தொடர் – 37
லிமரைக்கூ..
ஜப்பானிய கவிதை வடிவமான ஹைக்கூ 5 – 7 – 5 என்ற அசையின் படி எழுதப்படுவது..
ஆங்கில கவிஞர்களால் எழுதப்படும் லிமரிக் எனும் குறும்பா 5 அடிகளில் எழுதப்படும் ஒரு கவிதை வடிவம்.
இவ்விரண்டையும் இணைத்து ஏன் ஒரு கவிதை வடிவம் கொடுக்க கூடாது என விரும்பிய ஆங்கிலேய கவிஞர் டெட் பாக்கர் (Ted Pauker) முதன் முதலில் இந்த லிமரைக்கூ எனும் கலப்பின குறும்பாவினை வடிவமைத்தார்.
இதனை… தமிழில் முதலில் எழுதி அறிமுகப் படுத்தியவர் கவிஞர்.ஈரோடு தமிழன்பன் அவர்கள்.
தனது சென்னிமலை கிளியோபாத்ராக்கள் எனும் நூலில் 138 பாக்களைத் தொகுத்து லிமரைக்கூ எனும் புது வடிவை தமிழுக்கு அறிமுகம் செய்தார். இது ஹைக்கூவின் இயல்புகளோடு… வேடிக்கை..வினோதம்..நகைச்சுவை சார்ந்தும் எழுதப்பட்டது.
தமிழ் லிமரைக்கூ பொதுவில் ஹைக்கூ மற்றும் சென்ரியு கலந்த ஒரு வடிவமாக… 3 – 4 – 3 என்ற வாரத்தை அமைப்பிலோ, அல்லது 2 – 3 – 2 என்ற வார்த்தை அமைப்பிலோ மூன்றடிகளில் எழுதப்பட்டது. முக்கியமாய் முதல் அடி மற்றும் இறுதி அடியை விட நடுஅடி நீளமாய் இருத்தல் வேண்டும்.
துவக்கத்தில் சந்த நயத்துடன், மோனை அமைத்தும், (பின் அதை தவிர்த்து விட்டனர்) ஈற்றசையில் முதல் மற்றும் ஈற்றடியில் இயைபு (ரைம்) வருமாறும் எழுதப் படும் வடிவமாகும்.
லிமரைக்கூவும் சிறப்பான வரவேற்பினைப் பெற்று, தமிழ் இலக்கிய உலகில் ஹைக்கூ வகைமை கவிதைகளோடு இரண்டறக் கலந்து விட்டது. இன்று பலரும் லிமரைக்கூ படைக்கவும், அதில் நூல்கள் வெளியிடவும் செய்கிறார்கள்.
நாமிங்கு சில லிமரைக்கூ கவிதைகளைக் காண்போம்..
குருக்கள் தெய்வங்கள் ஆனார்கள்
கோயில் இல்லா ஊர்களிலே தெய்வங்கள்
குடி இருக்கப் போனார்கள்..!
ஊது வத்திச் சின்னம்
கட்சி வென்று கோட்டை பிடித்தும்
நாற்றம் போகலை இன்னும்.
- ஈரோடு தமிழன்பன்
வீசும் மெல்லியக் காற்று
வயலில் ஆனந்த நடனம்
ஆடிக் களிக்கும் நாற்று.
- ந.க.துறைவன் (உப்பு பொம்மைகள்)
தமிழில் பேசிடத் தயக்கம்
தரமிகு தமிழ்மொழி தவிக்கும் சிலருக்கு
ஆங்கிலம் மீது மயக்கம்.
- மகிழ்நன் மறைக்காடு
மழலை மொழியே கரும்பு
மதியோடு நீயும் தாய்மொழிக் கல்வியை
மனதில் பதிக்க விரும்பு.
- கு.அ.தமிழ்மொழி
எண்வழிச் சாலை
விருப்பமின்றி விளைநிலம் பறித்து
நாட்டும்வழிப் பாலை.
- சோமு சக்தி
அதிவிரைவுப் பயணம் ஆபத்து
அறிந்தும் பலர் தொடர்வதால் நிகழ்கிறது
அடிக்கடி எங்கும் விபத்து.
- கார்த்திக் செல்வா
பஞ்ச காலத்தில் கொக்கும்
நீரின்றி வற்றிய குளங்களைத் துறந்து
பறந்திடும் எட்டு திக்கும்.
- முனைவர் வே.புகழேந்தி
குளத்தில் படர்ந்துள்ளது பாசி
தூய்மையின் சிறப்புணரா மனிதனுக்கு இறைவன்
நாளும் வழங்கும் ஆசி..!
- அனுராஜ்
உண்டால் கொல்லும் அரளி
ஊரெங்கும் சடுதியில் விரைந்து பரவி
உண்ணாமலேக் கொல்லும் புரளி.!
- விஜயகுமார் வேல்முருகன்
மேற்கண்ட லிமரைக்கூ பெரும்பாலும் 3 – 4 – 3 என்ற வடிவிலும், 2 – 3 – 2 என்ற வடிவிலும், திரு.ந.க.துறைவன் அவர்களின் லிமரைக்கூ 3 – 3 – 3 என்ற வடிவிலும் அமைந்திருப்பதைக் காணலாம். இவற்றில் 3 – 4 – 3 என்ற வடிவமைப்பில் அமைப்பதே சிறப்பானதாகும்.