தொடர் 55
ஹைக்கூ கவிதைகள் நம்முடைய வாசிப்புத் திறனை சுவாரஸ்யமாக்குவது மட்டுமின்றி, நமது எண்ணங்களையும், சிந்தனைகளையும் மேம்படுத்த உதவுகிறது. ஒவ்வொரு அடிகளிலும் நமது சிந்தனைகளை விரிவடையச் செய்வது இதன் தனிச் சிறப்பு.
நமது இந்திய நாட்டில் போக்குவரத்தில் கடைப்பிடிக்கப்படும்..
நில்
கவனி
செல்.
எனும் வாசகம் கூட மிகச்சிறந்த ஹைக்கூ என்று சொன்னால்.. தவறில்லை என்பேன்.
நில்… ஏன்.. எதற்கு.. என்ற கேள்விகள் இங்கு தொக்கி நிற்கிறது..முதலடியில்.
கவனி.. எதை கவனிக்க.. ஏன் கவனிக்க.. எப்படி கவனிக்க.. எதற்காக கவனிக்க.. என ஆராயச் சொல்கிறது இரண்டாம் அடி.
இவ்விரண்டு அடிகளும் இணைந்து தீர்வொன்றை சொல்லியதா எனில்.. இல்லை எனலாம்.
செல்.. என்ற மூன்றாம் அடியை சொன்னவுடன் தான்.. முதலிரண்டு அடிக்கான பொருளே விளங்குகிறது.. அது மட்டுமல்ல.. இக் கவிதை போக்குவரத்து விசயத்தை மட்டுமல்லாது பிற விசயத்திற்கும் கூட பொருந்திப் போவதை காணலாம்..
எந்தவொருச் செயலையும் செய்யுமுன் நின்று நிதானித்து பின் செய்வது நல்லது தானே..
இதை கவனியுங்கள்..
அணையின் நீர்மட்டம்
மெல்லக் குறைய குறைய
தலைதூக்குகிறது நந்தி.
இது எனது ஹைக்கூ.. இதைச் சொன்னவுடன் நமக்குச் சட்டென நினைவுக்கு வருவது மேட்டூர் அணையும், அதன் நீருக்குள் மூழ்கியிருக்கும் நந்தியுந்தான்.
இது மேலோட்டமான ஒன்று என்றாலும், இதனை ..
மனிதனிடத்தில் நிறைந்துள்ள கெட்ட குணங்கள் மெல்ல மெல்ல குறைய அவனுள் ஆத்ம ஞானம் தலைதூக்கத் துவங்கும் என்ற பொருளிலும் கொள்ளலாம். இதையே வேறுமாதிரியாக..
மனிதனிடத்தில் நிறைந்திருக்கும் நல்ல எண்ணங்கள் குறையத் துவங்கினால்..அவனே மெல்ல மெல்ல விலங்காக மாறுவான் என்றும் பொருள் கொள்ளலாம்..
கவிதை ஒன்று தான். ஆனால் பொருள்கள் பல. ஹைக்கூவின் பலம் இதுவே. நாம் எவ்வாறு அதனை உள்வாங்கிக் கொள்கிறோமோ, அவ்வாறே ஹைக்கூ பரிணமிக்கும்.
அமெரிக்க கவிஞர் மற்றும் கட்டுரையாளர் ரிச்சர்ட் ரைட்டின் கவிதைகள்…
**
வழியைத் தொலைத்தேன்
இரவில் அந்நிய நகரத்தில்
குளிர்ந்த நட்சத்திர வானம்.
**
இலையுதிர்கால மழை
எனக்கு ஏதோ சொல்லும்
நான் தெரிந்துகொள்ள விரும்பாததை.
**
மின்மினியே இங்கென்ன வேலை
சிறுவர் சிறுமியர் காத்திருக்கின்றனர்
வீட்டின் பின்புறம்.
இந்த கவிதைகள் ஒவ்வொன்றும் ஒரு ரகம். வாசிக்க வாசிக்க நமக்கு பலவித எண்ணவோட்டங்களை அளிக்க வல்லவை.