பாடல் – 10
கணக்காயர் இல்லாத ஊரும் பிணக்கறுக்கும்
மூத்தோரை இல்லா அவைக்களனும் – பாத்துண்ணும்
தன்மையி லாளர் அயலிருப்பும் இம்மூன்றும்
நன்மை பயத்த லில.
(பொருள்) :
கணக்காயர் – நெடுங்கணக்கு முதலியன கற்பிப்பவரை (ஆசிரியரை), இல்லாத – உடையதாயிராத, ஊரும் – ஊரிலிருத்தலும், பிணக்கு – மாறுபட்ட பொருளை, அறுக்கும் – நீக்கும் மூத்தோரை – (கல்விகேள்விகளில்) முதிர்ந்தவரை, இல்லா – உடையதல்லாத, அவைக் களனும் – சபையிலிருத்தலும், பாத்து – பகுத்து, உண்ணும் – சாப்பிடும், தன்மை – குணம், இலாளர் – இல்லாதவர், அயல் இருப்பும் – பக்கத்திலிருத்தலும், இ மூன்றும் – ஆகிய இந்த மூன்றும், நன்மை – (ஒருவனுக்கு) நன்மையை, பயத்தல் – தருவன, இல – அல்லவாம், (தீமை பயப்பனவாம்) (எ-று.)
(கருத்துரை) :
கல்வி கற்பிக்கத்தக்கவரில்லாத ஊரிலிருப்பதும் ஏற்பட்ட வழக்கைத் தீர்க்கும் திறமில்லாதவர் சபையிலிருப்பதும், உதவி செய்யாதவர் பக்கத்திலிருப்பதும் பயனற்றவை. இருக்க வேண்டாம் என்பது கருத்து.
கணக்காயர் – கணக்கு+ஆயர், கணக்கை ஆய்ந்தவர்; கணக்கு – இஃது இலக்கணம் முதலியவற்றிற்கும் உப லட்சணம்; ஆயர் – ஆராய்ந்தவர்; ஆய் – ஆராய், இவர் மூலபாடங்கற்பிப்பவர் என்பது, “கற்றதூஉ மின்றிக் கணக்காயர் பாடத்தாற், பெற்றதாம்.
பேதையோர் சூத்திரம்” என்ற நாலடியால் விளங்கும். பிணக்கு – பிணங்குதல். பிணங்கு என்னும் முதனிலை பிணக்கு எனத் திரிந்தது : தொழிற் பெயர்; ஒரு பொருளைக் குறித்து இருவர்க்குளதாம் மாறுபாடு. அறுக்கும் – ஐயந்திரிபற நீக்கும். மூத்தோர் – கற்றறிந்த பெரியோர். “அவைக்குப் பாழ் மூத்தோரை யின்மை” என்பது நான்மணிக்கடிகை. அவைக்களன் – சபையாகிய இடம் : இருபெயரொட்டுப் பண்புத்தொகை. களன் : களம் என்பதன் போலி. பாத்து – பகுத்து.” பாத்தூண் மரீஇ யவனைப் பசி யென்னும், தீப்பிணி தீண்ட லரிது” என்ற திருக்குறள் 227 இல் பாத்து பகுத்து என்னும் பொருளில் வந்துள்ளது. “பகடு நடந்த கூழ் பல்லாரோடுண்க” என்பது நாலடி. இல்வாழ்வான் பிரமசாரிமுதலிய ஒன்பதின்மர்க்குங் கொடுத்துண்பது முறையெனத் திருவள்ளுவர் அறுதியிட்டிருப்பினும், விருந்தினர்க்கும் உறவினர்க்குமாவது கொடுத்துண்பது இன்றியமையாதது என்பது வற்புறுத்தப்படும். “விருந்தின்றி யுண்ட பகலும்” என்ற இந் நூல் 44ஆம் செய்யுளடியையும் நோக்குக.