தொடர் –38
ஹைக்கூ வாசிக்கும் முறை
கவிதை என்பது இலக்கியத்தின் உயரிய வடிவம்..நமது தமிழ் இலக்கிய மரபில் வெண்பா, விருத்தம், கலிப்பா, கும்மி என பல வகைகள் உண்டு.
அவை எதுகை, மோனை, சந்த நயங்களுடன் வாசிக்கவும் அழகாக அமையும்.
ஏனெனில் அவை ஒரு கட்டுக்குள் தாள லயத்தோடு எழுதப்படுபவை.
ஜப்பானிய ஹைக்கூவும் மரபுசார் கவிதையே. ஆனாலும் இங்கு ஜப்பானிய மரபுகள் பலவற்றை நாம் உதறித் தள்ளிவிட்டு ஒருசில முக்கிய பண்புகளை மட்டுமே கணக்கில் கொண்டு ஹைக்கூவை எழுதுகிறோம்.
அவ்வாறு எழுதப்படும் கவிதைகளை பொதுவில் மற்றவர்களுக்கு வாசித்துக் காட்டும் போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் சிலவுண்டு.
எடுத்துக் காட்டாக…
உடைந்த வளையல் துண்டு
குளத்தில் எறிந்தேன்.
அடடே… எத்தனை வளையல்கள்.
- அறிவுமதி
(புல்லின் நுனியில் பனித்துளி. தமிழின் இரண்டாவது ஹைக்கூ நூல் இது)
இந்தக் கவிதையை ஒரு கவியரங்கிலோ அல்லது பொது வெளியில் மற்றவரிடத்தில் வாசிக்கும் போது..
உடைந்த வளையல் துண்டு
குளத்தில் எறிந்தேன்.
இவ்விரு வரிகளையும் ..நிறுத்தி நிதானமாக வாசித்து… பின் மீண்டும் அதே வரிகளை இரண்டாவது முறையாகவும் வாசித்து நிறுத்த வேண்டும். (இங்கு உடனடியாக மூன்றாவது அடியை வாசித்து விடக் கூடாது).
இப்போது வாசகன்..கேட்பவர் எனக்கூட எடுத்துக் கொள்ளலாம். உடைந்த வளையல் துண்டுகளை குளத்தில் எறிந்தால், அது மூழ்கி விடும் என சிந்திப்பார். பின் அவருக்கே ஓர் ஐயம் கூட எழலாம். ஒரு வேளை மிதக்குமோ… வளையல் நெகிழியாக இருந்தால்… இவ்வாறான சிந்தனைகள் வாசகரை அலைக்கழிக்க வாய்ப்புண்டு. அது தானே ஹைக்கூவின் ஹைலைட். பல கோணங்களை வாசகரிடத்தில் ஏற்படுத்துவதே ஹைக்கூவின் சிறப்பாகும்.
ஏனிந்த நடைமுறை எனில், ஹைக்கூ கவிஞனோடு வாசகனையும் பங்கெடுத்துக் கொள்ள வைக்கும் ஒரு கவிதை வடிவம் என்பதாலும், அவ்வாறு நிறுத்தும் பட்சத்தில் வாசகன் ஈற்றடி என்னவாக இருக்கும்…? என யோசிக்கவும் இடம் தருகிறதல்லவா… இதுவே இதற்கான காரணமாகும்.
இப்போது சற்று நேரத்திற்குப் பின்..
ஈற்றடியான…
அடடே… எத்தனை வளையல்கள்.!
என ஈற்றடியை நிறைவு செய்யும் போது, ஆஹா… என்னவொரு உண்மையான வெளிப்பாடு. குளத்தில் எறியப்படும் ஒரு வளையல் பல வளையல்களாக பிறப்பெடுத்து விட்டதே என உற்சாகம் கொள்ள வைக்கும்.
ஆகவே நண்பர்களே… ஹைக்கூவை வாசிக்கும் போது இந்த நடைமுறையைக் கையாளத் தவறாதீர்கள்.