தொடர் 58

ஹைக்கூ கானகத்தில் மலர்ந்துள்ள காட்டுமலர் போன்றது. அந்த மலரை அங்கு உருவாக்கியது யார்..? மனிதனா..?! நிச்சயம் இல்லை. இயற்கை..! ஆம். ஹைக்கூவும் இயற்கையின் ஒரு அற்புத சிருஷ்டி எனலாம். எழுதுபவரை மட்டுமல்லாது..வாசகனையும் வசீகரிக்கும் ஆற்றல் ஹைக்கூவிற்கு உண்டு..

ஆம். இயற்கையின் அற்புதப் படைப்பு அந்த கானகமெங்கும் விரவியிருக்கும் மலர்கள், எத்தனை வண்ணங்கள்..

ஒவ்வொன்றிலும் ஏதோ ஒரு வித மணம். காலையில் மலர்ந்த மலர்கள் பலவித வர்ணங்களிலும், இரவினில் மலரும் மலர் வெண்மையாயும் கூடவே.. அதீத மணத்துடனும் படைக்கப் பட்டிருப்பது இயற்கையின் விந்தை. இரவினில் வண்டுகள் எவ்வித சிரமமும் இன்றி அவற்றினை இனங்காண இறைவனால் படைக்கப்பட்டிருக்கின்றன என்று கூட கூறலாம். உண்மையில் ஹைக்கூ அதே போலதான். ஜென் கலந்து தரப்பட்ட ஹைக்கூ அனைவரையும் வசியப் படுத்திக் கொண்டு இருந்த காரணத்தால் தான். மேற்கத்திய நாடுகள் முதற்கொண்டு உலகின் பல நாடுகளிலும் இன்று இலக்கிய உலகில் வரவேற்பை பெற்ற ஒரு கவிதை வடிவமாக ஹைக்கூ வளர்ந்து நிற்கிறது..

ஹைக்கூவை அலங்காரமாக எழுத முயற்சிக்க வேண்டாம். எளிய வார்த்தைகள் போதும்..காட்டுமலரின் எளிமை ஹைக்கூவிற்கு இருக்கட்டும்..

குறைவான வார்த்தைகள் போதுமானது. குறைந்த வார்த்தைகளில் ஒரு விசயத்தை புரிந்து கொள்ள வைப்பது சாதாரண விசயமல்ல. ஹைக்கூ அதைத்தான் செய்து கொண்டிருக்கிறது.

கவிஞர்.பா.உதயக்கண்ணன் அவர்களின் இந்தக் கவிதையை காணுங்கள்..

வீடற்றவன்
நட்டு வைத்த மரம்
கூடு கட்டும் குருவி.

வீடில்லாதவன் அவன். அவன் நட்டுவைத்த மரம் குருவிக்கு வீடாகி விடுகிறது. மற்றவர்களுக்கு உதவட்டுமே என்ற கோட்பாட்டில் தானே பலவும் அரங்கேற்றமாகின்றன. அத்தகையச் செயல்கள் நடைபெறாது போனால் உலகின் சுழற்சி…?!

ஜப்பானியக் கவிஞர் பூசனின் ஒரு கவிதை..

பனி வீழ்ந்த முள்செடி
அற்புத அழகு
ஒவ்வொரு முள்ளிலும் துளி.

பனிக்கால காலை வேளை..ஒரு முள்செடி எங்கும் பனித் துகள் திரண்டு,  அதுவே அற்புத அழகாய் கிறங்கடித்துக் கொண்டிருப்பதை காண்கிறான் கவிஞன். பிறந்து விட்டது ஒரு ஹைக்கூ..

எளிமையான வார்த்தைகள். இங்கு பனித்துளிகளைப் போல கோர்க்கப்பட்டு அழகாய் மிளிர்கின்றன.

அது போல, ஹைக்கூ பிதாமகர் பாஷோவின் கவிதை ஒன்று..

மேகம் சில நேரங்களில்
நிலவை ரசிப்பவனுக்குத் தருகிறது
ஓய்வு..!

எவ்வளவு எளிமை. நிலவை ரசித்து பார்த்துக் கொண்டிருக்கும் போது. மேகம் அதை மறைப்பது, பார்த்துக் கொண்டிருப்பவனுக்கு ஓய்வைத் தருகிறதாம். என்னவொரு சிந்தனை.

இதோ…  தமிழ் கவிதை காட்டும் ஒரு எளிமையைக் காணுங்கள்..

விருந்தினர் கூட்டம்
நிரம்பி வழிகிறது
குழந்தையின் உண்டியல்.

மு.கௌந்தி அவர்களின் இந்த ஹைக்கூ..விருந்தினர் வருகையால் அந்த வீட்டின் குழந்தைக்கு அன்புப் பரிசாக கிடைக்கும் பணத்தால், அக்குழந்தை வைத்திருக்கும் உண்டியல் நிறைவதை சொல்லி நகர்கிறது.

ஹைக்கூ அழகியலோடு படைக்கப்படும் ஒரு அற்புதக் கவி வடிவம். அதன் எளிமையே இன்று அதனை பலரும் நேசிக்கும் வண்ணம் செய்திருக்கிறது என்பதும், பலரும் எழுதத் தூண்டும் வண்ணம் அமைந்திருக்கிறது என்பதும் மறுக்கமுடியாத உண்மை.

இன்னும் வரும்

முன் பதிவு 57


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மின்னிதழ்

ஹைக்கூ திண்ணை 13

ஹைக்கூ திண்ணை செப்டம்பர் / ஒக்டோபர் மின்னிதழைத் தொகுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன். இந்தப் பெறுமதியான வாய்ப்பை வழங்கிய கவிச்சுடர் கல்யாணசுந்தரம் ஐயா அவர்களுக்கு முதற்கண் எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன். ஹைக்கூ என்றால் என்ன, அதை விளங்கிக் கொண்டு அதன் விதிமுறைகள் பற்றி அறிந்து அதன்படி எழுத எல்லோரும் முனைகின்றார்களா என்பது கேள்விக்குறியே. சிலர் இலக்கண விதிமுறைக்கேற்ப ஹைக்கூ கவிதைகளை எழுதுகின்றனர். ஆனாலும் சிலர் இலக்கண விதிகளைக் கொஞ்சம் மீறிப் புதுமையாக, வித்தியாசமாக எழுதுபவர்களாக இருக்கிறார்கள்...

ஆன்மீகம்

அருள் வாக்கியே! அப்துல்காதிரே!

அருள் வாக்கியே அப்துல் காதிரே!
திருப்புகழ் பாடிப் புகழ்சேர்த்த மெய்ஞ்ஞானியே!

வெண்பா வினால் விளக்கேற்றியே
விந்தைகள் தான்செய்த இறைநேசரே!

(அருள்)

எரியென்றே நீபாடித் திரியேற்றி னாய்
அரியணையில் அணையென்றே ஒளிபோக் கினாய்!

 » Read more about: அருள் வாக்கியே! அப்துல்காதிரே!  »

மின்னிதழ்

நிறைய சிந்தியுங்கள் ஹைக்கூ பிறக்கும்

ஹைக்கூ கவிதைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதில் குழப்பம் வருவதில் அர்த்தமில்லை அவசியமில்லை தேவையுமில்லை. வாழ்ந்த ஹைக்கூ முன்னோடிகள் கவிக்கோ அப்துல் ரகுமான் தி. லிலாவதி, கவிஞர் மித்ரா, நிர்மலா சுரேஷ் போன்றவர்களின் கவிதை களைப் பாடமாக படியுங்கள். நாம் வாழும் காலத்தில் இருக்கின்ற தமிழக மூத்தக் கவிஞர்கள் கவிஞர் அமுதபாரதி கவிஞர் ஈரோடு தமிழன்பன் கவிஞர் அறிவுமதி கவிச்சுடர் கா. ந. கல்யாண சுந்தரம் கவிஞர் அமரன் கவிஞர் வே. புகழேந்தி கவிஞர் அனுராஜ் கவிஞர் இளையபாரதி கந்தகம் பூக்கள் இவர்களின் கவிதைகளைப் படித்து நுணுக்கங்களை கற்றுக் கொள்ளுங்கள்.