1
‘சக்தி..! சக்தி..!! அம்மா… சக்தி…!
எங்க போனா..? இவ… சொல்லாம கொல்லாம…’
“சக்தி”
பெயருக்கு ஏற்ப வலிமையோடும், துறு… துறு… வென இருப்பாள். பார்த்த மாத்திரத்தில், நமது குழந்தையாகிடும் அன்பும், சிரிப்பும் மிகுந்தவள். அம்மன் சிலை போல அழகு முகம் கொண்டவள். கோபக்கார சுட்டிக்குழந்தை இவள்.
பூர்வீகம் திருநெல்வேலியில் இருந்தாலும், பள்ளி விடுமுறைக்காக தஞ்சையில் பாட்டியிடம் தஞ்சமடைந்துள்ளாள்.
‘என்னாங்க பாட்டி..! கூப்புட்டீங்களா..?
பக்கத்து தெருவுல… கொட்டு அடுச்சு, கொழவை போட்டு போனாங்க… அதான்..! வேடிக்கை பார்க்க போனேன் பாட்டி..!’ என்று, மழலை குரலில் கெஞ்ச…
‘ம், சரி..! கண்ணு… எங்கையும் போனா..? அம்மத்தா கிட்ட, ஒரு வார்த்தை சொல்லுடா..! செல்லம்…’
‘ம்…ம்.ம். சரிங்க பாட்டி..!’
‘தண்ணீ காய்ஞ்சிருச்சு.ல…
வா..டா..! அம்மா குளிக்க.’
அரக்கு, சீயக்காய், மஞ்சள் பூசி குளித்து, மங்களகரமாய் பட்டுப் பாவாடை, சட்டையில் இரட்டை சடை பின்னி, தாத்தாவின் விரல்கள் பிடித்து, பெருவுடையார் கோவிலை நோக்கி முன்னேற…
வானுயர கோபுரம் நிமிர்ந்து நிற்கிறது.
சவுக்கு மரத்தின் சாரங்கள் குறுக்கும், நெடுக்குமாக பின்னிப் பிணைந்து இருக்கிறது. ஒலியும், ஒளியும் இதமாய் பக்தி பரவசத்தில் தவழ்ந்திட… கதிரவன் கண்விழித்து கோபுரக் கலசங்களை முத்தமிட்டதும், கோபுரத்தை கருடன் வட்டமிட…
அட.டா..?
தஞ்சை நகரம் முழுவதும் “ஓம் நமச்சிவாயா..! ஓம் நமச்சிவாயா..!! ஓம் நமச்சிவாயா..!!!” என்று… ஓம்கார ஓசையில் ஒலியெழுப்ப, விண்ணுலக தேவர்கள் எல்லோரும் தீர்த்தங்களை சாரல் மழையாக தூவிய காட்சியில்…
சிலு…சிலுவென… உரோமங்கள் குத்தி நிற்க, தன்னிலை மறந்து… இரு கைகள் குவித்து வானுயர “ஓம் நமச்சிவாயா” “ஓம் நமச்சிவாயா” என்று, ஈசன் மடியில் மயங்கிச் சாய்ந்தாள் சக்தி.
சக்தி..! சக்தி..! என்ன ஆச்சு..! தாத்தாவின் நா தளதளக்க… அக்கம், பக்கம் இருப்பவர்கள், சக்தி முகத்தில் தண்ணீர் தெளித்து, திருநீறு பூசியதும்… கண் விழித்துப் பார்த்தாள்.
நெஞ்சில் அணைத்தபடி வீட்டுக்கு, போகலாமாடா..? தங்கம். என்று, தாத்தா கூற…
‘கோயிலுக்கு வந்து, பாதியிலேயே திரும்பி போகலாமா..? தாத்தா..!’ என்று சக்தி கேட்க… தாத்தா, மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல்…
1 Comment
Shanthi L · மார்ச் 28, 2021 at 12 h 56 min
நான் உங்க கதையை நான் புதிதாக தொடங்க இருக்கும் youtube சேனலில் போடலாமா