தொடர் 57
வண்ணங்களைத் தேடியலையும்
வண்ணத்துப்பூச்சிக்குத் தெரியாது
தன் வண்ணம்.
- கவிஞர். கழனியூரன்
இந்த கவிதையை கவனியுங்கள். புழுவாய் பிறந்து, பூச்சியாய் மாறி, பறந்து திரியும் வண்ணத்துப் பூச்சி தன் மேனியில் பல வண்ணங்களைக் கொண்டிருந்தாலும், பல வண்ண மலர்களைத் தேடி அலையும். அதற்கு தன் மீதுள்ள வண்ணம் பற்றி அறிந்திட இயலுமா..?! கவிஞரின் பார்வை வண்ணத்துப் பூச்சியை மட்டுமா சார்ந்திருக்கிறது..
பல மனிதர்களின் குணாதிசயங்கள், இயல்புகள் இப்படித்தானே இருக்கின்றன. தன்னிடம் உள்ளதை விடுத்து வெளியில் தேடித் திரிவோர் எத்தனை பேர்..?
பூச்சியின் தேடல் வேறு..?! ஆனால் மனிதனின் தேடல்..?
கவிக்கோ அப்துல்ரகுமான் அவர்களின் இந்தக் கவிதையை பாருங்கள்…
உன்னை மறக்க
மதுவைக் குடித்தேன்
போதையாக நீ வந்தாய்..!
காதலின் உணர்வில் காதலர்கள் ஒருவருக்கு ஒருவர் போதையே.. மனதை மயக்குவதிலும்.. நினைவை சுவாரஸ்யமாக்குவதிலும். ஆனால்
காதல் பிரிவின் துயரில் மதுவை அருந்தினாலும் அங்கும் போதையாக அவளே வந்து நிற்கிறாள், நினைவை ஆக்கிரமித்தபடி..
ஹைக்கூவில் வார்த்தைப் பிரயோகங்கள் எவ்வளவு முக்கியத்துவம் பெறுகின்றன என்பதற்கே இவ்விரண்டு கவிதைகள் இங்கு காட்டப் பட்டிருக்கின்றன. இரண்டின் கட்டமைப்பும் சற்றேறக் குறைய ஒன்றே.
வண்ணமயமான பட்டாம்பூச்சி வண்ண மலர்களைத் தேடி அலைவதும்..
போதையைத் தரும் மதுவை அருந்தி போதை தரும் பெண்ணை மறக்க நினைப்பதும் ஒன்று போலவே காட்சி தருபவை தானே.
ஹைக்கூ இயல்புத்தன்மைக்கு இணக்கமாக எழுதப்படுவது..அதனை உணர்ந்தும் புரிந்தும் எழுதினால் தான் சிறக்கும்.
ஹைக்கூ தன்னைத் தானே வரைந்து கொள்ளும் ஓர் அழகிய ஓவியமாகும். அதன் நெளிவு, சுழிவுகளை அதுவே வரைந்து கொள்ளும். வலிய அதன் மீது எந்தவொரு வண்ணத்தையும் தெளிக்கத் தேவையில்லை..
எளிய அழகும், சிக்கனச் சொற்கட்டும்..
பரந்துபட்ட பார்வையும், ஒவ்வொரு தேடலிலும் புதுப்புது அர்த்தங்களை தன்னுள் இருந்து வெளிப்படுத்தும் ஆற்றலும் கொண்டது ஹைக்கூ..
இதை கவனியுங்கள்..
பறவையை
வரைந்து அழிக்கிறது குழந்தை
அழிகிறது வானம்.
**
தூண்டிலில் சிக்கிய
மீனின் கண்களில்
விடைபெறும் நதி.
- தக்ஷனின்
இவ்விரண்டு ஹைக்கூவும் சொல்லி நகரும் விசயங்கள் பல..
குழந்தை வரைந்த ஓவியத்தில் பறவையை அழித்தாலே போதும்..வானமே அழிந்து விடுகிறது..
தூண்டிலில் பிடிபட்ட மீனின் கண்களிலோ..அதை பிரிந்த நதியின் பிம்பம்..கனவாகவோ…ஏக்கமாகவோ..!
இதை கவனியுங்கள்…
மழை வலுத்த பாதியில்
ஆறுதலாய் இருந்தது
குடையில் கேட்ட பேச்சு..!
கவிஞர் மித்ரா அம்மையாரின் இந்தக் கவிதை..மழை வலுத்த வேளையில் சற்றே ஒதுங்கி நிற்க நேரிடுகையில், பக்கத்தில் குடையுடன் ஒதுங்கி நின்றிருக்கும் இருவரின் பேச்சு இதமாக, ஆறுதலாக இருந்தது என்கிறார். குடைக்குள் இருந்தவர்கள் யார்..? ஒதுங்கி நின்று அவர்களின் பேச்சை செவிமடுத்தது யார்..? பேச்சின் சாராம்சம் என்ன..? அது எந்த வகையில் ஆறுதலைத் தந்தது..?
உங்களுக்குள் இத்தனைக் கேள்விகளை எழுப்பியது எது..? அந்த ஹைக்கூ. ஆம். .பல கேள்விகளை விதைத்து, விடைகளை நீங்கள் தேடிக் கொள்வதற்கு வகை செய்வது ஹைக்கூவாகும்.
1 Comment
Affilionaire.org · ஏப்ரல் 16, 2025 at 15 h 27 min
I am extremely inspired along with your writing
talents and also with the structure on your blog. Is this a paid theme or did you modify it yourself?
Either way keep up the excellent high quality writing, it’s rare to look a great weblog like this one today.
Youtube Algorithm!