04
ஒரு சின்ன விதைக்குள் தான் மிகப் பெரிய விருட்சம் ஒளிந்திருக்கிறது. அது போல தான் ஹைக்கூ..
தனக்குள் பல கோணங்களையும் வாசிக்கக் கூடிய ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சிந்தனைகளையும் ஏற்படுத்தவல்லது.
ஜப்பானில் எடோ மரபு காலத்தில் துவங்கி… டோக்கியோ மரபு காலத்தில் பெரும் புகழடையத் துவங்கிய ஹைக்கூ..
ஜப்பானில் இன்று வரை 5, 7,5 என்ற அசை கட்டுப்பாட்டில் எழுதப்படும் மரபுக் கவிதையாகும்.
ஜப்பான் எழுத்துக்கள் சீனப் பாரம்பரிய எழுத்தான மாண்டரின் வகை எழுத்தாக இருப்பினும்.. அதிலிருந்து மாறுபட்டதே.
ஜப்பான் எழுத்துக்கள் சித்திர எழுத்துக்களாகும். அங்கு ஒவ்வொரு எழுத்தும் ஒரு அசையென கொள்ளப்படும். அதனை ஓஞ்சி (Onjii) என்கிறார்கள். அசை என்பது ஆங்கிலத்தில் சிலபிள் ( Syllable ) என அழைக்கப்படுகிறது. ஜப்பானிய ஒரு எழுத்தானது ( ஓஞ்சி ) தமிழ் மரபுக் கவிதையில் நாம் கையாளும் நேரசைக்கு சமமாகும்.
நேரசை உங்களுக்குத் தெரியும். குறில் மற்றும் குறிலுடன் ஒற்று இணைந்து அல்லது நெடில் மற்றும் நெடிலுடன் ஒற்று இணைந்தது இல்லையா. ஜப்பானிய மரபும் இந்த ஒரு விசயத்தில் தமிழ் மரபோடு ஒத்துப் போகிறது. தனி ஒரு எழுத்தை நேரசை என நாம் வழங்குவதே அங்கு ஒவ்வொரு ஓஞ்சியும் அது போக சொல் வடிவில்
ஹிரஹானா.. ஹதஹானா.. ரோமாஜி
என்ற வார்த்தை வடிவமும் ஜப்பானில் புழக்கத்தில் உண்டு.
ஓஞ்சியில் சொல்லமுடியாத விசயங்களை ஹிரஹானா என்ற வார்த்தை கொண்டு ஈடு செய்கிறார்கள்.
அதே போல வெளிநாட்டு வார்த்தைகளுக்கு இணையான ஜப்பான் சொல் இல்லாத போது அதற்கு ஈடான வார்த்தையாக உருவானது தான் ஹதஹானா. அது போல ஜப்பானிய மொழி பேச மட்டுமே தெரிந்த, ஆனால் ஜப்பானிய மொழியினை எழுதப்படிக்கத் தெரியாத ஒரு வெளிநாட்டவர் ஜப்பானிய மொழியை திரித்து எழுதும் முறை ரோமாஜி என அழைக்கப் பட்டது. இது போன்ற பல எழுத்து வடிவ முறைகளும் கையாளப்பட்டதனால் பிரெஞ்ச், அமெரிக்க ஆங்கிலேயர்களிடத்தில் ஹைக்கூ மிக எளிதில் சென்றடைந்து விட்டதெனலாம்.
ஆனால்.. நமது இந்திய நாட்டில் பல்வேறு மொழிகளில் ஹைக்கூ எழுதப்பட்டு கொண்டிருந்தாலும்..தமிழ் ஹைக்கூ வே பிரசித்தமாய் உள்ளது. கவிஞர்களும் அதிகம். வெளியான நூல்களும் அதிகம்.
நம்மில் துவக்க காலத்தில் இந்த அசை வடிவமைப்பிற்கு முக்கியத்துவம் தந்தோம். ஆனால் நாளடைவில் அதை புறந்தள்ளி விட்டோம். இன்றளவிலும் நாம் ஜப்பானிய நேரடி மொழிபெயர்ப்பு ஹைக்கூவையும், ஆங்கிலேய ஹைக்கூ மொழிப்பெயர்ப்பையும் ஒருசேர கவனத்தில் இருத்தி குழப்பிக் கொண்டிருப்பதனால் நமக்கு ஹைக்கூவில் அடிக்கடி பலவித சந்தேகங்களும் விமர்சனங்களும் எழுந்து விடுகிறது..
அசைக் கட்டுப்பாடு தேவையில்லை இருப்பினும், வார்த்தைக் கட்டுப்பாடு ஹைக்கூவில் இருத்தல் அவசியம்.
ஜப்பான் நாடு மலைகள் சூழ்ந்த நாடு. அங்கு வாழ்ந்த புத்தமத ஜென் துறவிகள் தங்களது ஹைக்கூவை பெரும்பாலும் இயற்கை சார்ந்தே படைத்தார்கள். அது மட்டுமல்லாது அவர்கள் எழுதிய ஒவ்வொரு ஹைக்கூவிலும் பருவகாலமும், இயற்கையும் இடம்பெற்று விடும். வசந்தகாலத்தில் மலரும் சக்குரா மலரையும் (செர்ரி).. கோடை காலத்தில் கொண்டாடப்படும் மூதாதையர் விழாவையும், கார்காலத்தை வரவேற்கும் தவளையையும் தொட்டே நகர்ந்தது அவர்களின் ஹைக்கூ. ஆனால் பருவங்கள் தவறும் இந்தியா போன்ற பெரு நாடுகளில் இது சாத்தியமா என புரியவில்லை. அதுமட்டுமின்றி இங்கு பல மொழி, பல இனம், பல பண்பாடு, பல கலாச்சாரம்… ஆகையால் தான் நாம் நமது பண்பாடு, மனிதநேயம், கலாச்சாரம், நடைமுறை… இயற்கையை பாடுபொருளாகக் கொண்டு ஹைக்கூவைப் படைக்கின்றோம்.
சரி… அந்த ஹைக்கூவை எழுதுவதற்குத் தேவையான பண்புகளாக நாம் கையாள்வதை அடுத்த பகுதியில் தெரியப்படுத்துகிறேன். அதுவரை…
A hill without a name
Veiled in morning mist
Spring.
பெயரில்லா மலையொன்றை
அதிகாலைப் பனிமூடும்
வசந்த காலம்.
First day of Spring
I keep thinking about
the end of autumn.
வசந்தம் முதல் நாள்
என் நினைவுகளில் இன்னும்
இலையுதிர்காலம் முடியவில்லை.
Matsuo Basho_ மட்சுவோ பாஷோ (1644 – 1694 )
என்ற இரண்டு ஹைக்கூவையும் கவனியுங்கள். இயற்கையும், பருவ காலமும் இணைந்த இதனை அசை போட்டுக் கொண்டிருங்கள்.
1 Comment
Viji Senthil · செப்டம்பர் 26, 2024 at 9 h 47 min
முடியாத இலையுதிர்காலம் தேவலாம்…. வசந்தத்தின் முதல் நாள், ஆச்சர்யம்!
Comments are closed.