தொடர் 59
ஹைக்கூ உலகில் திருக்குறள் மற்றும் பைபிளுக்கு அடுத்தபடியாக அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு கவிதை வடிவமாக இன்று திகழ்கிறது.
அதுமட்டுமல்லாது.. இந்தியாவில் தமிழ் நாட்டில் பல மாணவர்கள் ஆய்வுக்கு கையாளும் கவிதை வடிவமாகவும்..பல கவிஞர்களின் முதல் கவிதைத் தொகுப்பு நூலாகவும் ஹைக்கூவே இன்று இருக்கிறது. இதெல்லாம் ஹைக்கூவின் குறுகிய கால வளர்ச்சியே ஆகும்.
ஹைக்கூ கவிதைகளை ஒவ்வொரு முறை வாசிக்கும் போதும் பல புதிய சிந்தனைகளை அவை புலப்படுத்திக் கொண்டிருக்கும். ஒரு செடியில் மலரும் மலரானது இறுகிய மொட்டாக இருந்து எப்படி மல்ல மெல்ல மலராக இயற்கையாய் விரிகிறதோ அவ்வாறே ஹைக்கூவும் மெல்லவே காட்சியின் பொருளைப் புலப்படுத்தும் என்கிறார் ஹைக்கூ கட்டுரையாளர் ஆர்.எச்.பிளித்.
ஹைக்கூ கவிஞர்களும், தங்களது கவிதையை நேரடி காட்சிப் பதிவாக உண்மைக்கு அருகில் நின்று படைத்திட வேண்டுகிறேன். உள்ளதை உள்ளபடி சொல்லி நகர்வதே ஹைக்கூவின் உண்மைத் தன்மையாகும்.
இந்தக் கவிதையை கவனியுங்கள்..
கோடை காலப் பூ
வற்றி இருக்குமோ
தேன்.
கவிஞர்.அரவிந்தன் அவர்களின் இந்த சந்தேகம் நியாயம் தானோ ?
கோடைகாலத்தில் தேன் வற்றி விடுமோ பூவில். இங்கு பூ என்பது படிமமாயின் குளமாகவும் சிந்திக்கலாம். தேன் என்பதை நீராகவும் சிந்திக்கலாம். இதே சிந்தனை உங்களுக்குள் வேறாகவும் மலர வாய்ப்புண்டு..
இதை கவனியுங்கள்..
ஒற்றை மரத்தில்
பலவகை பழங்கள்
அதெப்படி சாத்தியம் ? ஒற்றை மரத்தில் ஒரே வகை பழந்தானே வரவேண்டும். பலவகை பழங்கள் எப்படி விளையும். யோசித்துக் கொண்டிருக்கும் போதே வருகிறது ஈற்றடி இவ்வாறு..
ஒற்றை மரத்தில்
பலவகை பழங்கள்
குழந்தை வரைந்தது..!
சங்கீதா பிரபு (பிச்சிப்பூ) வின் இந்த கவிதையை வாசித்ததும், இப்போதும் பலர் இதே ஈற்றடி சிந்தனையை கவிதையில் கொண்டு வருவதை காணமுடிகிறது. இதற்கு முன்னரும் ஈற்றடியில் ஓவியச் சிந்தனை… குழந்தை வரைந்த ஓவியம்..என நிறைவு செய்திருக்கிறார்கள் பலரும்.
இதை கவனியுங்கள்..
பூட்டிய கதவுகளைத்
திறப்பதற்குள் நலம் விசாரித்தன
வாசலோரச் செடிகள்.
மு.முருகேஷ் அவர்களின் இக்கவிதை
பல நாட்களாய் ஆட்கள் இல்லாத வீட்டினை, அவர்கள் ஊரிலிருந்து வந்து கதவை திறப்பதற்குள் வாசலோரம் வளர்ந்து நிற்கும் செடிகள் நலம் விசாரிப்பதாக சித்தரிக்கிறார். வளர்ந்து நிற்கும் செடிகளே அந்த வீடானது பல நாட்களாக அடைபட்டுக் கிடப்பதை காட்சிப் படுத்தி விடுகிறது..
உண்மையில் ஹைக்கூ என்பது நாம்… வாசித்து கடக்கையில் நம்முன் காட்சியாக விரிவடைய வேண்டும். கூடவே கவிஞனது எண்ண ஓட்டத்தை வாசகன் சேர்ந்து சுமக்க வேண்டும். இதை உணர்ந்து கவிதை படையுங்கள். ஹைக்கூ சிறக்கும்.