தொடர் – 39

ஹைபுன்

ஹைக்கூ கவிதை வடிவில் ஜப்பானிய கவிவடிவமான ..ஹைக்கூ மற்றும் சென்ரியு மிக முக்கியமானவை.

இந்த வகை கவிதைகளை மேற்கத்திய கவிஞர்களும், தமிழ் கவிஞர்களும் பல்வேறு கவிதை வடிவங்களுடன் இணைத்து புதுவகையான கவி வடிவையும் உருவாக்கி வெற்றி கண்டிருக்கிறார்கள்.

அவ்வாறு ஆங்கில லிமரிக் வடிவ குறுங்கவிதையுடன் இணைந்து உருவானது லிமரைக்கூ என முன்னரே கண்டோம். அது போல… ஹைபுன், லிமர்புன், லிமர் சென்ரியு, ஹைகா சீர்கூ, மோனைக்கூ என பலவகை பரிசோதனை முறைகளை கையாண்டு வெற்றி கண்டுள்ளார்கள்.

அவற்றில் ஒன்றான ஹைபுன் பற்றி இந்த அத்தியாயத்தில் காண்போம்.

நாம் எழுதும்..மற்றும் எழுதவிருக்கின்ற ஹைக்கூவிற்கு, சின்னதாய் அக்கவிதை குறித்த ஒரு உரைநடை விளக்கம் தந்த பின் ஹைக்கூவையும் இறுதியில் இணைத்து வழங்குவதே ஹைபுன். இதனை பாஷோ ஜப்பானில் முதன்முறையாக கையாண்டிருக்கிறார்.

குறுகலான உள்பாதைகள் எனும் தொகுப்பில்..தனது சீடனைப் பற்றி எழுதிய ஹைபுன் இது.

பாஷோவின் சீடன் கொஞ்சம் சோம்பலாய் திரிபவன். எந்த பணிகளையும் உடனுக்குடன் செய்வதில்லை அவன். கியோட்டாவில் வாழ்ந்த அந்த சீடனின் வீடு மலையடிவார ஒம்காவா நதிக்கரையில் உள்ளது. அங்கு சென்ற பாஷோவின் கவனத்தை கவர்ந்த காட்சியை ஹைபுன்னாக எழுதியது இது.

ஜூன் மாத மழை
சுவரில் ஒட்டியிருந்த
கவிதைச் சீட்டின் சுவடு..!

  • பாஷோ.

தனக்கு தோன்றியதை உடனே ஒரு தாளில் எழுதி சுவரில் ஒட்டி வைத்துவிடும் வழக்கமுள்ள அவரது சீடனின் கவிதை மழையில் நனைந்து காகிதமானது சுவரை விட்டு நழுவியிருப்பினும், அந்த காகிதச் சுவடானது சுவரில் தென்படுவதை அழகான காட்சியில் கவிதையாக்கினார் பாஷோ.  இவரைப் போல பூஸனும் ஹைபுன் எழுதியவரே.

தமிழில்… முதல் ஹைபுன் நூலினை அறிமுகப் படுத்தி.. தொகுத்து வழங்கியவர்கள் நால்வர்.

‘’அறுவடைநாளில் மழை’’ எனும் இத்தொகுப்பினை திரு.சோலைஇசைக்குயில், திரு.மு.முருகேஷ், திரு.பல்லவி குமார், திரு.ந.க.துறைவன் ஆகியோர் தமிழுக்கு அறிமுகம் செய்து வைத்தனர்.

இன்று பலரும் ஹைபுன் எழுதுகிறார்கள். பல நூல்களும் வெளியாகி உள்ளன.

உங்களின் பார்வைக்கு ஒரு ஹைபுன்.

விளக்கம் :

மழை பெய்த பிறகு அந்த அரசமரத்தில் பச்சை இலைகள் கதிரவனின் ஒளிபடுவதால் பச்சைப்பசேல் என காட்சி தருகின்றன; காற்றில் படபடக்கின்றன. கிளைகள் மறைத்த நிழற்பகுதிகளில் உள்ள இலைகள் எல்லாம் சற்றே அடர் பச்சை வண்ணத்தில். ஒரே மரத்தின் இலைகள் ஒளியிலும் நிழலிலும் இரு வேறு தோற்றங்கள்.

அரசமரத்து இலைகள்
கதிர் ஒளியும் நிழலும் மயக்கும்
பச்சை ஞானம்

  • சோமு. சக்தி

இங்கு அனைவரும் கவனிக்க வேண்டியது. ஹைக்கூவிற்கு தரும் விளக்கமானது நான்கந்து வரிகளில் சொல்ல வரும் கருத்தை தெளிவாய் சொல்லி நகர்தல் வேண்டும். அதிகப்படியான விளக்க உரை அவசியமற்றது என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

ஹைபுன் வகைமை நூலில் இதுவரை வெளியானவை 3 நூல்களே..

‘’அறுவடைநாளில் மழை’’, ‘’தலைக்கு மேல் வானம்’’, ‘’மாயவரம்’’ இதில் ‘’மாயவரம்’’ மட்டுமே கவிஞர்.அன்பாதவன் அவர்களின் தனி படைப்பு. ஏனைய இரண்டும் பல கவிஞர்களின் கூட்டுத் தொகுப்பாகும்.

கவிஞர்.கன்னிக்கோவில் ராஜா அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் மின்மினி இதழில் கவிஞர்.பல்லவி குமார் அவர்களால் தொடராக வெளிவந்த ‘’ஹைபுன் வெளிச்சம்’’ கூடிய விரைவில் நூலாக வெளிவர உள்ளது. கூடவே நிலா கிருஷ்ணமூரத்தி அவர்களது படைப்பாகவும் ஒரு ஹைபுன் நூல் வெளியாக உள்ளது.

இன்னும் வரும்…

முன் தொடர்

Related Posts

மின்னிதழ்

ஹைக்கூ திண்ணை 13

ஹைக்கூ திண்ணை செப்டம்பர் / ஒக்டோபர் மின்னிதழைத் தொகுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன். இந்தப் பெறுமதியான வாய்ப்பை வழங்கிய கவிச்சுடர் கல்யாணசுந்தரம் ஐயா அவர்களுக்கு முதற்கண் எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன். ஹைக்கூ என்றால் என்ன, அதை விளங்கிக் கொண்டு அதன் விதிமுறைகள் பற்றி அறிந்து அதன்படி எழுத எல்லோரும் முனைகின்றார்களா என்பது கேள்விக்குறியே. சிலர் இலக்கண விதிமுறைக்கேற்ப ஹைக்கூ கவிதைகளை எழுதுகின்றனர். ஆனாலும் சிலர் இலக்கண விதிகளைக் கொஞ்சம் மீறிப் புதுமையாக, வித்தியாசமாக எழுதுபவர்களாக இருக்கிறார்கள்...

ஆன்மீகம்

அருள் வாக்கியே! அப்துல்காதிரே!

அருள் வாக்கியே அப்துல் காதிரே!
திருப்புகழ் பாடிப் புகழ்சேர்த்த மெய்ஞ்ஞானியே!

வெண்பா வினால் விளக்கேற்றியே
விந்தைகள் தான்செய்த இறைநேசரே!

(அருள்)

எரியென்றே நீபாடித் திரியேற்றி னாய்
அரியணையில் அணையென்றே ஒளிபோக் கினாய்!

 » Read more about: அருள் வாக்கியே! அப்துல்காதிரே!  »

மின்னிதழ்

நிறைய சிந்தியுங்கள் ஹைக்கூ பிறக்கும்

ஹைக்கூ கவிதைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதில் குழப்பம் வருவதில் அர்த்தமில்லை அவசியமில்லை தேவையுமில்லை. வாழ்ந்த ஹைக்கூ முன்னோடிகள் கவிக்கோ அப்துல் ரகுமான் தி. லிலாவதி, கவிஞர் மித்ரா, நிர்மலா சுரேஷ் போன்றவர்களின் கவிதை களைப் பாடமாக படியுங்கள். நாம் வாழும் காலத்தில் இருக்கின்ற தமிழக மூத்தக் கவிஞர்கள் கவிஞர் அமுதபாரதி கவிஞர் ஈரோடு தமிழன்பன் கவிஞர் அறிவுமதி கவிச்சுடர் கா. ந. கல்யாண சுந்தரம் கவிஞர் அமரன் கவிஞர் வே. புகழேந்தி கவிஞர் அனுராஜ் கவிஞர் இளையபாரதி கந்தகம் பூக்கள் இவர்களின் கவிதைகளைப் படித்து நுணுக்கங்களை கற்றுக் கொள்ளுங்கள்.