பாடல் – 24

காண்டகு மென்றோட் கணிகைவா யின்சொல்லுந்
தூண்டிலின் உட்பொதிந்த தேரையும் – மாண்டசீர்க்
காழ்த்த பகைவர் வணக்கமும் இம்மூன்றும்
ஆழ்ச்சிப் படுக்கும் அளறு.

(இ-ள்.) காண் தகு – காணுதற்குத் தக்க, மென்தோள் – மெல்லிய தோள்களையுடைய, கணிகை – வேசையின், வாய் – வாயிற் பிறக்கின்ற, இன்சொல்லும் – இனிய மொழியும்; தூண்டிலினுள் – தூண்டிலினிடத்து, பொதிந்த – (மீனுக்கு இரையாக அதன் முள்ளை மறைத்து) வைக்கப்பட்ட, தேரையும் – தவளையும் : காழ்ந்த – வயிரம் பற்றிய, பகைவர் – பகைவர்களுடைய, மாண்ட – மாட்சிமைப்பட்ட, சீர் – சீரையுடைய, வணக்கமும் – வணக்கமும்; இ மூன்றும் – ஆகிய இம் மூன்றும், ஆழ்ச்சிப் படுக்கும் – (உயிர்களைத் தன்னுள்ளே) அழுந்தப் பண்ணுகின்ற, அளறு – நரகம் (போல்வனவாம்); (எ-று.)

(க-ரை.) வேசியர் பேச்சும், பகைவர் வணக்கமும், வெளிக்கு நலம்போ லிருந்து உள்ளே கவடு கொண்டிருத்தலால் நலமல்ல; ஆதலால் அவற்றை நம்புதல் தூண்டிலில் வைத்த தவளையை விழுங்கப்போய், மீன் அகப்பட்டுக் கொண்டு கெடுவது போல் கெடுதியே விளைவிக்கும்.

காண்தகு – காண்டகு, காண் : முதனிலைத் தொழிற்பெயர், நான்கனுருபு தொக்கதாகக் கொண்டு, காணுதற்கு என்று பொருள் சொல்லப்பட்டது. கணிகை – கணிக்கின்ற தன்மையிலிருப்பவள். அஃதாவது “செக்கூர்ந்து கொண்டாருஞ் சேர்ந்த பொருளுடையார், அக்காரம் அன்னார் அவர்க்கு” என்ற நாலடிச் செய்யுட்படி எவன் மிக்க பொருள் தருபவனென்று சிந்திக்கின்றவன் என்பதாம், வாய் என்று வேண்டாது கூறியது, பொருளுடையாரிடத்துக் கடுஞ்சொல் பயிலாமையைக் குறிக்கவேண்டியாம். தூண்டில் : தொழிலாகு பெயர் மீன்களை விரும்பத் தூண்டுவது. இனி, இல் : கருத்தாப் பொருள் விகுதியாகவுங் குறிக்கலாம். ஆழ்ச்சி – ஆழுதல் : தொழிற் பெயர். காழ்த்த : காழ் என்னும் பெயரடியாகப் பிறந்த இறந்த காலப் பெயரெச்சம். நரகம் போலுதலாவது அழிதற் கேதுவாய துன்பம் தருவது.

முன் பக்கம் செல்ல…    தொடரும்


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

இலக்கணம்-இலக்கியம்

நாட்டுப்புற காதல் பாடல்களில் காணப்படும் சங்க அகஇலக்கியக் கூறுகள்

முன்னுரை

நாட்டுப்புற மக்களின் காதல் உணர்வின் வெளிப்பாடே காதல் பாடல்கள் ஆகும். அகத்தின் கண் மறைத்தும் புறத்தின் கண் புலப்பட்டும் மெய்ப்பாடுகளால் தாக்கப்பெறும் வலிய சக்தியே காதல். ஆண், பெண் என்ற தத்துவத்தின் வித்தாகவும் அவற்றின் வாழ்வுக்கும் வளமைக்கும் அடிப்படையாகவும் காதல் விளங்குவதைக் காணலாம்.

 » Read more about: நாட்டுப்புற காதல் பாடல்களில் காணப்படும் சங்க அகஇலக்கியக் கூறுகள்  »

இலக்கணம்-இலக்கியம்

காலந்தோறும் கவிதை

கதையென்பது ஓர் உணர்வுப் பரிமாற்றம். தனக்கேற்றபட்ட சுய அனுபவங்களை, தாக்கங்களை ஏனையவர்களோடும் பகிர்ந்து கொள்ள எடுக்கும் முயற்சியே கவிதை.

கவிதைக்கு நீண்ட வரலாறு உண்டு என்று கூறினோம். ஆம். கவிதை, செய்யுள் என்பவை மன்னர் காலத்தில் மன்னர்களால் புகழப்பட்டது.

 » Read more about: காலந்தோறும் கவிதை  »

இலக்கணம்-இலக்கியம்

கம்பன் கவிநயம்… தொடர் – 11

கம்பனின் கவியாற்றல் ஒரு வியப்புக்குறியாகவே இன்றளவும் உள்ளது.

தமிழ் மொழியைக் கையாண்ட விதம், சொற்களை சொக்கட்டான் போல் விளையாடி கையில் எடுத்து கவிதைக்குள் பின்னி வைத்த அழகு வெறும் வார்த்தைகளால் நம்மால் சொல்ல முடியவில்லை.

 » Read more about: கம்பன் கவிநயம்… தொடர் – 11  »