கம்பனின் கவிநயத்தில் உவமைகள் நாணித் தலைகுனிகின்றன… ஆம்… வியப்பாக இருக்கிறதா ?

தமிழின் அமுதத்தைப் பருக இராமாயணக் காவியத்தை கம்பன் நமக்கு அளித்த கொடை என்றே கூற வேண்டும்.

கம்பனின் நயமிக்க வார்த்தைகளில் உவமைகளும் விலகிச் செல்கின்றன….

இளையபெருமாள் இலக்குவனால் மூக்கறுபட்டு அவமானம் தாங்காது இலங்கை நகர் புகும் சூர்ப்பனகை தனது அண்ணன் இராவணனின் காலடியில் வந்து வீழ்கிறாள். இந்த அவல நிலைக்கு யார் காரணம் ? என வினவும் இராவணனுக்கு சூர்ப்பனகை நடந்ததெல்லாம் கூறுகிறாள்.

இராமன் மற்றும் இலக்குவனின் பேரெழிலை கம்பன் இங்கே சூர்ப்பனகை வழி தனது கவித்திறனால் அற்புதமாய்ப் படைக்கிறார். மேலும் சூர்ப்பனகை தனது சூழ்ச்சித் திறனால் சீதையின் பேரெழிலை எடுத்துரைத்து இராவணனுக்கு காமப்பசியைத் தூண்டுகிறாள்.

இங்குதான் கம்பனின் கவிநயம் உவமைகளும் நாணமுற்று ஓடுகின்றன… அங்கம் சிதைந்து மூக்கறுபட்ட சூர்ப்பனகை சீதையின் எழிலைப் பற்றி கூறுமிடத்து…

இராவணா, அந்த சீதை எப்படி இருக்கிறாள் தெரியுமா…
அவள் நெற்றி வில் போல் இருக்கும்,
அவள் விழி வேல் போல் இருக்கும்,
அவள் பல் முத்துப் போல் இருக்கும்,
அவள் இதழ்கள் பவளம் போல் இருக்கும்,
என்றெல்லாம் சொன்னாலும்,
சொல்வதற்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம்
ஆனால் அது உண்மை இல்லை.

அவளின் அழகுக்கு உவமையே இல்லை.

கம்பன் இங்கே சொல்லமுடியாது திணறி தனது கவிநயத்தை சரியாகப் பயன்படுத்துகிறான்.

நெல் புல் மாதிரி இருக்கும் என்று உவமை சொன்னால் சரியாகுமா ?

புல்லைவிட நெல் உயர்ந்தது தானே ? அதுபோல் இந்த உவமைகளை விட சீதையின் அழகு உயர்ந்தது…எந்த உவமைகளாலும் இட்டு நிரப்பமுடியாது என்று சொல்வதாக கம்பன் அங்கே தனது சொல்லாற்றலால் உவமைகளை நாணித் தலைகுனியச் செய்கிறான். சீதையின் அழகை உச்சத்தில் கொண்டுபோய் நிறுத்துகிறான்…..அடடா…சுவைப்போம் அந்த பாடலை …

வில் ஒக்கும் நுதல் என்றாலும், வேல்
ஒக்கும் விழி என்றாலும்,
பல் ஒக்கும் முத்து என்றாலும்,
பவளத்தை இதழ் என்றாலும்,
சொல் ஒக்கும்; பொருள் ஒவ்வாதால்;
சொல்லல் ஆம் உவமை உண்டோ?
“நெல் ஒக்கும் புல்” என்றாலும்,
நேர் உரைத்து ஆகவற்றோ!

(சூர்ப்பனகை சூழ்ச்சிப் படலம்… 74)

(ஒரு பொருளுக்கு இன்னொன்றை உவைமையாகச் சொல்ல வேண்டும் என்றால், உவமை பொருளை விட சிறப்பாக இருக்க வேண்டும்.)

கண்ணதாசன் தனது பாடல் வரிகளில் சொல்லாத வர்ணனையா? சிவந்த மண் படத்தில் பார்வை யுவராணி என்ற பாடல் …

“பாலென்று சொன்னாலும் பழமென்று சொன்னாலும் ஏனென்று தேன் வாடுமே..
நூலென்ற இடையின்னும் நூறாண்டு சென்றாலும் தேர்கொண்ட ஊர்கோலமே..”

என்ற வரிகளின் கவிதை நயம் பாருங்கள். இந்த பாடலில் தொடர்ந்து

“மான் வண்ணம் என்றாலும் மலர் வண்ணம் என்றாலும் குறைவென்று தமிழ் சொல்லுமே”

என்னும் போது உச்சம்தான் எவ்வளவு அழகு.

நிழல் நிஜமாகிறது படத்தில் கண்ணதாசனின் நயமிக்க வரிகள்…

“அம்பு விழி என்று ஏன் சொன்னான் அது பாய்வதினால் தானோ – அவள்
அருஞ்சுவைப் பாலென ஏன் சொன்னான் அது கொதிப்பதனால் தானோ”

(ஒரு பொருளுக்கு இன்னொன்றை உவைமையாகச் சொல்ல வேண்டும் என்றால், உவமை பொருளை விட சிறப்பாக இருக்க வேண்டும்.)

தொடர் 9
தொடர் 11


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

இலக்கணம்-இலக்கியம்

தமிழ்நெஞ்சம் புகழாரம்

தமிழ்நெஞ்சம் புகழாரம் புத்தகம் பற்றி ஒரு பார்வை...

ஒரு புகழாரத்தைத் தனிப் புத்தமாக பதிக்க வேண்டுமென்றால் அதன் தரம் எப்படி இருக்கும்? இப்படித்தான் இருக்கும் என்கிறது இந்தத் தொகுப்பு. தித்திப்பே திரண்டு வந்து சொற்களுக்குள் புகுந்து கொண்ட திகட்டாத இனிப்பு.நாவூறும் பாக்களின் நற்கோர்வை காரணம் அதன் சொற்கோவை.

 » Read more about: தமிழ்நெஞ்சம் புகழாரம்  »

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 20

தொடர் 20

வெண்பா ஆசிரியப்பா இரண்டு பற்றியும் தெரிந்து கொண்ட நாம் அடுத்ததாக கலிப்பாவைக் காண்போம்.

இது 3 ஆவது பாவகை

மாமுன் நிரை
விளமுன் நேர்
காய்முன் நேர் இவை வெண்பா

நேர்முன்நேர்
நிரைமுன் நிரை
நேர் முன் நிரை
நிரை முன் நேர் இவை ஆசிரியப்பா

ஆனால் கலிப்பாவில்

காய்முன் நிரை வரும்
அதாவது கலித்தளை மிகுந்து வரும்
மற்ற தளைகள் குறைந்து வரலாம்
புளிமாங்காய் கருவிளங்காய் அதிகம் வரும்
கனிச்சீர்கள் வாரா
அளவடிகளால் ஆனது

கலிப்பா மற்ற பாக்கள் போல ஒரே உறுப்புகள் கொண்டமையாமல் பல உறுப்புகள் உடையது.

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 20  »

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 19

தொடர் 19

வெண்பாதான் கடினம் என்று புலவர்கள் சொல்வதுண்டு. வெண்பாவில் சிறப்பாக எழுதுபவர்களை வெண்பாப் புலி என்றும் அழைக்கப்படுவார்கள். நிறைய தமிழ் நூல்கள் வெண்பாவில் புனையப் பட்டுள்ளன. நீங்களும் இப்போது வெண்பா எழுத முற்பட்டிருப்பீர்கள் எனக் கருதுகிறேன்.

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 19  »