3
‘ஏ…ங்க, தாத்தா..! சாமியை பார்க்கவே முடியாதா..?’ என்று, வெகுளியாய் சக்தி கேட்டாள்.
‘இப்ப, கும்பாபிஷேகம் நடக்கிறதால… சாமியை பார்க்க முடியாது.டா..! தங்கம்… ரெண்டு நாள் கழிச்சு வந்து பார்க்கலாம். கூட்டமும் இருக்காது..!’
‘ம்.ம்கூம்… சரிங்க. தாத்தா..!’
தாத்தாவும், பேத்தியும், களைத்துப் போய் வீடு வந்து சேர்ந்தனர்.
‘இவ்வளவு கூட்டத்துல… பேத்தி சொல்லக் கேட்டு, போகனுமா..?
சாயங்காலம் போயிருக்கலாம்.ல’ என்றபடியே… ஆளுக்கு ஒரு சொம்பு தண்ணீர் கொடுத்தார் பாட்டி.
சிறிது நேரத்தில்…
சோறு, சாம்பார், பொரியல், வடை, பாயாசத்தோடு, வாழை இலையில் மதிய உணவு பரிமாறப்பட்டது.
தாத்தாவும், சக்தியும் மனம் நிறைவாக, வயிறு நிறைய சாப்பிட்டனர்.
தாழ்வாரத்தில் கிடந்த கயிற்றுக் கட்டிலில் தலையாட்டி பொம்மையோடு,
தலையை ஆட்டிவிட்டு, ஆட்டிவிட்டு விளையாடிக் கொண்டே இருக்கும் பொழுது… சக்திக்கு, கண்கள் சொருகியது.
புழுதிப் படலம் பூமிக்கும், ஆகாயத்திற்கும் புயலெனத் தெரிந்து, இருள் சூழ்ந்து, ஆயிரக்கணக்கில் குதிரைகளின் குளம்படிச் சத்தம், நிலத்தில் பட்டு, அதிர்ந்தது.
பச்சை வயல்களில் பசியாறிய கொக்கும், குருகும் கூச்சலிட்டு பறந்தோடின. நாற்றங்காலில் இருந்த நத்தை, நண்டு, தவளை, பாம்பும் வளையில் பதுங்கியது.
ஆறடி நீண்டு வளைந்த இரு கொம்புகள் உடைய யானையில் இருந்து, இமயமலை போன்ற வலிமை மிகு தோள்களோடு, தங்கம், வைரம், வைடூரியம் புதைத்த உடையில் தகதகவென தஞ்சை இளவரசன் இராஜராஜன் தாவிக் குதித்தான்.
கண்ணு கூசுது…! கண்ணு கூசுது..! என்று, சக்தி புலம்பினாள்.
பேசிக்கொண்டு இருந்த, தாத்தாவும், பாட்டியும் பதறியடித்துக் கொண்டு, சக்தி..! சக்தி…!! என்னம்மா..? தங்கம் ஆச்சு..! ஏ.ன்டா..? தூக்கத்தில் உளறுற என்று கேட்டனர்.
‘இந்தா..! இந்த தண்ணியை குடிச்சிட்டு தூங்கு.’ என்றவர்களிடம்…
‘அச்சோ..!
போங்க, பாட்டி… நல்ல கனவு வந்துச்சு, கலைச்சு விட்டுட்.டீங்க…’
‘என்ன..? கனவு.டா..! செல்லம்.’
‘அதெல்லாம், சொன்னால் பழிக்காது..! போங்க…’
ம்ம்.கூ..ம்… அது, சரி..!
சக்தி கண்களை மூடி, திரும்பத் திரும்ப நினைத்துப் பார்க்கிறாள்.
மீண்டும் கனவு வரவில்லை…