பாடல் – 21

வருவாயுட் கால்வாழங்கி வாழ்தல் செருவாய்ப்பச்
செய்தவை நாடாச் சிறப்புடைமை – எய்தப்
பலநாடி நல்லவை கற்றல் இம்மூன்றும்
நலமாட்சி நல்லவர் கோள்.

(இ-ள்.) வருவாயுள் – தமக்கு வரும் பொருள்களிலே, கால் – நான்கி லொரு பங்கு, வழங்கி – (அறத்திற்) செலவு செய்து, வாழ்தல் – வாழ்தலும்; செரு – போரினிடத்து, வாய்ப்ப – (வெற்றி) கிடைப்ப, செய்தவை – (தான்) செய்த செயல்களை, நாடா – ஆராயாத, சிறப்பு உடைமை – (யாவர்க்கும் விளங்கித் தோன்றும்) சிறப்புடையனாதலும்; எய்த – நிரம்ப, பலநாடி – பலவற்றையும் ஆராய்ந்து, நல்லவை – (அவற்றுள்) நல்லவற்றை, கற்றல் – படித்தலும்; இ மூன்றும் – ஆகிய இம் மூன்றும், நலம் – நற்குண நற்செய்கைகளால், மாட்சி – பெருமை பெற்ற, நல்லவர் – நல்லவருடைய, கோள் – கொள்கைகளாம்; (எ-று.)

(க-ரை.) வரவுக்குத் தகுந்தபடி அறஞ்செய்தலும், போரில் வெற்றி பெறுதலும், நல்ல பொருள்களைக் கற்றலும் நலம் என்றபடி.

வருவாய் – வரும் வழியையுடைய பொருள்; வினைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை, கால் : எண்ணளலவை யாகுபெயர். செருவாய்ப்ப என்ற குறிப்பால் செய்தவை என்பது வெற்றிச் செய்கை என்பதன் மேலாயிற்று, வாய்ப்ப – நிகழ்காலத்தில் வந்த செயவெனெச்சம் : வாய் : பகுதி, ப் : எழுத்துப்பேறு, ப் : சந்தி, அ : விகுதி, வழக்கத்தில் வாய்க்க என வரும். உடைமை : தொழிற் பெயர். கோள் – கோட்பாடு : தொழிலாகு பெயர். ஒருவன் தன் தேட்டத்திற் பாதி தன் வகைச் செலவுக்கும், காற்கூறு அறத்திற்கும், மற்றொரு கால் சேர்த்து வைப்பதற்கும் பயன்படுத்த வேண்டுமென்பது நூற்கொள்கை.

முன் பக்கம் செல்ல…    தொடரும்


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

இலக்கணம்-இலக்கியம்

நாட்டுப்புற காதல் பாடல்களில் காணப்படும் சங்க அகஇலக்கியக் கூறுகள்

முன்னுரை

நாட்டுப்புற மக்களின் காதல் உணர்வின் வெளிப்பாடே காதல் பாடல்கள் ஆகும். அகத்தின் கண் மறைத்தும் புறத்தின் கண் புலப்பட்டும் மெய்ப்பாடுகளால் தாக்கப்பெறும் வலிய சக்தியே காதல். ஆண், பெண் என்ற தத்துவத்தின் வித்தாகவும் அவற்றின் வாழ்வுக்கும் வளமைக்கும் அடிப்படையாகவும் காதல் விளங்குவதைக் காணலாம்.

 » Read more about: நாட்டுப்புற காதல் பாடல்களில் காணப்படும் சங்க அகஇலக்கியக் கூறுகள்  »

இலக்கணம்-இலக்கியம்

காலந்தோறும் கவிதை

கதையென்பது ஓர் உணர்வுப் பரிமாற்றம். தனக்கேற்றபட்ட சுய அனுபவங்களை, தாக்கங்களை ஏனையவர்களோடும் பகிர்ந்து கொள்ள எடுக்கும் முயற்சியே கவிதை.

கவிதைக்கு நீண்ட வரலாறு உண்டு என்று கூறினோம். ஆம். கவிதை, செய்யுள் என்பவை மன்னர் காலத்தில் மன்னர்களால் புகழப்பட்டது.

 » Read more about: காலந்தோறும் கவிதை  »

இலக்கணம்-இலக்கியம்

கம்பன் கவிநயம்… தொடர் – 11

கம்பனின் கவியாற்றல் ஒரு வியப்புக்குறியாகவே இன்றளவும் உள்ளது.

தமிழ் மொழியைக் கையாண்ட விதம், சொற்களை சொக்கட்டான் போல் விளையாடி கையில் எடுத்து கவிதைக்குள் பின்னி வைத்த அழகு வெறும் வார்த்தைகளால் நம்மால் சொல்ல முடியவில்லை.

 » Read more about: கம்பன் கவிநயம்… தொடர் – 11  »