தொடர் எண் 5.

தலைப்பு : நட்பு.

கொள்வாயே நண்பர்கள் குன்றாத பண்புடனே
உள்ளங்கள் ஒன்றாக ஊர்போற்றும் நட்பினையே
பள்ளங்கள் மேட்டினிலும் பற்றுடனே எந்நாளும்
தள்ளாத மூப்பினிலும் தாங்குகின்ற ஊன்றுகோலாய்.

ஊன்றுகோலாய் வாழ்க்கையினில் ஒன்றுபட்டு நிற்பீரே
சான்றோராய் நின்றொளிர்க சாதனைகள் செய்திடவே
தோன்றுகின்ற துன்பங்கள் தோல்விகளைத் தந்திடினும்
தேன்போன்றத் தன்மையுடன் தென்றலாக மென்மைபெற்றே.

மென்மையுடன் பேசிட்டால் மேன்மைகளும் பெற்றிடலாம்
நன்மைகளும் கிட்டிடவே நட்பினிலே மேம்படுவாய்
பொன்னாக எண்ணிடுவாய் போற்றுகின்ற பெரியோர்சொல்
ஒன்றுபடு சாதிப்பாய் உற்றதோழன் கரம்கோர்த்தே.

தேனாகப் பேசிடுவார் தீப்பிழம்பாய் நெஞ்சினிலே
வானாகப் போற்றிடுவார் வஞ்சகத்தில் விஞ்சிடுவார்
கோனாக நீயென்பார் குற்றங்கள் நோக்கிடுவார்
தானாக வந்ததையும் தன்னால்தான் வெற்றியென்பார்.

வெற்றியுண்டு நண்பனாலே வேராகத் தாங்குதலால்
பெற்றிடுவாய் ஓங்குபுகழ் பெற்றவர்கள் ஆசியுடன்
சுற்றம்போல் நண்பர்கள் சோர்வினையும் நீக்கிடவே
நற்புகழும் பெற்றிடலாம் நாமணக்க வாழ்த்திடவே.

 முன்னே செல்ல …. தொடரும் 


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

தம்பி… 9

வாழ்வாயே மகிழ்வாக வாழ்த்திடவே பெரியோர்கள் தாழ்வென்ற நிலையில்லை தளராமல் உழைத்திட்டால் ஏழ்மையென்னும் நிலையில்லை ஏற்றத்தைப் பெறுவாயே வீழ்வதெல்லாம் எழுவதற்கே வீறுகொண்டு எழுவாயே.

மரபுக் கவிதை

தம்பி… 8

ஏரோட்டம் இல்லையென்றால் ஏற்றமில்லை செல்வத்தில் தேரோட்டம் ஓடாது தெம்மாங்கும் கேட்காது காரோட்ட வாய்ப்பில்லை கஞ்சிக்கும் ஏமாற்றம் நீரோட்டம் காத்திட்டால் நிச்சயமாய் நன்மையுண்டே.

மரபுக் கவிதை

கீதாஞ்சலி

அரண்மனையும் தோரணமும் ஆடும் வாயில் அணியணியாய் மணிவிளக்கம்‌ ஒளிரும் கோவில் நிரல்நிரலாய் உன்னடியார் வந்து செல்லும் நெரிசலிடைப் போற்றிசெயும் ஒலி முழக்கம் கரைகாணாப் புகழ் வெளிச்சம் உனதேயாகக் கனிவுடனே என்முகத்தைக் காண்பா யோநீ தெருவினிலோர் மூலையிலே இசைக்கும் என்றன் சிறுகுரலை என்னரசே கேட்பா யோநீ