தொடர் எண் 2.
தலைப்பு : கற்க.
சொல்திறனும் சொக்கவைக்கும் சொல்லாட்சிப் பெற்றிடுவாய்
இல்லார்க்கு எந்நாளும் இல்லையென்று சொல்லாதே.
அல்லல்கள் சூழ்ந்திட்டால் ஆற்றலோடு வாழ்ந்திடுவாய்
நல்லோர்கள் போற்றிடவே நல்வழியில் செல்வாயே.
ஏற்றத்தைப் பெற்றிடத்தான் ஏணியாக ஆசிரியர்
கற்றிடவே பள்ளிக்குக் காலத்தில் சென்றிடுவாய்
உற்றதுணை நண்பர்கள் ஒன்றாகக் கூடுங்கள்
பற்றுதலும் கொள்வாயே பாடங்கள் கற்பதிலே.
கற்பதிலே நன்றாக காத்திடுவாய் நல்லொழுக்கம்
ஏற்றிடுவாய் கற்பனவும் எந்நாளும் நின்றிடுவாய்
பற்றினையே தாய்மொழியில் பாராட்டும் பெற்றிடுவாய்
வெற்றிகளும் கொள்வாயே வேங்கையென நிற்பாயே.
நில்லென்றால் பெற்றோர்கள் நின்றிடுவாய்க் கீழ்ப்படிந்து
சொல்லென்றால் உன்சொல்லே சொக்கிடவே வைக்கட்டும்.
நெல்மணிகள் கொத்தாக நிற்பதுபோல் நின்றிடுவாய்
வெல்லட்டும் உன்வாக்கு செல்வாக்கும் குன்றெனவே.
குன்றாக நின்றிடவே கோலேச்சி வாழ்வாயே
நின்றாடும் சொக்கனவன் நின்வேண்டல் கேட்டருள்வான்
சென்றிடுவாய் திக்கெட்டும் சேர்த்திடுவாய் ஞானத்தை
பொன்பொருளும் சேர்ப்பாயே பூக்கட்டும் உன்திறனே.