பாடல் – 07
வாளைமீன் உள்ளல் தலைப்படலும் ஆளல்லான்
செல்வக் குடியுட் பிறத்தலும் – பல்லவையுள்
அஞ்சுவான் கற்ற அருநூலும் இம்மூன்றும்
துஞ்சூமன் கண்ட கனா.
(பொருள்) :
வாளைமீன் – வாளை என்னும் மீன், உள்ளல் – உள்ளான் என்னும் சிறு பறவை, தலைப்படலும் – எடுக்க முயற்சி செய்தலும், ஆள் அல்லான் – ஆளமாட்டாதவன், செல்வம்குடியுள் – செல்வமுள்ள குடியில், பிறத்தலும் – பிறந்து அதனை ஆளக் கருதுதலும், பல் அவை உள் – கற்றார் பலர் கூடிய சபையில், அஞ்சுவான் – அஞ்சும் இயல்புடையவன், கற்ற – படித்துள்ள, அருநூலும் – அருமையான நூலுணர்ச்சியும், இ மூன்றும் – ஆகிய இம் மூன்று செயல்களும், துஞ்சு – தூங்குகின்ற, ஊமன் – ஊமையானவன், கண்ட கனா – கண்ட கனாவைப் போலாம் ; (எ-று.)
(கருத்துரை) :
எங்ஙனம் வாய்பேசாத ஊமையன் தான் கண்ட கனவைப் பிறருக்கு எடுத்துரைத்துப் பயன்படுத்த கூடாதவனாவனோ? அதுபோல உள்ளான் வாளைமீனைத் தாக்குதலும், திறமையில்லாதவன் செல்வக் குடியிற்பிறந்து அதனைக் காப்பாற்றுதலும், சபைக்கு அஞ்சுகின்றவன் படித்த படிப்பும் இம் மூன்றும் பயன்படாதவை.
வாளை மீன் : இரு பெயரொட்டுப் பண்புத் தொகை. மீன் உள்ளல் : இரண்டாம் வேற்றுமைத் தொகைநிலைத் தொடர்; மீனுக்கு என நான்காம் வேற்றுமைத் தொகையாகவும் கொள்ளலாம். வாளைமீன் உள்ளல் தலைப்படல் என்பது ஒருவன் தனக்கு முடித்தற்கரிய போரைச் செய்து வெற்றிபெற முயலுதல் என்னும் பொருளைக் குறிக்கிறதால் பிறிது மொழிதல் என்னும் அணி, ஆள் : ஆள்தல் என்பதில் தல் விகுதி கெட்டுவந்த முதனிலைத் தொழிற்பெயர். பிறத்தல் : ஆகுபெயர். பல்லவை – பல்+அவை : பண்புத்தொகை. நூல் – நூலுணர்ச்சிக்கு : ஆகுபெயர். கனா – கனவு, இதற்கெதிர்மொழி நனா. நனா – நினைவு. கனாத் தகைமையைத் தலைப்படல் முதலிய மூன்றில் ஆரோபித்துக் கூறுதல் உருவக அணி.