பாடல் – 06
பிறர்தன்னைப் பேணுங்கால் நாணலும் பேணார்
திறன்வேறு கூறிற் பொறையும் – அறவினையைக்
காரண்மை போல வொழுகுதலும் இம்மூன்றும்
ஊராண்மை யென்னுஞ் செருக்கு.
(பொருள்) :
பிறர் – மற்றவர், தன்னை பேணுங்கால் – தன்னை விரும்பி மேன்மைப்படுத்துமிடத்து, நாணலும் – நாணுதலும், பேணார் – விரும்பாதவராய், திறன் – தகுதியை, வேறு கூறின் – வேறுபடச் சொல்லுமிடத்து, பொறையும் – அதனைப் பொறுத்தலும், அறவினையை – உபகாரச் செய்கையை, கார் – மேகம், ஆண்மை போல் – ஆளுதல் போல, ஒழுகுதலும் – (ஆளுதல் செய்து) நடத்தலும், இம்மூன்றும் – இந்த மூன்றும், ஊர் – (பிறர் மேற்பட்டு) செல்லுகின்ற, ஆண்மை என்னும் – ஆண்மை என்கின்ற, செருக்கு – செல்வங்களாம்; (எ-று.)
(கருத்துரை) :
பிறர் ஒருவர் தன்னை உயர்த்திப் பேசும்பொழுது தனக்கு இது தகாது என்று நாணுதலும், தன்னை விரும்பாதவர் தன்னை இகழுமிடத்து வெகுளாமல் பொறுத்தலும், மேகத்தைப் போல் கைம்மாறு கருதாமல் உதவிசெய்தலும் சிறந்த செல்வமாகும்.
பேணுதல் – விரும்புதல், நாணுதல் – கூசுதல், பேணார் : முற்றெச்சம்; பகைவர் என்றலும் ஆம். திறன் – திறம் என்பதின் போலி. ஆண்மை : தொழிற்பெயர். கார் : பாண்பாகு பெயர். அறவினை : பண்புத்தொகை, ஊர் ஆண்மை : வினைத்தொகை. செருக்கு : காரியவாகு பெயர், செல்வம் என்னுங் காரணத்துக் காதலால்.