தொடர் – 36

தற்குறிப்பேற்றலும், மறைமுக கற்பனையும்..

ஹைக்கூ இன்று பலராலும் எந்தளவு விரும்பப்படுகிறதோ, அந்தளவு விமர்சிக்கப்படும் ஒரு கவிதை வடிவமாகவும் இருக்கிறது. பலரும் ஹைக்கூ எழுத விரும்புகிறார்கள்..ஆனால் ஒரு தெளிவற்ற விதிமுறைகளும்..கண்ணில் படும் ஹைக்கூக்களின் மாறுபட்ட கட்டமைப்பும் பலரையும் குழப்பிக் கொண்டே இருப்பதையும் உணர முடிகிறது.

ஒரு ஹைக்கூ கற்பனை தாங்கி மலர்கிறது. ஆனால் பலரோ கற்பனையை தவிர்க்கச் சொல்கிறார்கள். அதே போல தான் உவமை, உருவகம் போன்றவையும் ஹைக்கூவில் இரு மாறுபட்ட சிந்தனைகளில் பயணிக்கிறது.

உண்மையில் … எதை பின்பற்றுவது, அதுமட்டுமல்லாது கற்பனை என்பதை எவ்வாறு மதிப்பிடுவது..

இங்கு நேரடி கற்பனை, மறைமுகக் கற்பனை என்று இரண்டு உண்டு.

ஹைக்கூவில் நேரடி கற்பனையில் முன்னர் கவிதைகள் எழுதி இருக்கிறார்கள். ஆனால் அதை இப்போது தவிர்ப்பது நல்லது. மறைமுக கற்பனையை கவிதையில் பயன்படுத்தலாம்.

புகைப்பட உத்தியில்… சூரியனை தலையில் சுமப்பதும், உயரமான கட்டிட உச்சியை தரையில் நின்றபடி கையால் தொடுவதும் சாத்தியமாகிறது. புகைப்பட கலையில் இது மறைமுக கற்பனை. இது போன்றே ஹைக்கூவிலும் மறைமுக கற்பனையை நாம் கவிதையில் கொண்டு வரலாம்.

முன்னர்… ஹைக்கூவில் கற்பனை கலந்து எழுதுவது, உவமை, உருவகப் படுத்தி எழுதும் முறை இருந்தது. ஆனால் அவற்றை தவிர்த்த ஒரு அழகிய கவிதை வடிவை உருவாக்கவே ஹைக்கூவை மேற்கத்திய ஹைக்கூ கவிஞர்களும், ஜப்பானிய கவிஞர்களில் ஒரு சிலரும் நவீனப்படுத்தி எழுத வரையறைத்துள்ளனர்.

அதே போல… படிம உத்திமுறை மூலம் கவிஞன் தனது குறிப்பை ஹைக்கூவில் ஏற்றிச் சொல்லலாம்.

ஹொகுசி எனும் ஜப்பானிய கவிஞர், தனது இல்லம் தீப்பற்றி எரிந்ததை கண்ணுற்ற பின், தன் குருவிற்கு அத்தகவலைத்தர..

தீப்பற்றி எரிந்தது
வீழு மலரின்
அமைதியென்னே..!

இவ்வாறு எழுதி அனுப்பினாராம். தீயில் கருகி உதிர்ந்த வீடு காய்ந்து உதிரும் ஒரு மலரின் அமைதியைப் போல இருந்ததாக எழுதுகிறார். இங்கு மலரானது வீட்டிற்கான படிமம்.

இங்கு தன்குறிப்பை ஏற்றிச் சொல்கிறார். நமது மரபிலும் தற்குறிப்பேற்ற அணி என்ற ஒன்றுண்டு.

சிலப்பதிகாரத்தில்… மதுரை நகருக்குள் நுழைந்த கோவலனையும், கண்ணகியையும் அம்மாநகர கோட்டைச்சுவரின் மேல் இருந்து அசைந்து கொண்டிருந்த பாண்டியனின் மீன்கொடியானது “வாரல் என்பது போல் மறித்து கைகாட்ட” என இளங்கோவடிகள் குறிப்பிட்டு இருப்பார். இங்கு வராதீர்கள் என அக்கொடியின் அசைவு இருந்ததாக கவிஞர் தன் குறிப்பை ஏற்றிச்சொல்வார். இவை ஜப்பானிய..தமிழ் ஹைக்கூவிலும் காணப்படக் கூடிய ஒன்றாகவே இருக்கிறது.

இதை கவனியுங்கள்..

செவிட்டு ஊமை பிச்சைக்காரனின்
பிச்சைப் பாத்திரத்தை
மழை தட்டுகிறது..!

  • இஸ்ஸா

அவனே செவிடன். ஒன்றுமில்லா காலிப் பாத்திரத்தில் விழும் மழையானது தட்டுவது… இந்த நீரை அருந்தியாவது இந்த பொழுதினைப் போக்கிக் கொள் என்பதாக கொள்ளலாமோ. இது தன்குறிப்பை கவிஞர் ஏற்றிக்கூறும் முறையெனக் கொள்ளலாம்.

மறைமுக கற்பனை எனக் கொண்டால்..

இலையுதிர்கால மரம்
ஒவ்வொரு கிளையிலும்
மேகங்கள்..!

  • அருணாச்சலசிவா

மரக்கிளையில் மேகங்கள் எப்படி..? கற்பனை போல காட்சி தரலாம். ஆனால் இது கற்பனை அல்ல. நேரடி காட்சி. இலையுதிர்த்த மரக்கிளை வானத்தில் உள்ள மேகங்களையே இலைகளாக கொண்டு காட்சி தருகிறது கவிஞரின் பார்வைக்கு.

அதுபோல…

மேகம் விலக
குளத்தில் பூக்கின்றன
விண்மீன்கள்.

  • மகிழ்நன் மறைக்காடு

இதுவும் மறைமுக கற்பனைக்கான ஒரு ஹைக்கூவே. குளத்து நீரில் தெரியும் மேகமானது கலைய கவிஞனுடைய கண்ணுக்குப் புலனாகிறது வானில் உள்ள விண்மீன்கள். குளத்து நீரில். ஆனால் பொதுப்படையாக சொல்லும் போது குளத்தில் விண்மீன் எப்படி பூக்கும் என்ற ஐயத்தை தோற்றுவிக்கும் .

ஆக… இத்தகைய மறைமுக கற்பனையை ஹைக்கூ ஏற்கும்.

நாம் ஹைக்கூவை அணுகும் போது அதற்கான புரிதலோடு அணுகுதலே சிறப்பானது.

இன்னும் வரும்..

முன் தொடர்


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

எழுதக் கற்றுக்கொள்வோம்

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 50

தொடர் – 50

ஒரு பயணி பேரூந்து நிலையத்தில் நின்றிருந்த ஒரு பேரூந்தில் ஏறியதும்..அருகிலிருந்த பயணியிடம் ” இந்த பேரூந்து எங்கே செல்கிறது..? ” எனக் கேட்டார்..அந்த பயணியும் சற்றே கிண்டலாக..

 » Read more about: ஹைக்கூ ஓர் அறிமுகம் – 50  »

எழுதக் கற்றுக்கொள்வோம்

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 49

தொடர் – 49

இந்த தொடர்களின் வாயிலாக ஒரு ஹைக்கூவை சிறப்பாக எழுதுவது எப்படி.. தவிர்க்க வேண்டிய விசயங்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொண்டிருப்பீர்கள்.. ஹைக்கூ பொதுவாக நமது அனுபவங்களே.

கண்டும் ..

 » Read more about: ஹைக்கூ ஓர் அறிமுகம் – 49  »

எழுதக் கற்றுக்கொள்வோம்

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 48

தொடர் – 48

ஹைக்கூ ஜப்பானிய மரபுக் கவிதை வகையைச் சார்ந்தது என்பதை அனைவரும் அறிவோம்..மேற்கத்திய கவிஞர்கள் வாயிலாக உலகின் பல பகுதிகளுக்கும் பரவிய இந்தக் கவிதை வடிவம்.. பல கவிஞராலும் ஈர்க்கப்பட்டு இன்று பலராலும் எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு கவிதை வடிவமாகவும் திகழ்கிறது.

 » Read more about: ஹைக்கூ ஓர் அறிமுகம் – 48  »