பாடல் – 27

உண்பொழுது நீராடி யுண்டலும் என்பெறினும்
பால்பற்றிச் சொல்லா விடுதலுந் -தோல்வற்றிச்
சாயினுஞ் சான்றாண்மை குன்றாமைஇம்மூன்றுந்
தூஉய மென்பார் தொழில்.

(இ-ள்.) உண்பொழுது – உண்ணுதற்குரிய காலத்தில், நீர் ஆடி – குளித்து, உண்டலும் – உண்ணுதலும்; என் பெறினும் – (சாட்சியாகும் பொழுது) எவ்வளவு பெரும் பயனை அடைவதாயிருந்தாலும், பால் – ஒரு பக்கம், பற்றி – சார்ந்து, சொல்லா விடுதலும் – பொய்க்கரி சொல்லாமலிருத்தலும்; தோல் வற்றி – (உணவின்மையால்) உடம்பு இளைத்து, சாயினும் – அழிவதாயிருந்தாலும், சான்று ஆண்மை – பல நற்குணங்களால் நிறைந்து அவற்றை ஆளுதல், குன்றாமை – குறையாமையும்; இ மூன்றும் இவை மூன்றும், தூஉயம் – (மன மொழி மெய்களால்) குற்றமற்றவர்களாயிருக்கின்றோம், என்பார் – என்று கருதுவோர் தொழில் – செயல்களாம், (எ-று.)

(க-ரை.) நீராடி யுண்பதும், பொய்க்கரி புகலாமலிருப்பதும், உயிர் நீங்கினும் சான்றாண்மை நீங்காதிருப்பதும் தூயவர் செயல்கள்.

விதித்த காலங்களில் நீராடக் கூடாமற் போனாலும் உண்ணும் பொழுதாயினும், நீராடுதல் இன்றியமையாத தென்பது. என் : எவன் என்னும் வினாப்பெயர். சான்று – அறிவின் நிறைவு; சால் என்னும் உரிச்சொல் லடியாகப் பிறந்த பெயர்; று : விகுதி, ஆண்மை – ஆளுதல்; தொழிற்பெயர். தோல் – உடம்பு : சினையாகு பெயர். வற்றி : வறுமை என்னும் பண்புப் பகுதி ஈறு கெட்டுப் பகுதி இரட்டித்து இகர விகுதி பெற்றது. தூஉயம் : உயிரளபெடை; இசை நிறைத்தற்கண் வந்தது. சான்றாண்மையாவது – பல குணங்களாலும் நிறைந்து அவற்றை யாடற்றன்மை. ‘ஊழி பெயரினுந் தாம் பெயரார் சான்றாண்மைக், காழி யெனப்படுவார்.’ என்ற பொய்யாமொழிக் கிணங்கித் தோல்வற்றிச் சாயினும் என்றார். பால் – பக்கம். வள்ளுவரும் “சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந் தொருபாற், கோடாமை சான்றோர்க் கணி” என்று கூறியுள்ளார். இதில் ஒருபாற் கோடாமை யாவது – வினாவிடைகளாற் கேட்டவற்றை மறையாது பகை நொதுமல், நட்பென்னும் மூன்று திறத்தார்க்கும் ஒப்பக் கூறுதல். நீராடுவதனால் அழுக்கு முதலிய உடம்பின் குற்றம்.

நீங்குதலும், பால்பற்றிச் சொல்லாமையினால் பொய் முதலிய வாய்க்குற்றம் நீங்குதலும், சான்றாண்மை குன்றாமையினால் வஞ்சனை முதலிய மனக்குற்றம் நீங்குதலும் சொல்லப்பட்டன.

முன் பக்கம் செல்ல…    தொடரும்


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

இலக்கணம்-இலக்கியம்

நாட்டுப்புற காதல் பாடல்களில் காணப்படும் சங்க அகஇலக்கியக் கூறுகள்

முன்னுரை

நாட்டுப்புற மக்களின் காதல் உணர்வின் வெளிப்பாடே காதல் பாடல்கள் ஆகும். அகத்தின் கண் மறைத்தும் புறத்தின் கண் புலப்பட்டும் மெய்ப்பாடுகளால் தாக்கப்பெறும் வலிய சக்தியே காதல். ஆண், பெண் என்ற தத்துவத்தின் வித்தாகவும் அவற்றின் வாழ்வுக்கும் வளமைக்கும் அடிப்படையாகவும் காதல் விளங்குவதைக் காணலாம்.

 » Read more about: நாட்டுப்புற காதல் பாடல்களில் காணப்படும் சங்க அகஇலக்கியக் கூறுகள்  »

இலக்கணம்-இலக்கியம்

காலந்தோறும் கவிதை

கதையென்பது ஓர் உணர்வுப் பரிமாற்றம். தனக்கேற்றபட்ட சுய அனுபவங்களை, தாக்கங்களை ஏனையவர்களோடும் பகிர்ந்து கொள்ள எடுக்கும் முயற்சியே கவிதை.

கவிதைக்கு நீண்ட வரலாறு உண்டு என்று கூறினோம். ஆம். கவிதை, செய்யுள் என்பவை மன்னர் காலத்தில் மன்னர்களால் புகழப்பட்டது.

 » Read more about: காலந்தோறும் கவிதை  »

இலக்கணம்-இலக்கியம்

கம்பன் கவிநயம்… தொடர் – 11

கம்பனின் கவியாற்றல் ஒரு வியப்புக்குறியாகவே இன்றளவும் உள்ளது.

தமிழ் மொழியைக் கையாண்ட விதம், சொற்களை சொக்கட்டான் போல் விளையாடி கையில் எடுத்து கவிதைக்குள் பின்னி வைத்த அழகு வெறும் வார்த்தைகளால் நம்மால் சொல்ல முடியவில்லை.

 » Read more about: கம்பன் கவிநயம்… தொடர் – 11  »