தொடர் – 48

ஹைக்கூ ஜப்பானிய மரபுக் கவிதை வகையைச் சார்ந்தது என்பதை அனைவரும் அறிவோம்..மேற்கத்திய கவிஞர்கள் வாயிலாக உலகின் பல பகுதிகளுக்கும் பரவிய இந்தக் கவிதை வடிவம்.. பல கவிஞராலும் ஈர்க்கப்பட்டு இன்று பலராலும் எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு கவிதை வடிவமாகவும் திகழ்கிறது.

இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் ஹைக்கூ நுழைந்து நூறாண்டுகளைக் கடந்து விட்டது எனினும்.. இன்னும் பலர் அதை புரிந்தும் புரியாமலுமே கையாண்டு கொண்டிருக்கிறார்கள்.. ஒரு சிலரோ அதனை வெறும் மூன்று வரி கவிதை வடிவமாகவும் எண்ணிக் கொண்டிருப்பதும் தவறானப் போக்காகும்.

ஹைக்கூவாக இருந்தாலும் சென்ரியு வாக இருந்தாலும்.. எழுதியபின் அதை நன்கு வாசிக்கவும் வேண்டும்.. தவறான சொற்பிரயோகத்தால் கவிதையின் போக்கும் தவறாகி விட வாய்ப்புண்டு.

சமீபத்தில் நான் வாசித்த கவிதைகளை உங்களின் பார்வைக்கு தருகிறேன்.. கவனியுங்கள்..

புயலின் வருகை
அடிக்கடி அறிவிக்கப் படுகிறது
ஆழ்ந்த இரங்கல் செய்தி.

இங்கு புயலைப் பற்றிய அறிவிப்பு அறிவிக்கப் படுகிறது என காட்சிப் படுத்தி இரங்கல் செய்தி அடிக்கடி அறிவிக்கப் படுகிறது என இரு காட்சியினை மையப்படுத்திக் கவிஞர் குறிப்பிட்டுள்ளார்.. இதிலுள்ள நுட்பமான பிழை என்னவென்றால்..

புயலின் வருகையை அறிவிக்கும் பொழுதே எவ்வாறு இரங்கல் செய்தி வெளியாகும்.. புயல் வந்து கடந்து போன பின்னால் ஏற்படக் கூடிய அசம்பாவிதங்களால் வேண்டுமானால் இரங்கல் செய்தி அடிக்கடி ஒளிபரப்பாக வாய்ப்புள்ளது.. எனவே கவிதையின் முதலடியானது சின்ன மாற்றத்தை சந்திக்க வேண்டியது அவசியமாகிறது.

புயலின் வருகை என்பதை மாற்றி..

புயலின் பாதிப்பு
அடிக்கடி அறிவிக்கப் படுகிறது
ஆழ்ந்த இரங்கல் செய்தி.

என்றிருப்பின் கவிதை சிறப்பாகும்.

அதேபோல..இதை கவனியுங்கள்..

வாகன எரிவாயு
அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது
சுகாதாரச் சீர்கேடு.

இங்கும் சின்னதாய் ஒரு பிழை…

வாகன எரிவாயு அதிகரிப்பதால் சுகாதார சீர்கேடு வருமா..?! தவறு.. இதையே..

வாகனப் பெருக்கம்
அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது
சுகாதாரச் சீர்கேடு.

என்றிருந்தால்… வாகனப் பெருக்கத்தினால் சுற்றுப்புறச் சூழல் மாசு ஏற்பட காரணமாய் அதிலிருந்து வெளியாகும் புகை அமைகிறது.. அதனால் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட அதுஒரு காரணமாய் அமைகிறது என சிந்திக்க வகை செய்கிறது..

அதே போல இதை கவனியுங்கள்..

ஊர் கூடிய திருவிழா
அமைதியாக நடக்கிறது
மதக்கலவரம்.

இதுவும் சமீபத்தில் நான் வாசித்த ஒரு கவிதை..இதிலுள்ள தவறினை கவனியுங்கள்..

ஊர் திருவிழா.. அமைதியாக நடைபெறுமா… அவ்வாறு அமைதியாகவே நடக்கிறது எனக் கொண்டாலும்.. ஈற்றடி மதக்கலவரம் என்று வருகிறது.. சாதாரணக் கலவரத்திற்கே களைகட்டும்… மதக்கலவரம் என்றால் கேட்கவா வேண்டும்… அங்கே அமைதியாக நடக்கிறது என்ற இரண்டாவது அடி தவறாய் படுகிறதல்லவா.. இதை எப்படி மாற்றுவது…

ஊர் கூடிய திருவிழா
அல்லோகலப் படுகிறது.
மதக்கலவரம்.

என மாற்றினால்.. திருவிழாவும் அல்லோகலப் படுகிறது.. மதக் கலவரம் ஏற்பட்ட பின் ஊரும் அல்லோகலப் படுகிறது என பொருத்தமாய் அமையும்.

இந்த மூன்று கவிதைகளிலும் சின்னச்சின்ன மாறுதல்களை செய்தபின் தான் அதற்கான முழுமையானப் பொருளைச் சுமந்து வருகிறது… கவிதைகளை எழுதியதோடு நின்று விடாமல் நாம் எழுதியது பொருந்தி வருகிறதா என்றும் கவனித்து மாற்றம் செய்து கவிதைகளைப் படைத்தால் நீங்கள் எழுதும் கவிதை சிறக்கும்… காலம் கடந்தும் நிலைக்கும்..

ஹைக்கூவை சிறப்பாக வடிவமைக்க இது போன்ற நுட்பமான பார்வையும்.. அலசலும் தேவை.

இன்னும் வரும்...

 முன் தொடர்


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

எழுதக் கற்றுக்கொள்வோம்

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 52

தொடர் – 52

உலகின் பல நாட்டு இலக்கியங்களில் எழுதப்பட்டிருக்கும் கவிதைகளில் அபூர்வமாய் சில கவிதைகள் தமிழின் சங்க காலப் பாடல்களோடு பொருந்தி போவதும் உண்டு அவ்வாறான ஒரு நிகழ்வு ஹைக்கூ கவிதை இலக்கியத்திலும் நிகழ்ந்துள்ளது..அது போன்ற ஒன்றை இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்..

 » Read more about: ஹைக்கூ ஓர் அறிமுகம் – 52  »

எழுதக் கற்றுக்கொள்வோம்

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 51

தொடர் – 51

உலக அரங்கில் பிரசித்தி பெற்ற ஒரு ஹைக்கூ ..ஜப்பானிய ஹைக்கூ பிதாமகர் மட்சுவோ பாஷோ கி.பி 17ஆம் நூற்றாண்டில் எழுதிய ஒரு ஹைக்கூ..

பழைய குளம்
தவளை தாவிக் குதிக்க
நீரில் சப்தம்.

 » Read more about: ஹைக்கூ ஓர் அறிமுகம் – 51  »

எழுதக் கற்றுக்கொள்வோம்

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 50

தொடர் – 50

ஒரு பயணி பேரூந்து நிலையத்தில் நின்றிருந்த ஒரு பேரூந்தில் ஏறியதும்..அருகிலிருந்த பயணியிடம் ” இந்த பேரூந்து எங்கே செல்கிறது..? ” எனக் கேட்டார்..அந்த பயணியும் சற்றே கிண்டலாக..

 » Read more about: ஹைக்கூ ஓர் அறிமுகம் – 50  »