கம்பன் தனது இராமாயணக் காவியத்தில் நதிகள், ஆறுகள், கடல் போன்றவற்றின் எழில் தோற்றத்தையும், இராமன், இலக்குவன் சீதை ஆகியோர் கண்ட அந்த ஆற்றின் தன்மை, மேன்மை மற்றும் வளமை பற்றியும் தனது கவித்திறனால் அழகுற வடித்துள்ளார்.
நதிகளில் சிறந்தான சரயு நதியை பற்றிக் கூறும் போது நம் கண் முன்னே அந்த வளமையான கட்சிகள் விரிகின்றன.
சரயு நதி புலவர் பாடும் புகழ் மிக்க ஆறாகும்.இமயமலையின் கண் தோன்றும் இந் நதி,நறுமலர்ச் சோலைகளிலும்,சண்பகமரங்கள் அடர்ந்த காடுகளிலும் புகுந்து அவற்றை அழகு பெறச் செய்கிறது.அதன் பின்னர் தடாகங்களை நிரப்பியும்,நந்தவனங்களையும் வயல்களையும் செழிக்கச் செய்கிறது.இத் தன்மைத்தால்.சரயு நதி உடல் தோறும் உலாவும் உயிரே போல் விளங்குகிறது என்கிறார்.
“இரவி தன்குலத் தெண்ணிபல வேந்தர்தம்
புரவு நல்லொழுக் கின்படி பூண்டது
சரயு வென்பது தாய் முலையன்ன திவ்
வரவு நீர்நிலத்தோங்கு முயிர்க்கெல்லாம்.”
(பால-ஆற்றுப்படலம் -24)
இமயமலையில்,தோன்றி,வழிந்துபெருகியோடும் சரயு நதி ஜீவநதி; என்றும் இடைவற்றாமல் ஓடுகிறது.அதற்கு அந்த நதி பாயும் கோசல நாட்டு மன்னர்களின் நல்லொழுக்கம் ஒப்புவமையாகிறது.பிரசித்தி பெற்ற சூரியகுலத்தைச் சேர்ந்த அந்த அரசர்கள் ஒருவர் பின் ஒருவராக நெடுங்காலமாக அரசாட்சி செய்கிறார்களாம்;அவர்களுடைய கால்வழிகள் இடைவற்றாமலிருக்கிறது. ஒழுக்கமும் அப்படியே இடையறாது பெருகி வந்திருக்கிறது என்பதை நதியை வருணிக்கும் போது கம்பன் தன் புனைவைப் பார்க்கமுடிகிறது.
இப்படிப்பட்ட அரசர்கள் ஆளும் இராஜ்யத்தை வளஞ்செய்து அழகு செய்யும் ஜீவநதி பாலூட்டிச் சீராட்டிக் குழந்தைகளை வளர்க்கும் தாயைப் போன்றது. சரயு என்பது தாய் முலை அன்னது என்று கூறுவது அவரது கவிப் புனைவின் உச்சமல்லவா இந்த வரிகள்.
“முல்லையைக் குறிஞ்சியாக்கி,மருதத்தை முல்லையாக்கி
புல்லிய நெய்தல் தன்னைப் பொருவறு மருதமாக்கி
எல்லையில் பொருள்களெல்லாம் இடைதறுமாறு நீரால்
செல்லுறு கதியிற்செல்லும் வினைஎனச் சென்றதன்றே.”
உயிர்களை வினை பலவகைப் பிறப்புகளாக மாற்றுவது போலச், சரயு நதி தன் ஓட்டத்தால் முல்லையைக் குறிஞ்சியாகவும், மருதத்தை முல்லையாகவும், நெய்தலை மருதமாகவும் மாற்றி, அந்த நிலங்களின் பொருட்களை எல்லாம் இடம் மாறச்செய்தது.
இந்த சரயு நதிக்கரையில் தான்,தசரதன் தனக்கு மகப்பேறு வேண்டி புத்திர காமேட்டி யாகம் செய்துள்ளான்.
“பூதலம் முழுதும் தாங்கும்
புதல்வரை அளிக்கும் வேள்வி
தீது அற முயலின் ஐய!
சிந்தை நோய் தீரும்” – என்றான்.
இம்மண்ணுலகம் செழிக்க புதல்வரை அளிக்கும் இந்த புத்திர காமேட்டி யாகம் சரயு நதிக்கரையில் முன்வினைபயன் அகன்று சிந்தை நோயை வேரறுத்தது என்று கூறும் போது அவனது சொல்நயம் வாழ்வியலின் மேன்மைக்கு வழிவகுக்கிறது.
சரயு நதியின் வளம் கொழிக்கும் நீர்வளம் நமது நெஞ்சைஎல்லாம் தெள்ளு தமிழால் கம்பன் வழி அள்ளித் தெளிக்கிறது. இன்னும் சுவைப்போம் கம்பன் கவிநயத்தில் இயற்கை எழிலை !
இங்கே நோக்குங்கள் நம் கவியரசு கண்ணதாசனும் ஆற்றின் இன்றியமையா நன்மையை இப்படி கூறுகிறார்…
“மண்ணிலே தங்கம் உண்டு மணியும் வைரம் உண்டு
கண்ணிலே காணச் செய்யும் கைகள் உண்டு வேர்வை உண்டு
நெஞ்சிலே ஈரம் உண்டு பாசம் உண்டு பசுமை உண்டு
பஞ்சமும் நோயும் இன்றி பாராளும் வலிமை உண்டு
சேராத செல்வம் இன்று சேராதோ?
தேனாறு நாட்டில் எங்கும் பாயாதோ?
ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்
போராடும் வேலை இல்லை யாரோடும் பேதம் இல்லை
ஊரோடும் சேர்ந்துண்ணலாம் ஆஆஆ”