமல் இங்கு ஒன்றும் செய்ய இயலாது. நீங்க ஒரு பேச்சாளர், எழுத்தாளர் என்றால், எது என்றாலும் வார்த்தைகள் அவசியமாய் தேவைப்படுகிறது.
அதனால் தான் புனித வேதாகமத்தில் கூட ஆதியிலே வார்த்தை இருந்தது. அந்த வார்த்தை தேவனிடத்தில் இருந்தது. அந்த வார்த்தை தேவனாய் இருந்தது.
so word is powerful weapon வார்த்தையை வைத்து தான் இன்று எல்லாமே நடக்கிறது. இந்த வார்த்தை வந்து நமக்கு என்னத்த சம்பாதித்து கொடுக்கிறது என்பது முக்கியம் இல்ல. மத்தவங்களுக்கு அந்த வார்த்தை மூலம் என்ன பிரயோஜனம்?
அதில் ஜீவன் இருக்கு சார். வல்லமை இருக்கு சார். அந்த வார்த்தை வந்து சார் அழிக்கிறது. என்னுடைய எழுத்துக்கள் அணுகுண்டை விட அதிக வல்லமை வாய்ந்தது.
பல நன்னெறி புத்தகங்களைப் படித்துப் படித்து நாம (Transformation) மறுரூபமாகி நம்மகிட்ட இருந்து போகக்கூடியதும் அப்படிப்பட்டதை , ஒரு காரியங்களை உருவாக்கணும் சார்.
இன்னைக்கு புத்தகம்னா கண்டது போனது கத்திரிக்கா எல்லாம் புத்தகம் தான் நம்ம தேர்ந்தெடுத்து படிக்கணும் சார். அதுதான் ரொம்ப முக்கியம்
மகாத்மா காந்தியினுடைய வரலாறு எல்லாம் படித்து எத்தனையோ பேருடைய (life changeable) வாழ்க்கை நன்மாற்றம் அடைந்திருக்கிறது.
நல்ல புத்தகங்கள் நாளைய பிள்ளைகளுடைய வாழ்க்கையை நிமிரச் செய்கிறது.
புத்தகம் வாசிப்பது என்பது ஒரு நல்ல பழக்கம். அந்தப் பழக்கத்தை நம்மிடம் கொண்டு வருவதற்கு முதல்ல நாம என்ன செய்யணும்? கருத்து செறிவுள்ள புத்தகத்தை உடனே படிக்க முடியாது இப்படி இருக்கும் போது. முதல்ல படிக்க ஆரம்பிக்கும் போது எந்த மாதிரியான புத்தகங்களை படிக்கலாம்? இப்ப காட்சி ஊடகங்களில் செல் திறன் பேசிகளில் அதிக நேரத்தை செலவிடப்படுகிற மக்களை எப்படி புத்தக வாசிப்பிற்குள் வழிநடத்த இயலும்? புத்தக வாசிப்பிற்குள் பழக்கப்படுத்துவதற்கு படிப்படியாக நாம் என்ன செய்ய வேண்டும்?
இன்னைக்கு, புத்தகத்தை புரட்டுவதை காட்டிலும் எல்லாருடைய கைகளிலுமே ஆண்ட்ராய்ட் மொபைல் வச்சிருக்காங்க. போன் இருக்கு.
இப்ப புத்தகத்தை கொண்டு போய் அதில் சேர்க்கணும். இதில் இரண்டு கோஷ்டிகளாக இருக்கிறார்கள். நாம புத்தகத்தை வாங்கி புரட்ட வேண்டும் என்கிறார்கள் அது சரி.
நான் புத்தகத்தை புரட்டப் போவதில்லை என பெரும்பான்மையான மக்கள் இருக்கிறார்கள். இப்ப அவங்களுக்கு புத்தகங்களை கொண்டு போய் சேர்க்க டிஜிட்டல் மீடியா அவசியம்.
அதைப் பற்றி ஒரு கவிதை எழுதி இருக்கிறேன்…
புத்தகங்களின்
பேரக் குழந்தைகள்
மின் புத்தகங்கள்
மொபைல் வைத்திருப்பவர்களிடம் புத்தகங்களை டிஜிட்டல் வாயிலாக தான் கொண்டு செல்ல வேண்டும். அதுல அவன் படிச்சுப் படிச்சு படிக்கிற பழக்கம் வந்த பிறகு சொல்ல வேண்டியதில்லை அவனே புத்தகம் வாங்க ஆரம்பிப்பான்.
அவன படிக்க வைக்கணும்னு ராமாயணம், மகாபாரதம், தொல்காப்பியம்ன்னு மரபுக் கவிதைகளை எல்லாம் படிங்க கொண்டு போய் கொடுத்தா… அவன் கண்டிப்பா படிக்க மாட்டான். இலக்கியத்தைப் பற்றி என்ன கொண்டு போய் திணிச்சாலும் அவன் செவி சாய்க்க மாட்டான். இப்ப நீ என்ன சொல்ல வர அப்படின்னு கேட்பான்.
இப்ப திரைப்படம் அப்படின்றத பத்தி சுருக்கமா சொல்லணும்னு வச்சுக்கோங்க
கற்பனை தேரில்
உண்மையின்
ஊர்வலம்
இதையே நீங்க ஐம்பது பக்கம் அளவுக்கு சொன்னா அவனுக்கு கேட்கிற அளவுக்கு பொறுமை இல்லை. இப்ப ஃபாஸ்ட் ஃபுட் காலத்துல வாழ்ந்துட்டு வாழ்ந்து வந்துட்டு இருக்கான். இன்னைக்கு இப்ப நாம என்ன சொல்ல வருகிறோமோ அதை அவனுடைய லெவலுக்கு இறங்கி வந்து இலக்கிய தரம் மாறாமல் சொல்லணும். குறையாமல் அவனுக்கு ஏற்றபடி நாம் மாற்றி சொல்ல வேண்டும்.
இப்ப கவிதைகளை வாசிக்க வைக்கணும்னா முதல்ல துளிப்பா வாசிக்க வைக்கணும். இது திருவள்ளுவருக்கு தெரிந்த விஷயம் இப்ப நாமும் பின்பற்ற வேண்டியது அதே முறைதான்.
ஏழு வார்த்தைகள் போட்டால் போதும் முடிஞ்சது துளிப்பா.
துளிப்பாக்களை வாசிக்க வைக்கணும். ஒரு சின்ன துளிப்பா உள்ளயே நிறைய விஷயங்களை சொல்லலாம்.
இப்ப இயேசு அப்படின்ற தலைப்பில் நிறைய பக்கங்கள் எழுதி இருக்காங்க அத நான் எளிமையா கவிதை வடிவில்…
சாப பூமியில்
பாவ இருளை அகற்ற
விண்ணிலிருந்து
மண்ணுக்கு வந்து
கன்னியின் வயிற்றில்
உதித்த நீதிச் சூரியன்
இவ்வளவு தான் சார். சொல்ல வேண்டிய விஷயத்தை சுருக்கமாய் இனிமையாய் சொல்ல வேண்டும்.
உதாரணத்துக்கு இன்னொரு கவிதையையும் சொல்கிறேன் தலைப்பு கருக்கலைப்பின் உருவங்கள். கருவில் கலைந்த உருங்களை குறித்து…
இரும்பு முட்டைக்குள்
மூச்சித் திணறிய
கோழிக்குஞ்சுகள்
மண் உண்ண
வாயில்லா
மண்புழுக்கள்
அபலைகளின்
கருவறைகளில்
காமுகர்களால்
எழுதப்பட்ட
அலங்கோல கவிதைகள்
இறைவனின்
விலாசத்தில்
மரித்துப்போன
விஐபிக்கள்
சொல்ல வேண்டிய மேட்டர். இனிமையா சொல்லி பழக வைக்கணும் அதுக்கப்புறம் அவனா தேடித் தேடி படிப்பான்.
சார் ஒவ்வொருத்தருக்கும் ஒரு டேஸ்ட் இருக்கு. நாமளா போய் திணிக்க கூடாது. பள்ளிக்கூடத்திலே பாருங்க… சில கிளாஸ் டீச்சர் வரும்போது அவன் ரொம்ப சந்தோஷமா இருப்பான். சில ஆசிரியர்கள் வரும்போது ஏன்டா இவர் வராரு அப்படின்னு சொல்லுவான். எழுத்து கூட அப்படிதான் முதல்ல அவன் நிலைமைக்கு நாம் இறங்கி போகணும். அப்புறம் அவனுக்கு ஏற்ற கருத்துக்களை நாம் சொல்ல வேண்டும்.
முதல்ல துளிப்பா கொடுக்கலாம். அப்புறம் ஒரு பக்க கதைகள் கொடுக்கலாம். அப்படியே அவன் படிக்க ஆரம்பிச்ச பிறகு, தொடர்கதைகள் நாவல்கள் படிப்பான். ஆனால் எல்லாவற்றிலுமே ஓர் நீதி போதனை இருக்க வேண்டும்.
நீங்கள் எழுதின படைப்புகளில் தருமபுரி பாதிப்புகள் எந்தெந்த படைப்புகளில் இருக்கிறது? தர்மபுரியை பற்றிய குறிப்புகள் எந்தெந்த நூல்களில் இருக்கிறது?
சார் தருமபுரியை பற்றியே தான் எழுதுறேன். என்னுடைய எல்லா நாவல்களிலும் தருமபுரி இடம் பெற்று இருக்கிறது.
நீங்க பாத்தீங்கன்னா தருமபுரி நான் தொடாம எழுதுறது இல்ல.
எனது “பாரதியின் கண்ணம்மா” நாவல்ல பாத்தீங்கன்னா இந்த தருமபுரி மாவட்டத்தில் ஒவ்வொரு வருடமும் நடக்கிற புத்தகத் திருவிழாவிலிருந்து எல்லாமே இருக்கு சார்.
அந்த நிகழ்வுகள் எல்லாம் எப்படியே இருக்கு சார். அந்தப் புத்தகத் திருவிழாவுக்கு போகிற மாதிரியும், புத்தகங்கள் வாங்குற மாதிரியும், இன்னும் சொல்லப்போனால் அந்த ஆரம்பத்துல புத்தகத் திருவிழா நடந்த மதுராபாய் கல்யாண மண்டபம் குறிப்பிட்டு இருக்கேன்.
இன்னும் நான் வசித்த ஊர் பெல்ரம்பட்டி. அந்த ஊர்ல இருந்து ஆத்துக்கொட்டாய்க்கு வருவது அன்றைய நாட்களில் மழைக்காலங்களில் சிரமம். ஆற்றில் வெள்ளமாய் மழை நீர் பெருக்கெடுத்து ஓடும். படகில்தான் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு கடக்க இயலும். இப்ப எல்லாம் மேல பாலம் போட்டுட்டாங்க.
இப்ப இருக்கும் தலைமுறைக்கோ, வரும் தலைமுறைக்கோ, இந்த நிகழ்வுகள் எல்லாம் தெரியாது. அதை நாம் எழுதி வைக்கும் போது அவனுக்கு தெரியும் சார்.
இன்னும் சொல்லப்போனால் என்னுடைய நண்பர்களுடைய வரலாறையே நான் கதையாக “நிலவு தேடிய வானம்”எனும் தலைப்பிட்டு நாவலாக எழுதி இருந்திருக்கிறேன். அதில் வரும் நண்பன் வடிவேல், சலீம் இவர்கள் திரைப்பட துறையில் பெரிய சாதனையாளர்களாக வரவேண்டும் என நினைத்து பிறகு அவர்கள் என்ன ஆனார்கள் என்பதை குறித்து எழுதியிருக்கிறேன்.
அப்புறம் நீலகிரியார் எனும் நாவலில் ஒரு வாலிபன் தன் இளம் வயதில் பிழைப்புக்காக நீலகிரி சென்று, எப்படியெல்லாம் வாழ்க்கையில் கஷ்டப்பட்டு உயர்ந்த நிலையில் திரும்பவும், இதே தருமபுரிக்கு வந்து சேர்கிறான். அந்த வாலிபனின் சொந்த ஊர் தொப்பூர் அது தர்மபுரி மாவட்டத்தை சார்ந்தது.
மக்களோ அவரின் பழைய வரலாற்றை மறந்து நீலகிரியில் இருந்து வந்த அவரை நீலகிரியார் என அழைக்கிறார்கள். இது என்னுடைய தாத்தாவின் வரலாறு.
இப்படி நான் எழுதின எல்லா கதைகளிலும் ஏதோ ஒரு வரலாறு, வாழ்ந்தவர்களுடைய வரலாறு அடங்கின ஒரு உண்மைத்துவம் கற்பனையும் கலந்த கதைகள் தான் இருக்கும்.
இந்த நாவல்கள் இப்ப வந்ததா ஒவ்வொரு நாவல்களும் எத்தனை பக்கங்கள் அடங்கியிருக்கும்?
ஒவ்வொரு நாவல்களும் நூறு பக்கத்துக்கும் மேலாக தான் இருக்கும். நாவல்கள் எழுதும்போது நான் வந்து ஒரு கருத்தை மையமாக வைத்துக்கொள்வேன்.
ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் இதுதான் வரவேண்டும் என முன் குறிக்க மாட்டேன். அடுத்தடுத்த அத்தியாயங்களில் என்ன நடக்கும் என்று எழுதும் வரை எனக்கே தெரியாது. நானும் ஒரு வாசகனைப் போல அதிலே பயணம் செய்வேன். எப்படி ஒரு கடல்ல பயணம் செய்யும்பொழுது அடுத்தடுத்து என்ன என்று நமக்கு தெரியாது. அது போல தான் எங்கெல்லாம் திருப்புமுனை வருகிறதோ அங்கெல்லாம் புதிய அத்தியாயங்கள் தொடங்கும். ஆரம்பத்தில் திட்டமிட்டு எழுதினேன். இப்பொழுது அப்படி அல்ல. எங்க அந்த டிராவல் முடியும்னு எனக்கு தெரியாது. ஆனால் ஏதோ ஒரு இடத்தில் முடியும்பொழுது அங்கே முற்றுப்புள்ளி வைப்பேன்.
இப்படி எழுதுவது சரியா தவறா அப்படின்னு நான் யோசிக்கும் போது தான்
எழுத்தாளர் ஜெயமோகனுடைய “எழுதும் கலை” புத்தகம் கிடைத்து வாசிக்கையில், ஒரு எழுத்தாளன் எழுதும் பொழுது பயணிக்க வேண்டும். அவன் படைப்புகளில் இப்படித்தான் பண்ணனும், அப்படித்தான் பண்ணனும் என்று ஒரு கட்டம் போட்டு எழுதக் கூடாது என விவரித்திருந்தார். அது எனக்கு சரியாகப்பட்டது. தொடர்கிறேன்.
ஒரு சிலர் ஒரு கட்டத்துக்குள் திட்டமிட்டு எழுதுவார்கள். நான் ஆரம்பத்தில் அப்படி எழுதி இருந்தேன். இப்பொழுது அப்படி அல்ல.
பத்திரிகைக்காரர்கள் இத்தனை வார்த்தை வரவேண்டும் என சொல்லுவாங்க அங்கே என்னுடைய பயணத்தை முடித்துக் கொள்வேன்.
அங்கு என்னுடைய டிராவலர் ஒரு நல்ல ஜர்னி. நமக்கே தெரியாது எங்க பயணிக்கிறோம் என்று. கடைசியில் அந்த பயணம் நல்லபடியாக முடியும்.
அடுத்து உங்களுடைய படைப்புகள் என்னென்ன வர இருக்கின்றன?
கண்மணியில் இரண்டு நாவல் இருக்கு சார் “செல்லமே செல்லமே”அதுல ஒரு பொண்ணு வந்து பீடியாட்ரிக் டாக்டர் குழந்தை இல்லாம அந்த டாக்டர் கஷ்டப்படுறாங்க என்பதை பற்றியும், இன்னொரு நாவல் “அன்பின் மழையில்” அப்படின்றது அதுல ஒரு பெண் மனரீதியாக அவங்க எவ்வளவு கஷ்டப்படறாங்க என்பதைக் குறித்து…
இன்னைக்கு அழுத்தங்கள், மன அழுத்தங்களாலே எத்தனையோ பேர் எவ்வளளோ கஷ்டப்படுறாங்க. அவங்களுடைய வாழ்க்கையில அப்படிப்பட்ட அந்த மன அழுத்தத்திலிருந்து விடுதலை பெறுதல் எப்படி? அத சம்பந்தப்பட்ட கருத்துக்கள் அடங்கின ஒரு நாவல்.
அந்த இண்டு நாவல் இப்ப வர இருக்கிறது. இந்த இரண்டு நாவல்களும் பெண்கள் சம்பந்தப்பட்டது.
இன்னும் உங்களுடைய எழுத்துப் பணி செம்மையாய் தொடர, இந்த தளம் மூலமாக அடுத்த தலைமுறைக்கு நீங்க எழுதவேண்டும். அவர்கள் புதிய வழிகாட்டுதலையும், அவர்கள் வாழ்வில் வாழ்வதற்கான ஒரு செம்மையான நோக்கங்களையும் அந்த புத்தகங்கள் எல்லாருக்குள்ளேயுமே எடுத்துட்டு போகணும்னு தர்மபுரி பண்பலை யின் சார்பாக வாழ்த்துகிறோம்.
என்னை அன்புடன் அழைத்து பயன்படுத்தியதற்காக உங்களுக்கும் நிர்வாகத்திற்கும் நன்றி சார்
நிறைவு
புத்தகா டிஜிட்டல் மீடியா மூலம் தற்பொழுது வெளியாகி இருக்கும் பெண்களின் வாழ்க்கையை மையமாய் வைத்து எழுதப்பட்ட இரு நாவல்கள்
3 Comments
கோ.ரா.ரவி பட்டு நெசவாளர் · ஏப்ரல் 28, 2023 at 16 h 01 min
தமிழ்நெஞ்சம் சிறந்த நூலகம்
Raju Arockiasamy · ஏப்ரல் 28, 2023 at 17 h 22 min
ஒரு முழுமையான மின்னிதழ்… எதுதான் இல்லை? எல்லாம் இருக்கிறது…
பிரான்சிலிருந்து வெளிவரும்
அற்புதமான தமிழ் நெஞ்சம் மின்னிதழிலில் எனது படைப்புகள்…
இதில் பெருமை என்னவென்றால்…
தமிழ்நெஞ்சம் அமின் அய்யா….
எனையீரத்த தன்முனைகள்… அனுப்புங்கள் என்று புலனத்தில் என்னிடம் கேட்க…
நிச்சயமாக பெருமைதானே…
வணக்கங்கள் அய்யனே…
சிறப்பான உழைப்பிற்கு!
# ராஜூ ஆரோக்கியசாமி
28.04.2023
Sahmen Nizam · ஏப்ரல் 30, 2023 at 21 h 24 min
அருமையான பேட்டி, வாசிப்பின் முக்கியத்துவம், இன்றைய இளைய சமூகத்திற்கு பல விடயங்களை விசேடமாக வாசிப்பினால் ஏற்படும் மாற்றங்கள் என ஏகப்பட்ட விடயங்களை உள்ளடக்கிய செவ்வி. வாழ்த்துகள்.