தம்பி…
தொடர் எண் 1.
திரும்பித்தான் பார்த்திடுவாய் தீர்வுகளைக் கண்டிடுவாய்
இரும்பாக நெஞ்சத்தில் ஏற்றித்தான் வைத்திடுவாய்
கரும்பாகப் பேசிடுவாய் காந்தமாக ஈர்த்திடுவாய்
துரும்பாக எண்ணாமல் தூணாகத் தாங்குவாயே.
தாங்கிடவே துன்பங்கள் தத்துவங்கள் கற்பாயே
ஏங்கிடவே வைத்திடாமல் என்றென்றும் காத்திடுவாய்
நீங்கட்டும் கல்லாமை நீக்கிடுவோம் இல்லாமை
ஓங்கட்டும் பண்புடைமை ஓயாமல் காப்பாயே.
ஏனென்று கேட்பாயே எப்பொருளும் ஆய்ந்திடுவாய்
தானென்ற கொள்கையில் தன்மானம் காத்திடுவாய்
நானென்ற நம்பிக்கை நன்றாக ஏற்பாயே
தேனென்று சொல்லிடவே தீந்தமிழில் பேசுவாயே.
பேசிடுவாய் அன்பாக பெற்றோரின் கீழ்ப்படிவாய்
ஆசிகளும் பெற்றிடுவாய் ஆன்றோர்கள் வாழ்த்திடவே
நேசிப்பாய் சுற்றத்தார் நெஞ்சினிலே ஏற்றமுற
ஏசிடுவார் வீட்டினையும் ஏறெடுத்துப் பார்க்காதே.
பார்வையினில் நேர்கொண்டு பண்புடனே ஏறுநடை
கூர்விழியால் குத்திடுவாய் குற்றங்கள் செய்வோரை
ஏர்கொண்டு சேற்றினிலே ஏற்றமுற பாடுபடும்
சீர்கொண்டு போற்றிடுவாய் செம்மாந்த சொற்கொண்டே.