தொடர் 09

ஹைக்கூவில் வார்த்தைக் கட்டுப்பாடு என்பது எவ்வளவு முக்கியமோ, அந்தளவு அந்த வார்த்தைகளை கையாள்வதும் முக்கியத்துவம்பெறுகிறது. வார்த்தைச் சிக்கனமே ஹைக்கூவில் முக்கியமானதாகும்.

எந்த ஒரு வார்த்தையையும் அனாவசியமாக ஹைக்கூவில் பிரயோகிக்கத் தேவையில்லை. ஒரு வார்த்தையை நீக்கினாலும் அக்கவிதையின் பொருளானது மாறாமல் இருக்கும் பட்சத்தில் மேற்கண்ட வார்த்தையை நீங்கள் தாராளமாக நீக்கி விடலாம்.

இரவில் பெய்யும் மழை
விடியும் வரை தொடர்கிறது
மின்சாரத் தடை.

இந்த ஹைக்கூவில் ”பெய்யும்” என்ற வார்த்தை தேவையில்லாத ஒன்று. அதை நீக்கம் செய்தாலும் பொருள் மாறாது. இது போல பல கவிதைகளில் நம்மை அறியாமல் தவறுகள் நடைபெற வாய்ப்புள்ளது. அதை குறைத்துக் கொள்ள முயற்சிக்கலாம்.

வார்த்தைகளின் வலிமைக்கு மற்றொரு விளக்கம் காண்போம்…

ஹைக்கூவில் உணர்ச்சிகளுக்கு இடமில்லை என அறிவோம். மனிதன் உணர்ச்சிகளுக்கு அடிமை. ஆனால் அஃறிணைகளை ஹைக்கூவில் பலரும் உணர்ச்சிகளோடு இணைத்து எழுதுகிறார்கள். அதுவும் தவறு.

மரம் அழுகிறது என எழுதுவது ஹைக்கூவல்ல. உண்மைத் தன்மையோடு ஹைக்கூவை அணுகப் பழக வேண்டும்.

காற்றில் மரம் ஆடுகிறது என எழுதலாம்..

ஆனால் பனியில் மரம் நடுங்குகிறது என எழுதுவது தவறான வார்த்தை பிரயோகம். மரம் என்ன  மனிதனா? பயந்து நடுங்கவும், குளிரில் நடுங்கவும்.!

இது போன்ற தவறான சொற்பிரயோகங்கள் பரவலாக காணக் கிடைக்கின்றன. இதை தவிர்த்தலும் நன்று.

சீறும் பாம்பு  என எழுதலாம். ஆனால்

சீறும் பாம்பு பயமுறுத்துகிறது என எழுதக் கூடாது. உங்களை பயமுறுத்தும் பாம்பு… குழந்தைகளை குஷிப் படுத்தலாம். வார்த்தைகள் வலிமையானவை. அதை எங்கு,  எப்படி,  எதற்கு, எவ்வாறு  உபயோகப் படுத்துகிறோம் என்பதும் ஹைக்கூவில் அவசியம்.

இதை கவனியுங்கள்..

வரைந்த ஓவியம்
அழகாக இருக்கிறது
மாணவியின் முகம்.

  • நிர்மலா சிவராசசிங்கம்

வரைந்த ஓவியம்
அருமையாக இருக்கிறது
ஆசிரியரின் திறமை.

  • மயிலையூர் மோகன்.

இரண்டும் இரு வேறு ஹைக்கூ கவிஞர்களின் கவிதை..

முதல் கவிதை. ஓவியம் அழகாக இருக்கிறது என சிந்தனை ஓட்டத்தைத் தந்து, மாணவியின் முகம் அழகாக இருப்பதாக சித்தரிக்கிறது. அம்மாணவி அந்த ஓவியத்தை வரைந்தவராகவோ, ரசிப்பவராகவோ, ஏன் அந்த ஓவியத்தில் இருப்பவராகக் கூட இருக்கலாம்..

இரண்டாவது கவிதை.. வரைந்த ஓவியம் அருமையாக இருக்கிறது என்ற முதல் சிந்தனையை விதைத்து ஆசிரியரின் திறமை அருமை என விரிகிறது. இங்கு அந்த ஆசிரியர் யார்..? வரைந்தவரா.. இல்லை வரையக் கூடிய பலரை உருவாக்கியவரா..? என பல கோணங்களில் விரிகிறது.

ஹைக்கூ உங்களுக்குள் இது போன்ற பல சிந்தனைகளைக் கிளறச் செய்யும் ஆற்றல் பெற்றவையாகும்.

வார்த்தைகளின் வலிமையை அடுத்த தொடரில் காண்போம்.

இன்னும் வரும்…

முன் பகுதி தொடர் 08 


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மின்னிதழ்

ஹைக்கூ திண்ணை 13

ஹைக்கூ திண்ணை செப்டம்பர் / ஒக்டோபர் மின்னிதழைத் தொகுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன். இந்தப் பெறுமதியான வாய்ப்பை வழங்கிய கவிச்சுடர் கல்யாணசுந்தரம் ஐயா அவர்களுக்கு முதற்கண் எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன். ஹைக்கூ என்றால் என்ன, அதை விளங்கிக் கொண்டு அதன் விதிமுறைகள் பற்றி அறிந்து அதன்படி எழுத எல்லோரும் முனைகின்றார்களா என்பது கேள்விக்குறியே. சிலர் இலக்கண விதிமுறைக்கேற்ப ஹைக்கூ கவிதைகளை எழுதுகின்றனர். ஆனாலும் சிலர் இலக்கண விதிகளைக் கொஞ்சம் மீறிப் புதுமையாக, வித்தியாசமாக எழுதுபவர்களாக இருக்கிறார்கள்...

ஆன்மீகம்

அருள் வாக்கியே! அப்துல்காதிரே!

அருள் வாக்கியே அப்துல் காதிரே!
திருப்புகழ் பாடிப் புகழ்சேர்த்த மெய்ஞ்ஞானியே!

வெண்பா வினால் விளக்கேற்றியே
விந்தைகள் தான்செய்த இறைநேசரே!

(அருள்)

எரியென்றே நீபாடித் திரியேற்றி னாய்
அரியணையில் அணையென்றே ஒளிபோக் கினாய்!

 » Read more about: அருள் வாக்கியே! அப்துல்காதிரே!  »

மின்னிதழ்

நிறைய சிந்தியுங்கள் ஹைக்கூ பிறக்கும்

ஹைக்கூ கவிதைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதில் குழப்பம் வருவதில் அர்த்தமில்லை அவசியமில்லை தேவையுமில்லை. வாழ்ந்த ஹைக்கூ முன்னோடிகள் கவிக்கோ அப்துல் ரகுமான் தி. லிலாவதி, கவிஞர் மித்ரா, நிர்மலா சுரேஷ் போன்றவர்களின் கவிதை களைப் பாடமாக படியுங்கள். நாம் வாழும் காலத்தில் இருக்கின்ற தமிழக மூத்தக் கவிஞர்கள் கவிஞர் அமுதபாரதி கவிஞர் ஈரோடு தமிழன்பன் கவிஞர் அறிவுமதி கவிச்சுடர் கா. ந. கல்யாண சுந்தரம் கவிஞர் அமரன் கவிஞர் வே. புகழேந்தி கவிஞர் அனுராஜ் கவிஞர் இளையபாரதி கந்தகம் பூக்கள் இவர்களின் கவிதைகளைப் படித்து நுணுக்கங்களை கற்றுக் கொள்ளுங்கள்.