பாடல் – 100
பத்திமை சான்ற படையும் பலர்தொகினும்
எத்துணையும் அஞ்சா எயிலரணும் – வைத்தமைந்த
எண்ணின் உலவா விழுநிதியும் இம்மூன்றும்
மண்ணாளும் வேந்தர்க் குறுப்பு.
(இ-ள்.) பத்திமை சான்ற – (தம்மேல்) அன்பு நிறைந்த, படையும் – சேனையும்; பலர் தொகினும் – பகைவர் பலர்கூடி எதிர்ப்பினும், எத்துணையும் – எவ்வளவும், அஞ்சா – பயப்பட வேண்டாத, எயில் அரணும் – மதிலரணும்; வைத்து – வைக்கப்பட்டு, அமைந்து – நிறைந்துள்ள, எண்ணின் – எண்ணப்புகின், உலவா – முற்றுப் பெறாத, விழுநிதியும் – சிறப்பாகிய பொருள் வைப்பும்; இ மூன்றும் – ஆகிய இம்மூன்றும், மண் ஆளும் – பூமியை ஆளுகின்ற, வேந்தர்க்கு – அரசர்க்கு, உறுப்பு – உறுப்புக்களாம்; (எ-று.)
(க-ரை.) படையும், மதிலரணும், மிக்க செல்வமும் நன்கமையப் பெற்றுள்ள அரசனே சிறந்தவன் என்பது.
படைகுடி கூழ் அமைச்சு நட்பு அரண் ஆகிய ஆறும் அரசர்க்கு உறுப்பென்று வள்ளுவர் கூறியிருக்கவும் இவர் படை அரண் செல்வம் ஆகிய மூன்றை மட்டும் குறித்தது அமைச்சையும் நட்பையும் படையுள்ளும், நாட்டை அரணுள்ளும் அடக்கியதனாலென்க. எயிலரண் என்றது மற்றை மலை நீர் காடு அரண்களையும் கருதியதாம். உறுப்பு : தொழிலாகு பெயர். மண் : கருவியாகுபெயர்.
1 Comment
தமிழ் மாமணி புலவர் வெ. அனந்தசயனம் · செப்டம்பர் 5, 2018 at 19 h 11 min
மிகச்சிறப்பு