தொடர் 29
இயற்கையின் ஒவ்வொரு நுட்பத்தில் இருந்தும் ஹைக்கூவை வடித்தெடுத்தார்கள் ஜப்பானிய கவிஞர்கள். இயற்கையை ஆராதிப்பதில் அவர்களுக்கு இணை அவர்களே. ஆகவே தான் ஹைக்கூ வாயிலாக இயற்கையையும்..இறைவனையும், ஒன்றாக கண்டார்கள்..
ஜென் என்பது மதமல்ல என ஏற்கனவே நாம் தெளிவுபடுத்தி விட்டோம்..ஆனால் ஆசான்களும், ஞானிகளும், யோகிகளும் தங்களுக்கான போதனைகளையும், செயல்களையும் ஹைக்கூவில் ஜென் உத்திமுறையில் மக்களுக்கு தந்தார்கள்.
அது எளிதில் மக்களையும் சென்றடைந்தது எனலாம்.
முன்பு ஹைக்கூவில் ஈற்றடியை திருப்பமாகவோ, முரணாகவோ அமைப்பது பற்றி கண்டோம். அது போல ஒரு உத்திமுறையை ஹைக்கூ கவிஞர்கள் ஜென்னாகவும் தரத்துவங்கினார்கள். கடினமான ஒரு பொருளையோ, கருத்தையோ மிக எளிதாக ஜென் வாயிலாக சொல்லிச் செல்ல முடிந்தது எனில் மிகையன்று.
அது மட்டுமல்ல ஹைக்கூ உத்திகளில் இயற்கையோடு இயைந்து வாழ்வியல் நெறிமுறைகளைச் சொல்லி நகரும் இந்த ஜென் உத்திமுறையே முதலிடம் வகிக்கிறது.
இதை கவனியுங்கள்…
எல்லாவற்றையும் விட
விடியலில் இந்த மலர்களில்
காண்பேன் இறைவனின் முகம்.
எதைப்போலவும் இல்லை
இதனை ஒப்பிட முடியாது
இந்த கோடைநிலவு.
ஹைக்கூ பிதாமகர் பாஷோவின் கவிதைகள் இது.
இயற்கையே இறைவனின் வசிப்பிடம். விடியலில் மலரும் மலர்களில் அவனது திருமுகத்தை கண்டுவிடலாம்..
இயற்கையை, பல்லுயிர்களையும் நேசிக்கும் மனப்பாங்கே ஜென். ஏதோ ஒரு கோடையில் பார்த்த நிலவு நிச்சயமாய் வேறெப்போதும் வரப்போவதில்லை. ஒரு நாள் வருவது நிச்சயம் அடுத்த நாள் வரப்போவதில்லை என்பது பாஷோவிற்கு தெரிந்திருக்கிறது. வாழ்க்கையில் சில நிகழ்வுகளும் இப்படித்தானே…
அதைப் போல இதை கவனியுங்கள்..
பூக்கள் மலர்ந்தன நேற்று
இன்று பலமாய் வீசும் காற்று
என்ன இது ஒரு கனவு..!
செய்கன் எழுதிய இக்கவிதை தரும் பொருள் புரிகிறதா ? ஒரு செடியில் மலரும் பூக்கள் தங்கள் வாழ்வின் வசந்தத்தை அனுபவிக்கின்றன. ஆனால் இன்று பலமாய் வீசிய ஒரு காற்று அந்த மலர்களை சின்னபின்னமாக சிதைத்து விட்டுப் போகிறது. இது ஒரு கனவாக இருந்து விடக் கூடாதா என ஆதங்கப் படுகிறார்… நேரடியான இப்பொருள் மட்டுமா இந்த கவிதையில் உலவுகிறது. மனிதனின் இருப்பும் இந்தப் பூக்களைப் போலத்தானே. நேற்றிருந்தவர் இன்று இருப்பதில்லை. அவருக்கு நெருக்கமானவர் இது ஒரு கனவாக இருக்க கூடாதா என நினைப்பதும் வாடிக்கைத் தானே.
பாதை இல்லை
இது ஒன்று தவிர
நான் நடப்பேன் தனியாக..
அமைதியாக அணிவேன்
இன்றைய வைக்கோல்
காலணிகள்.
- சான்டோகோ தனேடா
இவரின் இந்த கவிதைகளை காணுங்கள். இருக்கின்ற அந்த ஒரு பாதை கரடுமுரடாய் இருக்கலாம். பலரும் நடந்தறியாத பாதையாக கூட இருக்கலாம். ஆனால் அனைவரையும் வழிநடத்தக் கூடிய ஞானிக்கு அது தான் பாதை. அவர் நடக்கத் துவங்கி விட்டால் அவரைத் தொடர்ந்து பலர் வரலாம். ஆனால் வரும் வரை தனித்தே தான் செல்ல வேண்டும்..அதை ஏற்கும் மனநிலையும் வேண்டும்..
அதைப் போலவே வைக்கோல் காலணியும்.கி டைப்பதை திருப்தியாய் ஏற்கும் மனம், சௌகரிய குறைச்சல் என எதையும் ஒதுக்காத மனநிலை வேண்டும்..எனச் சொல்லி நகர்கிறதல்லவா.
நம் நாட்டு ஜென்னை கவனியுங்கள்..
இருட்டை விரட்டி
வீழ்ந்து போனது
மெழுகுவர்த்தி..!
- கவிஞர் சு.சேகர்.
ஒன்றை இழந்தே ஒன்றை பெற இயலும் என்பதை மிக அழகாகச் சொல்லி நகரும் ஹைக்கூ.
புல்தரையில்
யாரோ வீசிய கல்லை எடுத்தேன்
வலியோடு நிமிர்கிறது புல்..!
- காவனூர் ந.சீனிவாசன்
இவரது கவிதை உயிர் இரக்க சிந்தனையுடன், புல்லுக்கும் இரங்கும் மனப்பான்மையை கவிஞனிடத்தில் விதைத்துச் செல்கிறது. இதுவும் ஜென் உத்திமுறையே.
உத்திகளில்… இயற்கையை சிறப்பித்தும், உயிர் இரக்கச் சிந்தனையுடனும், அரிய கருத்துகளை எளிய முறையில் சொல்லிச் செல்லவும் ஜென் உத்தி பயன்படுகிறது.
1 Comment
TikTok Algorithm · ஏப்ரல் 16, 2025 at 16 h 33 min
I’m really inspired together with your writing talents and
also with the format on your weblog. Is this a paid subject or did you
customize it your self? Anyway stay up the excellent quality writing,
it’s uncommon to peer a nice blog like this one today.
LinkedIN Scraping!