முன்னுரை
தமிழ் மொழியாந் தாய்மொழி பல்லாயிரம் ஆண்டிகட்கு முன்னரே தோற்றமுற்றிலங்கும் உயர் தனிச் செம்மொழி. இதனைச் சங்கம் நிறுவி வளர்த்துக்கொள்ள காத்த பெருமை பழம்பதியாகிய பாண்டிய நாட்டரச்சராம் பாண்டியருக்கே உரியது. இங்ஙனம் பாண்டியர் நிறுவிய சங்கம் – முதல், இடை, கடை என மூன்றாகும். இவற்றில் மதுரையிலிருந்த கடைச்சங்கமிருந்தது தமிழாராய்ந்தவர்; சிறுமேதாவியார், சேந்தம்பூதனார், அறிவுடையானார், பெருங்குன்றூர்கிழார், இளந்திருமாறன், மதுரையாசிரியர் நல்லந்துவனார், மருதனிளநாயக்கனார், கணக்காயனார் மகனார் நக்கீரனார் முதலானவர். அவருளிட்டுப் பலர் பாடினர். அவர்கள் பாடியன கூத்தும், வரியும், பேரிசையும், சிற்றிசையும், பத்துப்பாட்டும், எட்டுத்தொகையும், பதினென் கீழ்க்கணக்கும் என்றித்தொடக்கத்தன. இவற்றுள் பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் மேற்கணக்கைச் சார்ந்தவை.
“அடிநிமிர் பில்லாச் செய்யுட் டொகுதி
அறம்பொருள் இன்பம் அடுக்கி அவவத்
திறம்பட உரைப்பது கீழ்க்கணக் காகும்.”
என்ற பன்னிரு பாட்டியற் சூத்திர மேற்கோளுக் கிணங்கக் குறைந்த அடிகளையுடைய செய்யுட்களால் அறம் பொருள் இன்பம் இவற்றைத் தழுவியமைந்த நூல் கீழ்கணக்காகும். கணக்கு – நூல். கீழ்க்கணக்குச் சிறுபான்மை ஐம்பதிற் குறைந்தும், ஐந்நூற்றின் மிக்கும் வரும். இனியது, இன்னா, கார், களவழி நான்கும் ஐம்பதிற் குறைந்து வந்தன. முப்பாலாகிய திருக்குறள் ஐந்நூற்றின் மிக்கு வந்தது. இக்கீழ்க்கணக்கு நூல்களையே “தாயபனுவல்” என்னும் பெயராற் கூறவர் எனவும், இவை அறம் பொருளின்பம் என்னும் மூன்றற்கும் இலக்கணஞ் சொல்லுவ எனவும், வேறிடையிடை அவையன்றியுந் அவையன்றியும் தாய்ச் செல்வது முண்டெனவும், இச்செய்யுட்கள் அடி நிமிராது இரண்டடி முதல் ஆறடி இறுதியாக வருவன எனவும், அவை எண்ணுச் சுருங்கிச் சிலவாக வருவன எனவும், “வனப்பியல்தானே வகுக்குங்காலைச், சின்மென் மொழியாற்றாய பனுவலோ, டம்மைதானே அடிநிமிர் பின்றே” என்ற தொல்காப்பியம் பொருளதிகாரம் செய்யுளியல் சூத்திரத்துப் பேராசிரியரும், நச்சினார்க்கினியரும் உரைத்தவற்றான் உணர்ந்துகொள்க.
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களாவன:
” நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப்
பால்கடுகங் கோவை பழமொழி மாமூலம்
மெய்ந்நிலைய காஞ்சியோ டேலாதி யென்பவே
கைந்நிலைய வாங்கீழ்க் கணக்கு.”
என்ற பழம்பாட்டிற் கண்டாங்கு 1. சமணமுனிவர்கள் இயற்றிய “நாலடியார்”, 2. விளம்பிநாகனார் இயற்றிய “நான்மணிக்கடிகை”, 3. பூதஞ்சேந்தனார் இயற்றிய “இனியவை நாற்பது”, 4. கபிலர் பாடிய “இன்னா நாற்பது”, 5. மதுரைக் கண்ணங்கூத்தனார் இயற்றிய “காற்நாற்பது”, 6. பொய்கையார் பாடிய “களவழி நாற்பது”, 7. மாறன் பொறையனார் இயற்றிய “ஐந்திணை ஐம்பது”, 8. கண்ணஞ் சேந்தனார் பாடிய “திணைமொழி ஐம்பது”, 9. மூவாதியார் இயற்றிய “ஐந்திணை எழுபது”, 10. கணிமேதாவியர் இயற்றிய “திணைமாலை நூற்றைம்பது”, 11. திருவள்ளுவனார் இயற்றிய “திருக்குறள்”, 12. நல்லாதனார் இயற்றிய “திரிகடுகம்”, 13. பெருவாயின் முள்ளியார் பாடிய “ஆசாரக்கோவை”, 14. முன்றுறையரையனார் பாடிய “பழமொழி”, 15. காரியாசான் பாடிய “சிறுபஞ்சமூலம்”, 16. மாறோகத்து முள்ளிநாட்டு நல்லூர்க் காவிதியார் மகனார் புல்லங்காடனார் இயற்றிய “கைந்நிலை”, 17. கூடலூர்க்கிழார் இயற்றிய “முதுமொழிக்காஞ்சி”, 18. கணிமேதாவியர் இயற்றிய “ஏலாதி” என்பன.
இவ்வெண்பாப் பழம்பிரதிகளுள் “இன்னிலைய காஞ்சியுட னேலாதி எப்பவே, நன்னிலைய வாங்கீழ்க் கணக்கு”, “ஐந்தொகை முப்பால், நன்னிலைய வாங்கீழ்க் கணக்கு” எனச் சிறிது சிறிது வேறுபட்டுக் காணப்படுதலின், சிலர் இன்னிலையென்று பொய்கையார் பாடிய 45 வெண்பாக்களடங்கிய நூலை மேற்குறித்த கைந்நிலைக்குப் பதிலாகக் கூறுவர்.
“கண்ணகல் ஞாலம் அளந்ததூஉம் காமருசீர்த்
தண்ணறும் பூங்குருந்தம் சாய்த்ததூஉம் – நண்ணிய
மாயச் சகடம் உதைத்ததூஉம் இம்மூன்றும்
பூவைப்பூ வண்ணன் அடி. ”
என்ற திரிகடுக வழிபடு கடவுள் வணங்கச் செய்யுளான், இந்நூலாசிரியராகிய “நல்லாதனார்” வைணவர் என்பது பெறப்படும். “அருந்ததிக் கற்பினார் தோளும் … … … … நட்பும் இம்மூன்றும், திரிகடுகம் போலும் மருந்து.” எனக் கூறப்பட்டதிலுள்ள திரிகடுகம் என்னுஞ் சொல்லே சிறப்பாகிட இந்நூலுக்குச் சிறப்புப் பெயராகக் கொள்ளப்பட்டது; உவமையாகு பெயர்.
திரிகடுகம் : சுக்கு, திப்பலி, மிளகு என்பது, பிங்கல நிகண்டு சூத்திரம் விளங்கும். சுக்கு முதலிய மூன்றினாகிய கடுகம் ஒருவர் உடல் நோயை மாற்றி இன்பம் புரிவதுபோல் ஒவ்வொரு பாட்டின் அமைந்த மும்மூன்று பொருளும் உளநோயாகிய அறியாமையை போக்கி இன்பஞ்செய்வன என்க. இந்நூல் காப்பு செய்யுளுட்பட 101 வெண்பாக்களைக் கொண்டது. கடைச்சங்க காலத் தொகைநூல்களில் ஒன்றாகக் கருதப்படுதற் கிணங்க, இந்நூல் இன்றைக்கு 1800 ஆண்டுகட்கு முன் இயற்றப்பட்டதென்பது பெறப்படும்.
இந்நூற்குப் பல உரைகள் வெளிவந்துள்ளன. சில பொழிப்புரையுடனும், சில பொழிப்புரை கருத்துரையுடனும், சில பதவுரை முதலிய சில குறிப்புகளுடனும் விளங்குகின்றன. இவற்றினுரைகளிற் கண்ட நயங்களைக் கொண்டும், காணாது நிற்கும் உரைக்குறிப்பு, இலக்கணக்குறிப்பு இவற்றைச் சேர்த்தும் “விருத்தியுரை யொன்றை” எழுத முற்பட்டு இதனுடன் அருஞ்சொற் பொருளதிகாரமும், செய்யுள் முதற் குறிப்பதிகாரமும் படிப்பவர்க்கு உதவியாகச் சேர்க்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இம்முயற்சி இனிது நிறைவேறத் தோன்றாத்துணையாய் நிற்கும் இறைவன் திருவருளை என்றும் நினைந்து துவங்கியுள்ளேன்.
இங்ஙனம்
கவிஞர் கு. நா. கவின்முருகு. (துபாய்)
குருவராயப்பேட்டை – 631101