(காப்பு)
கண்ணகல் ஞாலம் அளந்ததூஉம் காமருசீர்த்
தண்ணறும் பூங்குருந்தம் சாய்த்ததூஉம் – நண்ணிய
மாயச் சகடம் உதைத்ததூஉம் இம்மூன்றும்
பூவைப்பூ வண்ணன் அடி.
(பொருள்):
கண் அகல் – இடம் அகன்ற, ஞாலம் – பூமியை, அளந்ததூஉம் – அளந்ததும், காமரு – விருப்பப்பட்ட, சீர் – சிறப்பையுடைய, தண் – குளிர்ச்சியும், நறும் – மணமும் (பொருந்திய), பூ குருந்தம் – மலர்களையுடைய குருந்த மரத்தை, சாய்த்ததூஉம் – முறித்ததும், கண்ணிய – கிட்டி வந்த, மாயச் சகடம் – வஞ்சகமான வண்டியை, உதைத்ததூஉம் – உதைத்ததும், இம்மூன்றும் – ஆகிய இம்மூன்றும்(செய்தவை), பூவை – காயாம்பூவை போலும், வண்ணன் – நிறத்தினையுடைய திருமாலின், அடி – திருவடிகளாம்; (என்றவாறு).
(கருத்துரை):
எவ்வுலகத்தாரும் உய்யும்படி உலகளந்ததும், தமக்கும் தம்மவருக்கும் இடர் செய்யத் துணிந்த தீயர்களை அழித்தல் செய்ததும் ஆகிய அத்திருவடியைத் துதிக்க நேரிடும் இடையூறுகள் நீங்கும்.
எடுத்துக்கொண்ட நூல் இனிது முற்றுப்பெறும் பொருட்டு, இச்செய்யுளால் கடவுள் வணக்கம் செய்யப்பட்டது. கடவுள் வணக்கம் ஏற்புடையக்கடவுள் வணக்கம், வழிபாடு கடவுள் வணக்கம் என்றிருவகைப்படும். இது வழிபடுகடவுள் வணக்கம். இங்குக் குறித்த கடவுளே காத்தற் கடவுளாகவும் இருக்கின்றார். காப்புச் செய்யுளில் காக்கும்படி சிறப்பாக வேண்டப்படுபவர் திருமாலும் பிள்ளையாரும் ஆவர். இக்கடவுள் வாழ்த்துப் படர்க்கையில் கூறப்பட்டுள்ளது.
திரிகடுகம் என்னும் இந்நூலிற் செய்யுள்கள்தோறும் மும்மூன்று பொருளைச் சேர்த்துச் சொல்வது தோன்ற இக்காப்புச் செய்யுளினும் திருமாலின் திருவடிகள் செய்த மூன்று செயல்களைச் சேர்த்துக் கூறினார்.