தொடர் எண் 4.
தலைப்பு : ஏமாறாதே.
மாறாத எண்ணத்தில் மாற்றங்கள் வந்தாலும்
கூறாதே பொய்களையும் கொள்வாயே வாய்மையினை
ஆறாதே சுட்டவடு ஆற்றுவாய் நற்பணிகள்
மீறாதே மூத்தோர்சொல் மேன்மையுற ஏற்பாயே.
ஏற்பாயே நற்பணிகள் எல்லோரும் ஏற்றமுற
ஆற்றுவாயே இன்முகமாய் அல்லல்கள் நீங்கிடவே
ஊற்றாக செல்வங்கள் ஊருணியாய் மக்களுக்கு
சீற்றமுடன் வாழாமல் சிந்தனைகள் கூடிடுமே.
கூடிவாழ நற்பயன்கள் கோடியுண்டு மாற்றமில்லை
நாடிவரும் ஏழைகட்கு நல்லுணவைத் தந்துதவு
தேடிவரும் திக்கற்றோர் தீர்ப்பாயே துன்பங்கள்
ஓடிவரும் ஆறாக ஊராரும் வாழ்த்திடவே
வாழ்கின்ற காலத்தில் வாடாமல் நின்றிடவும்
தாழ்வென்று கூறாமல் தன்னிலையை மாற்றிவிடு
வீழ்த்திவிட எண்ணிடுவார் வேங்கையென நிற்பாயே
காழ்ப்புணர்ச்சிக் கொண்டாலும் கண்ணியத்தை நாட்டுவாயே.
ஏமாற்ற எண்ணாதே ஏமாற்றம் கொள்ளாதே
ஆமாமென் றேசொல்வார் அத்தனையும் பொய்யாகும்
கோமாளி ஆக்கிடுவார் குள்ளநரி கூட்டத்தார்
தாமாகச் செய்திடுக தன்மானம் கொள்வாயே.