பாடல் – 22

பற்றென்னும் பாசத் தளையும் பலவழியும்
பற்றறா தோடும் அவாத்தேருந் – தெற்றெனப்
பொய்த்துரை யென்னும் பகையிருளும் இம்மூன்றும்
வித்தற வீடும் பிறப்பு.

(இ-ள்.) பற்று என்னும் – பற்று என்று சொல்லப்படுகின்ற, பாசத்தளையும் – கயிற்று விலங்கும், பலவழியும் – பல பொருள்களிலும், பற்று – பிடிப்பு, அறாது – நீங்காமல், ஓடும் – ஓடுகின்ற, அவாத் தேரும் – விருப்பமாகிய தேரும்; தெற்றென – தெளிவாக, பொய்த்து உரை என்னும் – பிறருக்குப் பொய்ம்மை உரைப்பதாகிய சொல் என்று சொல்லப்படும், பகை இருளும் – (அறிவுக்குப்) பகையாகிய இருளும்; இ மூன்றும் – ஆகிய இம் மூன்றும், வித்துஅற – தனக்குக் காரணமாகிய அவிச்சை கெட, பிறப்பு வீடும் – பிறப்பு அழியும். (எ-று.)

(க-ரை.) பற்றையும், அவாவையும், பொய்யையும் நீக்கினால் வீடடையலாம்.

ஒன்றின்மேற் பற்றிருந்தால் அவை ஒழித்து அங்கங்குச் செல்வது கூடாமையால் பாசத்தளை யென்றும், ஒன்றின்மேல் ஆசை மேலே மேலே ஓடிக்கொண்டிருத்தலால் அவாத்தேர் என்றுங் கூறினார். “எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு” என்ற குறளுக்கு இணங்கப் பொய்யாமை விளக்கம் எனப்படுதலால், பொய்யுரை இருள் எனப்பட்டது. பற்று – அகப்பற்று புறப்பற்று என்றிருவகைத்து; நான் என்னும் உணர்ச்சி யுடனிருப்பது அகப்பற்று. எனது என்னும் உணர்ச்சியுடனிருப்பது புறப்பற்று. பற்று – பற்றுதல் : முதனிலைத் தொழிற் பெயர். பொய்த்து பொய்ம்மை என்னும் பண்படியாகப் பிறந்த அஃறிணை யொன்றன்பாற் பெயர்ச்சொல். பொய்த்துரை : இரு பெயரொட்டுப் பண்புத் தொகை. தெற்றென : செயவனெச்சம். வித்து – விதை, முளை. “அவா என்ப எல்லா வுயிர்க்கும் எஞ்ஞான்றும், தவாஅப் பிறப்பீனும் வித்து” என்றார் வள்ளுவனாரும். இதற்கு உடம்பு நீங்கிப்போங் காலத்து அடுத்த வினையும், அது காட்டும் கதி நிமித்தங்களும், அக் கதிக்கண் அவாவும் உயிரின்கண் முறையே வந்துதிப்ப, அறிவை மோகம் மறைப்ப அவ் வுயிரை அவ்வவா அக் கதிக்கட் கொண்டு செல்லுமாதலால், அதனைப் பிறப்பீனும் வித்து என்று பரிமேலழகர் உரை விரித்திருப்பது கருதத் தக்கது. வீடும் – அழியும்; வீடுதல் – அழிதல் : தன்வினை.

முன் பக்கம் செல்ல…    தொடரும்


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

இலக்கணம்-இலக்கியம்

தமிழமின் வாழ்க தழைத்து!

விசித்திர அகவல்

ஒரு குறள் வெண்பாவிலுள்ள ஒவ்வோர் எழுத்தையும் ஒவ்வோரடியின் ஈற்றில் அமையுமாறு பாடுவது விசித்திர அகவல் ஆகும்.

குறள் வெண்பா

குமுத மலராகக் கோலவிதழ் பின்னும்
தமிழமின் வாழ்க தழைத்து!

 » Read more about: தமிழமின் வாழ்க தழைத்து!  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 100

பாடல் – 100

பத்திமை சான்ற படையும் பலர்தொகினும்
எத்துணையும் அஞ்சா எயிலரணும் – வைத்தமைந்த
எண்ணின் உலவா விழுநிதியும் இம்மூன்றும்
மண்ணாளும் வேந்தர்க் குறுப்பு.

(இ-ள்.) பத்திமை சான்ற –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 100  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 99

பாடல் – 99

கற்றாரைக் கைவிட்டு வாழ்தலும் காமுற்ற
பெட்டாங்கு செய்தொழுகும் பேதையும் – முட்டின்றி
அல்லவை செய்யும் அலவலையும் இம்மூவர்
நல்லுலகம் சேரா தவர்.

(இ-ள்.) கற்றாரை –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 99  »