அன்பு உள, இனி, நாம் ஓர் ஐவர்கள் உளர் ஆனோம்;

இராமாயணக் காவியத்தில் கம்பர் இராமனை தெய்வநிலையில் இருந்து மானிடனாக இறங்கி வந்த கருணையுள்ளம் படைத்தவன் என நமக்கு தெளிவுறுத்துகிறார். வால்மீகி இராமயாணத்தில் குகனை பற்றி அவ்வளவாக கூறவில்லை. கங்கையைக் கடக்க உதவியவன், இராமன் மீது அளவுகடந்த பற்றினால் இராமனுக்கு உதவியவன் என்றே சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால் கம்பர் தனது காவியத்தில் குகனுக்கு ஒரு படலத்தை கொடுத்து அவனது சிறப்பியல்புகளை தனது கவிதை வரிகளில் திறனுடன் சொல்கிறார்.

இராமாயணத்தில் பெருமாள் என்கிற பட்டம் இராமனுக்குக் கூட கிடையாது. இளைய பெருமாள் என்று இலக்குவனுக்கும் குகப் பெருமாள் என்று குகனுக்கும் பெயருண்டு. இராமனின் அகமெனும் குகைக்குள்ளே வாழ்ந்தவன் குகன்.

இராமனைப் பார்க்காமலே அவனது திருமண நிகழ்வுகளை அன்போடு தெரிந்துகொண்டு அவனின் தொண்டனாக வாழ்ந்து வந்தவன் குகன். கங்கைக் கரையின் அருகிலே சிருங்கி பேரம் எனும் நகரிலே ஆயிரம் ஓடங்களுக்கு உரிமையாளனாக வாழ்ந்தவன் குகன். கங்கையின் ஆழம் போல் சிறந்த பண்புகொண்டவன் குகன் எனக் கூறுகிறார் கம்பர் .

இராமன் வருகிறான் எனும் செய்தி அறிந்து அவனுக்கு தேனும் மீனும் பய பக்தியுடன் எடுத்துச் செல்கிறான். இராமனின் எழிலுருவைக் கண்டதும் குகன் சரணாகதி அடைந்து காலில் விழுந்து வணங்குகிறான்.

நிலை உயரும் போது பணிவு கொண்டால்
உயிர்கள் உன்னை வணங்கும் …

என்ற கண்ணதாசன் சொன்னது போல் குகன் அந்த நிலப்பரப்பில் உயர்ந்த நிலையில் உள்ளவன் இருப்பினும் தாழ்ந்து இராமனை வணங்குகிறான்.

” கூவாமுன்னம், இளையோன் குறுகி, ‘நீ
ஆவான் யார்?’ என, அன்பின் இறைஞ்சினான்;
‘தேவா! நின் கழல் சேவிக்க வந்தனென்;
நாவாய் வேட்டுவன், நாய் அடியேன்’ என்றான்.
(கங்கைப் படலம் )

ஓடம் ஓட்டுகின்ற வேட்டுவன் நான் தங்களுக்கு நாய் போன்ற அடியவன் என தன்னை இராமனுக்கு அர்ப்பணிக்கிறான் குகன்…

கம்பர் இப்படிக் குகனின் அபார பக்தியை குகன் வழி தன்னடக்கத்துடன் வெளிப்படுத்தி …..அடுத்து அவனின் பணிவிடையால் இராமனின் உள்ளத்தில் உயர்ந்த நிலையை அடைவதாக அற்புதமாய் சொல்கிறார்…

இராமன் காட்டுக்கு செல்ல இந்த கங்கையைக் கடக்கவேண்டும். மேலும் அங்கே சித்திரக்கூடத்துக்கு செல்லவேண்டும் எனும் திட்டத்தை அறிந்த குகன், இராமன், சீதை மற்றும் இலக்குவனையும் படகில் ஏற்றிக் கொண்டு கங்கையின் மறு கரையை அடைகிறான்…அப்போது இராமன் குகனின் தொண்டுள்ளத்தை பாராட்டுகிறார். குகனைக் கட்டி அணைத்து…

“ குகனே நீ எனது உயிரானவன், எனது தம்பி இலக்குவன் உனக்குத் தம்பி, எனது துணைவி சீதை உனக்கு உறவானவள். உன்னைக் கண்டு தோழமை கொள்ளும் முன் நாங்கள் நால்வர். ஆனால் இப்போது உன்னோடு சேர்த்து ஐவராகி விட்டோம் என சகோதரத்துவம் கொள்கிறார் இராமர்.

‘துன்பு உளதுஎனின் அன்றோ
சுகம் உளது? அது அன்றிப்
பின்பு உளது; “இடை, மன்னும்
பிரிவு உளது” என, உன்னேல்;
முன்பு உளெம், ஒரு நால்வேம்;
முடிவு உளது என உன்னா
அன்பு உள, இனி, நாம் ஓர்
ஐவர்கள் உளர் ஆனோம்;
( குகப் படலம் )

குகனின் பாத்திரப் படைப்பில் கம்பர் அன்பின் ஆழத்தையும் அதை வெளிப்படுத்தும் தன்மையையும் தனது கவித்திறனால் கொடுத்து இராமன் வழி தெய்வமும் மானுடமாய் இறங்கி வந்து வேட்டுவக் குகனைத் தனது சகோதரனாய் ஏற்றதை …

“ அன்பு உள இனி நாம் ஓர் ஐவர்கள் உளர் ஆனோம் “ எனச் சிறப்புற தனது கவிதைவரிகளால் கூறுகிறார்.

பிறவிப் பெருங்கடலை நீந்தினால்தான் இறைவனடி சேர முடியும். அந்த இறைவனையே தனது படகில் ஏற்றி கங்கை நதியைக் கடக்க உதவிய குகன் எத்தகைய பாக்கியம் பெற்றவன் என்று நினைத்தால் உள்ளமெல்லாம் உவகை கொள்கிறது.

இன்னும் ரசிப்போம் கம்பனின் கவித் திறனும், காப்பியப் பாத்திரங்களின் சிறப்பையும்.

தொடர் 7
தொடர் 9


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

இலக்கணம்-இலக்கியம்

தமிழ்நெஞ்சம் புகழாரம்

தமிழ்நெஞ்சம் புகழாரம் புத்தகம் பற்றி ஒரு பார்வை...

ஒரு புகழாரத்தைத் தனிப் புத்தமாக பதிக்க வேண்டுமென்றால் அதன் தரம் எப்படி இருக்கும்? இப்படித்தான் இருக்கும் என்கிறது இந்தத் தொகுப்பு. தித்திப்பே திரண்டு வந்து சொற்களுக்குள் புகுந்து கொண்ட திகட்டாத இனிப்பு.நாவூறும் பாக்களின் நற்கோர்வை காரணம் அதன் சொற்கோவை.

 » Read more about: தமிழ்நெஞ்சம் புகழாரம்  »

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 20

தொடர் 20

வெண்பா ஆசிரியப்பா இரண்டு பற்றியும் தெரிந்து கொண்ட நாம் அடுத்ததாக கலிப்பாவைக் காண்போம்.

இது 3 ஆவது பாவகை

மாமுன் நிரை
விளமுன் நேர்
காய்முன் நேர் இவை வெண்பா

நேர்முன்நேர்
நிரைமுன் நிரை
நேர் முன் நிரை
நிரை முன் நேர் இவை ஆசிரியப்பா

ஆனால் கலிப்பாவில்

காய்முன் நிரை வரும்
அதாவது கலித்தளை மிகுந்து வரும்
மற்ற தளைகள் குறைந்து வரலாம்
புளிமாங்காய் கருவிளங்காய் அதிகம் வரும்
கனிச்சீர்கள் வாரா
அளவடிகளால் ஆனது

கலிப்பா மற்ற பாக்கள் போல ஒரே உறுப்புகள் கொண்டமையாமல் பல உறுப்புகள் உடையது.

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 20  »

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 19

தொடர் 19

வெண்பாதான் கடினம் என்று புலவர்கள் சொல்வதுண்டு. வெண்பாவில் சிறப்பாக எழுதுபவர்களை வெண்பாப் புலி என்றும் அழைக்கப்படுவார்கள். நிறைய தமிழ் நூல்கள் வெண்பாவில் புனையப் பட்டுள்ளன. நீங்களும் இப்போது வெண்பா எழுத முற்பட்டிருப்பீர்கள் எனக் கருதுகிறேன்.

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 19  »