தொடர் – 42
ரென்கா எனப்படும் அந்தாதி ஹைக்கூ கவிதை முறை.
ஹைக்கூ எழுத்தாளனையும்..வாசகனையும் இணைக்கும் ஓர் அற்புதக் கவிதை வடிவம்..எழுத்தாளன் எழுதிய கோணத்தையும்..பொருளையும் தான் வாசகனும் அறிந்து உணர வேண்டுமென்பதில்லை..வாசகனுக்கு ஹைக்கூ பலவித உணர்வலைகளை உண்டு பண்ணி நகரும் ஆற்றல் கொண்டது.
ஹைக்கூ தோன்றிய ஜப்பான் நாட்டில் ஹைக்கூ இயற்கை சார்ந்தும்..ஜென் சார்ந்தும் எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறது..ஆனால் பலவித பருவ மாற்றங்களை கொண்டு விளங்கும் இந்தியா போன்ற பெரிய நாட்டில் இங்குள்ள பண்பாடு..கலாச்சாரம் சார்ந்தே ஹைக்கூ இயங்குகிறது..இதில் ஒன்றும் தவறும் இல்லை..ஜப்பானிய நடைமுறையை பின்பற்றியே இங்கும் கவிதை படைக்க வேண்டுமென்ற நிர்பந்தம் இருப்பின் ஹைக்கூ இங்கு இந்தளவு பிரபலமாகியிருக்க இயலாது.
ஹைக்கூ..சென்ரியு என இருவடிவங்களையும் உள்ளடக்கி தொடர் பாடலாகப் பாடப் படுவதே #ரென்கா எனப்படும் ஹைக்கூ தொடர் கவிதை.
ரென்கா எனப்படும் ஹைக்கூ அந்தாதி..
ஜென் புத்தமதத் துறவிகளால் தோற்றுவிக்கப் பட்ட ஒரு கவிதை வடிவமே ஹைக்கூ என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்..அவர்களது வாழ்வியல் சார்ந்து அவை படைக்கப் பட்டது..
மாலை வேளைகளில்..ஏதாவது பண்டிகை காலங்களில் ஜென் புத்தமதத் துறவிகள் அனைவரும் ஒன்று கூடும் காலங்களில் அவர்கள் ரென்கா எனப்படும் இந்த தொடர் சுற்றுக் கவிதை விளையாட்டில் ஈடுபடுவது வழக்கம்.
தலைமை குரு ஒரு ஹைக்கூவை ( அப்போது அதை ஹொக்கு என்றே அழைத்தனர் ) முன் மொழிய..அதை தொடர்ந்து அதன் ஈற்றடியை முதலடியாகக் கொண்டு அடுத்தவர் ஒரு கவிதையை சொல்வார்..இக்கவிதையானது..அவர்கள் அன்றைய நாளில் சந்தித்த பிரச்சனை..நிகழ்வு…கண்ட காட்சி..சந்தித்த மனிதருக்கு நேர்ந்த துன்பம்..இன்பம் என பல கோணங்களாய் விரியும்…இக்கவிதை தொடர் முடிவிற்குப் பின் அப்பாடசாலையில் தேவைப்படும் அல்லது நிறைவேற்றபட வேண்டிய பல நிகழ்வுகள் கூட அறியப்பட்டு நிறைவேற்றப்படும்..
இவ் வகையான ரென்காவில் ஹைக்கூ கவிஞர் பாஷோ முன்னோடிக் கவிஞர் ஆவார்..சாமுராய் வீரராய் இருந்தும் ஆசிரியர் பணி புரிந்த இவர் தொழில் நிமித்தம் பல ஊர்களுக்கு மாற்றலாகி பயணித்துக் கொண்டே இருப்பார்..
ரென்கா கவிதையில் ஹைக்கூவை ஒட்டி அடுத்து வந்த பல கவிதைகளே சென்ரியுவாக பின்னாளில் பிறப்பெடுத்தது..ரென்காவை பிரபல படுத்தியதும் பாஷோவே ஆவார்.
இன்றும் இந்த தொடர் பாடல் முறை பல இடங்களில் நடைபெற்றுக் கொண்டுதான் உள்ளது.
ஹைக்கூ கவிதையை தமிழில் நாம் எழுதிப் பழக ரென்காவும் ஒரு சிறந்த பயிற்சி முறையாகும்.