தொடர் – 52
உலகின் பல நாட்டு இலக்கியங்களில் எழுதப்பட்டிருக்கும் கவிதைகளில் அபூர்வமாய் சில கவிதைகள் தமிழின் சங்க காலப் பாடல்களோடு பொருந்தி போவதும் உண்டு அவ்வாறான ஒரு நிகழ்வு ஹைக்கூ கவிதை இலக்கியத்திலும் நிகழ்ந்துள்ளது..அது போன்ற ஒன்றை இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்..
நமது தமிழ் இலக்கியத்தின் சங்ககால அகநானூற்றுப் பாடல் ஒன்று..
துறைமீன் வழங்கும் பெருநீர்ப் பொய்கை
அரிமலர் ஆம்பல்மேய்ந்த நெறி மருப்பு
ஈர்ந்தண் எருமைச் சுவல்படு முதுபோத்து
தூங்கு சேற்று அள்ளல் துஞ்சி, பொழுதுபட
பைந்நிண வராஅல் குறையப் பெயர்தந்து
குரூஉக்கொடிப் பகன்றை சூடி, மூதூர்ப்
போர்செறி மள்ளரின் புகுதரும் ஊரன்.
அகநானூற்றின் 316 வது பாடலாக ஒரம்போகியார் எனும் புலவரின் பாடல் இது..
குளத்தில் ஆம்பல் மலர்களை மேய்ந்த எருமை ராத்திரியெல்லாம் அந்த குளத்தில் அலைந்து திரிந்து புரண்டு திளைத்து காலையில் எழுந்து வருகையில் திறட்சியான விரால் மீன்களை மிதித்து துவம்சம் செய்து குளத்தில் கட்டி உருண்டு சண்டையிட்ட மல்லன் போல அதன் கொம்பில் பகன்றை கொடியை சூடிய படி வெளியே வருகிறதாம்..
இப்பாடல் தலைவியின் தோழியானவள் தலைவனுக்கு கூறும் அறிவுரைப் பாடலாக பாடப் பட்டுள்ள ஒரு பாடல்..
இதே சாயலில் ஹைக்கூவில் ஆப்பிரிக்க நாவலாசிரியரும் ஹைக்கூ கவிஞருமான ரிச்சர்ட் ரைட் என்பவர் எழுதிய ஹைக்கூ கவிதையை கவனியுங்கள்..
காட்டிலிருந்து வரும்
மாட்டின் கொம்பில்
முல்லைக் கொடி.
- ரிச்சர்ட் ரைட்.
இது போன்ற நிகழ்வுகள் எதேச்சையாக நிகழ்ந்தவை எனினும் சுவையானவை என்பதை மறுப்பதற்கில்லை.
நன்றி..எழுத்தாளர் சுஜாதாவின் ஹைக்கூ கட்டுரையில் இருந்து..