பாடல் – 99

கற்றாரைக் கைவிட்டு வாழ்தலும் காமுற்ற
பெட்டாங்கு செய்தொழுகும் பேதையும் – முட்டின்றி
அல்லவை செய்யும் அலவலையும் இம்மூவர்
நல்லுலகம் சேரா தவர்.

(இ-ள்.) கற்றாரை – கற்றறிவுடையாரை, கைவிட்டு – முற்றும் விட்டு நீக்கி, வாழ்தலும் – வாழ்பவனும்; காமுற்ற – தான் விரும்பியவற்றை, பெட்டாங்கு – விரும்பினாற்போல, செய்து ஒழுகும் – செய்து நடக்கும், பேதையும் – அறிவில்லாதவனும்; முட்டு இன்றி – தடையில்லாமல், அல்லவை செய்யும் – தீங்குகளைச் செய்யும், அலவலையும் – பேச்சுக்காரனும்; இ மூவர்- ஆகிய இம் மூவரும்; நல் உலகம் – நல்ல உலகங்களை, சேராதவர் – சேராதவராவார், (எ-று.)

(க-ரை.) கற்றவரைக் கைவிட்டிருப்பதும், வேண்டியவற்றை ஆராயாமல் செய்யத் துணிதலும், தீங்குகளைச் செய்து அவற்றைப் பற்றிப் பேசுதலும் நல்ல உலகம் சேரக் காரணமாக மாட்டா என்பது.

வாழ்தல் என்பது வாழ்வானுடைய தற்கிழமையாகி நிற்றலால் சேராதவர் என்ற குறிப்பால் அவ்வாழ்வோனை உணர்த்தியது; பெட்டாங்கு – பெட்ட ஆங்கு.

முன் பக்கம் செல்ல…    தொடரும்