தொடர் 53
ஜப்பானிய ஹைக்கூ கவிஞர்களில் பிரபலமான #இஸ்ஸா #பூசன் மற்றும் #ஷிகி ஆகியோர் ஹைக்கூ உலகிற்கு நல்கிய சில கவிதைகளை இவ்வாரம் உங்களின் பார்வைக்குத் தருகிறேன்..
- கொபயா ஷி இஸ்ஸா (1763_1827 )
கிராமியக் கவிஞர் இவர்..இளம் வயதில் பல இன்னல்களுக்கும் துயரங்களுக்கும் ஆளானவர்..சிற்றுயிர் நேசர்…பூனை..ஈ..
போன்ற உயிரினங்கள் பால் மிகுந்த அன்பினைச் செலுத்தியவர்.
**
மலை ஏறு
ஓ..நத்தையே
மெதுவாக..மெதுவாக.
**
கொல்லாதே
கைகளையும் கால்களையும்
தேய்த்துக் கொள்கிறது _ ஈ..
**
நான் படுத்துக் கொண்டு
உருளப் போகிறேன்
நகர்ந்து செல் வெட்டுக்கிளி.
**
எல்லா நேரத்திலும்
புத்தரிடம் பிரார்த்தனை
நான் கொன்று கொண்டேயிருந்தேன்.
கொசுக்கள்.
சற்றே கவனியுங்கள். சின்ன உயிர்களை சிறப்பித்துப் பாடிய அவர் தான், அதே சின்ன உயிர் தனக்களித்த தொந்தரவிற்கு அதற்கு மரணத்தை பரிசாக வழங்கி விட்டு, இறைவனிடம் மன்னிப்பு கேட்கத் துவங்கி விட்டார்.
இது மக்களின் இயல்பு. இதையே வேறொரு கவிதையில் கையாள்வதை கவனியுங்கள்…
மக்கள் அறிவது எப்படி எனத் தெரியாது
ஆனால், அனைத்து சோளக்காட்டு
பொம்மைகளும் வளைந்தே இருக்கும்.
இஸ்ஸாவின் ஜப்பானிலும் கூட பறவைகளை விரட்ட சோளக்காட்டு பொம்மைகளை வயற்பரப்புகளில் நிறுத்துகிறார்கள் என்பதோடு, மனிதர்கள் வளைந்து கொடுத்து வாழ்ந்தால் எளிதில் எவ்வித துயரிலிருந்தும், பிரச்சனைகளில் இருந்தும் மீளலாம் என்பதை நாசுக்காக சொல்லி நகர்ந்து விடுகிறார்.
- யோஸோ பூசன் ( 1716 – 1784 )
இவர் வரைகலை ஓவியர். ஓவியத்தின் வாயிலாக ஹைக்கூவை பிரபலப் படுத்தியவரும் கூட.. தனது எழிலார்ந்த ஓவியத் தூரிகையால் பாஷோவின் கவிதைகளையும் மெருகூட்டியவர் எனலாம்.
இவரது சில கவிதைகள்..
**
வெள்ளைப் பூக்கள்
பெண் ஒருத்தி நிலவொளியில்
கடிதம் படித்தபடி.
**
செர்ரி மலர்கள் பூத்து உதிர்ந்தன
கிளைகளின் வாயிலாக
ஒரு கோயில்.
**
பனி விழுந்த முள்செடி
அற்புத அழகு
ஒவ்வொரு முள்ளிலும் துளி.
**
ஆயிரம் பெண்கள் கொண்ட கிராமம்
சந்தைக் கடை ஓசை.
காலை மூடுபனியில்.
பெண்கள் எல்லா நாட்டிலும் ஒன்று போலவே.. அவர்கள் இருக்குமிடம் சலசலப்பிற்கு பஞ்சமில்லை. இந்தக் கவிதையை கொஞ்சம் ஊன்றி கவனிக்கும் போது பூசன் நகைச்சுவை உணர்வு மிக்கவராகவும் தெரிகிறார்.
சற்றே கவனித்தால் தெரியும் பூசனின் ஓவியப் பார்வை, தூரிகை கொண்டு தீட்டிய ஓவியம் போல் அவரது கவிதைகளில் மிளிர்ந்த அழகு.
- மாஸ ஒகா ஷிகி ( 1867 -1 902 )
ஏற்கனவே சொன்னது போல், இவரே ஹைக்கூவில் கற்பனையை தவிர்க்கச் சொன்னவர். ஹைக்கூ கவிஞர்களில் புரட்சிவாதி.. புரட்சிக்குயில்..
பாஷோவின் கவிதைகள் வீரியமற்ற மந்தத்தன்மை கொண்டவை எனச் சாடியவர்.
இடிந்த வீட்டில்
யுத்தம் முடிந்த பின்னே
காய் மரம் பூத்துள்ளது.
**
இலையுதிர் கால கொசு
என்னைக் கடித்த பின்
மரணமடைய தீர்மானித்தது.
**
மலர் சாடியில் செருகித் தொங்கும் நீலமலர்கள்.
நோய்படுக்கையில்
வசந்தம் இரவாகிறது.
ஹைக்கூவை வேறொரு தளத்திற்கு நகர்த்திச் சென்ற பெருமைக்குரியவர்.
உள்ளதை உள்ளபடி சொல்லி உண்மைக்கு அருகில் நில்லுங்கள் என ஹைக்கூ கவிஞர்களுக்கு வழிகாட்டியவர். ஷிகி.