ஹைக்கூவில் உத்திகள் என்பது ஹைக்கூவை வடிவமைக்க பயன்படுகிறது. பொதுவில் ஹைக்கூவில் ஈற்றடியை திருப்பம் வருமாறு அமைப்பதும், முரணாக அமைப்பதுமே உத்தி முறையாகும்.
எதுகையில் அமைப்பது மோனையில் அமைப்பது என அதுவும் உத்திமுறைகளாக சொல்லப் படுகிறது. ஆனால் அவை ஹைக்கூ வகைமையில் தான் கொள்ளப்படுமேயன்றி எதுகையோ, மோனையோ உத்தி முறை ஆகாது.
சொல்லப்படும் வகையில் அது ஒரு படிமத்தைச் சார்ந்தோ… குறியீடு பயின்று வருவதாகக் கொண்டோ ஹைக்கூ படைக்கப் படுகிறது எனலாம்.
ஹைக்கூ என்பது வெறும் காட்சி மட்டுமல்ல. மனதிற்கு மிக நெருக்கமான ஒரு வெளிப்பாடு. உணர்வுகளை நேரடியாக பிரதிபலிக்காமல் படிமத்தின் வாயிலாக அல்லது ஒரு குறியீட்டின் வாயிலாக வெளிப்படுத்திய ஒரு கவிதை வடிவமே ஹைக்கூ.
ஹைக்கூவை சரிவர புரிந்து கொள்ளாதவர்களும், எழுதத் தெரியாதவர்களுமே அதைப் பற்றி அனேக குறைகளைச் சொல்லிக் கொண்டு திரிகிறார்கள்.
ஹைக்கூ நேரடியான ஒரு பொருளையும் சொல்லும். மறைமுகமான ஒரு பொருளையும் சொல்லும். கவிக்கோ அப்துல் ரஹ்மான் அவர்கள் சொன்னது போல… குறைந்த பட்சம் இரண்டு பொருளையாவது சுட்டிக் காட்ட ஹைக்கூ தவறுவதில்லை. இந்த இரு காட்சி பரிமாணத்திற்கு ஈற்றடி திருப்பமே காரணமாகிறது எனலாம்.
இதை கவனியுங்கள்..
வீட்டில் அழைப்பு மணி
அழுத்தினேன்
எட்டிப் பார்த்தது நாய்.
- கன்னிக்கோவில் இராஜா
இந்த கவிதையை திருப்பத்திற்கான உத்திக்கான ஹைக்கூவாக கொள்ளலாம். அழைப்பு மணி அழுத்த எட்டிப்பார்க்க வேண்டிய மனிதர்களுக்கு பதிலாக நாய் எட்டிப் பார்ப்பது எதிர்பாரா ஒரு திருப்பத்தை கவிதைக்கு தந்து சுவாரஸ்யமாக்குகிறது.
இதை கவனியுங்கள்..
புகழ் பெற்ற நதி
நகரத்தைக் கடந்து போகிறது
முற்றிலும் சாக்கடையாக..!
- க.அய்யப்பன்
இந்த ஹைக்கூவை முரணுக்கு எடுத்துக் காட்டாக கொள்ளலாம். நதி என்பது தூய்மையானதாக அல்லவா ஓட வேண்டும். ஆனால் இங்கோ அந்த நதியானது நகரத்தை கடந்து செல்லும்போது “சாக்கடையாக” முரணாக அல்லவா ஓடுகிறது..
ஹைக்கூவின் அழகிற்கும், சிறப்பிற்கும் இந்த இரு உத்திகள் மிகப் பெரும் பங்காற்றுகின்றன. இது போக சிறப்பான இன்னொரு உத்திமுறையும் உண்டு அதுவே “ஜென் உத்திமுறை”… இதுவே ஹைக்கூவின் ஆதார உத்தி. ஏனெனில் ஹைக்கூ தோன்றியதும், ஹைக்கூவை வளர்த்தெடுக்க உதவியதும் ஜென் உத்தி முறையே. இது குறித்து தெளிவாக பல விளக்கங்களுடன் பிறகு காண்போம்.
2 Comments
Raju Arockiasamy · செப்டம்பர் 10, 2019 at 3 h 55 min
அருமையான நடையில் தெளிவாக விளக்கங்கள்… சிறப்பான கட்டுரை…
Code of destiny · ஏப்ரல் 16, 2025 at 17 h 02 min
I’m really inspired with your writing talents as smartly as with the structure for your weblog. Is that this a paid topic or did you modify it yourself? Either way keep up the nice high quality writing, it’s rare to peer a nice weblog like this one these days!