தொடர் எண் 6.
தலைப்பு : வீரம்
வாழ்த்திடவே சாதனைகள் வாழ்நாளில் சாதிப்பாய்
ஏழ்மையினை வெற்றிகொள் ஏறுபோல்நீ வீரம்கொள்
ஆழ்கடலில் விட்டாலும் அஞ்சாமல் வந்துவிடு
வீழ்த்துகின்ற எண்ணத்தை வீறுகொண்டு மாற்றிவிடு.
மாற்றிக்கொள் காலத்தின் மாற்றங்கள் நோக்கிடுவாய்
ஏற்றுக்கொள் வீரத்தை ஏணியாக்கி வாழ்க்கையினில்
வேற்றுமைகள் நீக்கிடவும் வெற்றிகளைப் பற்றிடவும்
போற்றிடவும் உற்றாரும் பொங்கிநீயும் நிற்பாயே.
நிற்பாயே குன்றாக நேர்மையாக வாழ்ந்திடவே
வெற்பாக நீயிருந்தால் வித்தாக மாறிடலாம்
கற்றவழி சென்றிடலாம் கண்ணியமும் காத்திடலாம்
சுற்றத்தார் மேகமாக சூழ்ந்திடவும் நல்வாழ்வே .
நல்வாழ்வாய் நம்கடமை நாட்டிற்குப் போரிடலே
எல்லோரும் வாழ்த்திடுவர் ஏற்றமிகு நற்பணியால்
இல்லத்தைக் காத்திடுவார் இந்நாட்டின் மக்களென்றே
வல்லோனாய் எல்லைகளை வாடாமல் காத்திடவே.
வேற்றுமைகள் வேண்டாமே வேறுபாடு தூக்கியெறி
ஏற்கின்ற நற்பணிகள் இன்னல்கள் தந்தாலும்
கொற்றவனாய் நீதியினைக் கோலோச்சு நித்தமுமே
தூற்றுவோரும் தோள்கொடுப்பார் ஊக்கமுடன் வாழ்ந்திடவே.