தொடர் 08
கவிதையில் கற்பனை முற்றிலும் இருக்கக்கூடாது. உவமையோ.. உருவகப்படுத்துவதோ.. ம்ஹூம் அதுவும் ஆகாது.
வார்த்தைகளிலும் சிக்கனம் தேவை. அடிகளோ மூன்று அடி தான் இவ்வளவு கட்டுப்பாடு தந்து கவிதை எழுதுங்கள் எனில் மலைப்பாய்தான் இருக்கும். ஆனால் ஹைக்கூ கவிதைகளின் சிறப்பியல்புகளே இது தான்.
இதில் ஹைக்கூ கவிதைக்கான வடிவமைப்பு மூன்றடி என பார்த்தோம். ஆனால் ஜப்பானில் ஹைக்கூ மூன்றடியாக இருக்கும் என்பதில் உறுதியில்லை. ஏற்கனவே நாம் கண்டுள்ளோம் ஜப்பானிய எழுத்துக்கள் சித்திர எழுத்துக்கள் என்று. இதனை அவர்கள் இடமிருந்து வலமாக நம்மைப் போல் எழுதுவதும் உண்டு. கூடவே மேலிருந்து கீழும் கூட எழுதுகிறார்கள். அவர்களுக்கான ஹைக்கூ மரபு 5 / 7 / 5 அசை மரபு தான்.
அவர்கள் கடைபிடிக்கும் முக்கியமான விசயம். அசை மரபும், கிகோ எனும் பருவ கால வார்த்தையையும், கிரெஜி எனப்படும் திருப்பம் தரும் வார்த்தையையும் தான் ஹைக்கூவில் பிரதானப் படுத்துகிறார்கள். கிரெஜி எனும் திருப்பம் தரும் வார்த்தை 12 வது அசையின் முடிவில் சரியாகத் துவங்குகிறது. இதையே நாம் ஈற்றடி திருப்பம் என்கிறோம்.
மேலிருந்து கீழாக எழுதுவதனால் அடிகள் என்பது ஹைக்கூவில் ஜப்பானியக் கவிதையில் அடிபட்டுப் போகிறது. ஆனால் மேற்கத்திய கவிஞர்கள் அனைவரும் ஹைக்கூவிற்கான வரையறையாக மூன்றடியை கடைபிடிக்கிறார்கள். இதனையே ஏகமனதாக அனைவரும் ஏற்றுக் கொண்டும் ஹைக்கூவிற்கு மூன்றடி என வரையறை செய்திருக்கிறார்கள். நாமும் அதையே இங்கு கடைபிடிக்கிறோம்.
எனவே ..ஹைக்கூ என்பது, மூன்றடியில்தான் எழுதப்பட வேண்டும் என்பது முதல் விதி.
வயலும் மலையும்
பனியின் ஆளுமையில்
ஒன்றுமில்லாமல் போகிறது.
- ஜோசோ ( 1662 – 1704 ) ஜப்பானியக் கவிஞர்
இந்தக் கவிதையில் ஆளுமையில் என்ற வார்த்தை முடிந்தவுடன் கிரெஜி எனும் திருப்பம் தரும் வெட்டு வார்த்தை துவங்கிவிடுவதைக் காணலாம். அது போலவே கிகோ எனப்படும் பருவத்தைக் குறிக்கும் வார்த்தையும் இங்கிருப்பதை காணலாம். ஜப்பானிய ஹைக்கூ மரபு இது.
இடிந்த வீட்டில்
யுத்தம் முடிந்த பின்னே
காய்மரம் பூத்திருக்கிறது.
- ஷிகி. (1867 – 1902 )
கொல்லாதே
கைகளையும் கால்களையும்
தேய்த்துக் கொள்கிறது “ஈ”.
- இஸ்ஸா ( 1763 – 1827 )
ஹைக்கூ காணும் காட்சியை அப்படியே காட்சிபடுத்துவதுதான் என்பதை மேல கண்ட ஹைக்கூ தெளிவு படுத்துகிறதல்லவா? ஆம்.. கண்ணால் காணும் காட்சியை மிகைப் படுத்தாமல் அப்படியே நீங்கள் மூன்றடியில் பிரதிபலித்தால் போதுமானது.
அடுத்து ஹைக்கூவில்..வார்த்தைகளின் வலிமை.
1 Comment
Viji Senthil · செப்டம்பர் 26, 2024 at 10 h 11 min
‘ஈ’ சிந்திக்குமா? அது கற்பனை தானே?